அடுத்த நிமிடம் விசித்திரமானது
அதனால்
இந்த நிமிடங்களை
நான் எப்போதும் தவறவிடுவதில்லை
சேர்த்து வைக்கும்
சின்னச் சின்ன
சந்தோஷங்கள் தான்
கடினமான
வாழ்க்கைத் தருணங்களில்
விரல் பிடித்து கூட வருகிறது
நினைவுகளை
அப்படிச் சேகரிக்கும்
இந்த இரவில்
இருள்
உற்று உற்றுப் பார்க்கிறது
அவற்றை அபகரிக்கப் பார்க்கிறது
விழிகளில் இருளை நிரப்பி
தூக்கம் கொடுக்கிறது
மொத்த நினைவுகளையும்
குழந்தை கொடுக்க மறுக்கும்
பொம்மையைப் போல்
கட்டி அணைத்துக் கொண்டு இருக்கிறேன்
இரவும் விடுவதாக இல்லை
விழித்துக் கொண்டே இருக்கிறது...
இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நினைத்து
நீ
சிரித்து இருக்கலாம்
முறைத்து இருக்கலாம்
உதாசீனப் படுத்தியும் இருக்கலாம்...
ஆனால் எதுவாக இருந்தாலும்
உனக்கு நன்றி சொல்வேன்
என்னைப் பைத்தியம் ஆக்கியதற்கு
எல்லாத் துன்பங்களில் இருந்தும்
விடுவிப்பது இரண்டு
ஒன்று செத்து
மற்றொன்று பித்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக