ஞாயிறு, 31 டிசம்பர், 2023


கோமாளிகளின் பலூன்கள்
தன்னைக் காட்டிலும்
பிறருக்காகவே படாதபாடுபடும்...

வானில் தத்தித் தத்திக் குதிக்கும்
தண்ணீரில் நடக்கும்
தரையில் பறக்கும்
வெடிக்கும் போதும் சிரிக்கும்...

இருக்கும்வரை கொண்டாடப்படும்
இல்லையென்றால் மறக்கப்படும்
கோமாளிகள் போல்தான்
கோமாளிகளின் பலூன்களும்...

இந்த 2024
எனது 44வது பலூன்
பிறர் சிரிக்கத்
தயாராகிறோம்
நானும் பலூனும்...


சனி, 30 டிசம்பர், 2023

வெள்ளி, 29 டிசம்பர், 2023


"முத்து விஜய்"
(27/6/1983 - 29/12/2023)

இந்தப் பயணத்தில்
இத்தனை வேகத்தில்
வாழ்வின் இறுதி தொட்டு
அனைவரையும் ஆழ்த்திவிட்டாய்
சோகத்தில்...

பட்டாம்பூச்சியைப் போல்
பாரங்கள் விரும்பாதவன்
பாடித் திரிந்தவாறே
வானம் சென்றுவிட்டான்...

அவன் ஆன்மா சாந்தி அடைய
இயற்கையை வேண்டுகிறோம்
தாடண்டர்நகர் நண்பர்கள்


வியாழன், 28 டிசம்பர், 2023


விஜயகாந்த் எனும் விஜயராஜ் அழகர்சாமி

தனக்காகத் துடிக்கும் இதயம்
எல்லோரிடமும் உண்டு
பிறருக்காக துடிக்கும் இதயம்
உன்னிடத்தில் கொண்டு
பசித்தவர்களுக்கு விருந்தளித் தாய்
நீ வள்ளல்களில் ஒன்று

நாக்கை மடித்துப் பேசினாலும்
நாட்டைக் காக்கவே சொற்கள் வீசுவாய்
அருவாக் கத்தி, சம்மட்டிச் சுத்தி
கைப்பிடிச்ச ஆளு, குழந்தை மனசுக்காரு
கேப்டன் செல்லப் பேரு
உன் சிரிப்பு வெள்ளைச் சோறு...

இதயம் துடிக்காமல் படுத்திருக்கிறாய்
இதயம் துடிதுடிக்க விட்டுச்செல்கிறாய்
கடைசி வரையில் தந்து மகிழ்ந்தாய்
தன்னிறைவடைந்தாய்
இயற்கைத் தாழ்  சரண் புகுந்தாய்
இனி கருணை மழையாய் பொழிவாய்
என்றும் பசுமையாய் மனதில் நிறைவாய்...


புதன், 27 டிசம்பர், 2023


பசிக்கு உழைக்கும்
வர்க்கத்தின் பசிக்கு
ஈவு இரக்கம் கிடையாது...



செவ்வாய், 26 டிசம்பர், 2023


பகிர்ந்து கொடுக்கும்
கரங்களில் இருக்கும் எல்லாமும்
ரொட்டித் துண்டாகவே தெரிகிறது...


திங்கள், 25 டிசம்பர், 2023


ஒன்று இரண்டாகும்
இரண்டு நான்காகும்
அந்த ஒன்று பலவாகும்
ரொட்டித் துண்டினை
கடவுள் தொலைத்துவிட்டான்...


ஞாயிறு, 24 டிசம்பர், 2023


கடவுள்
குழந்தையாக நாளும் பிறக்கிறார்கள்
அவர்கள் வளர வளர
பெற்றோர்களே யூதாஸாக
முத்தம் கொடுக்கிறார்கள்...


சனி, 23 டிசம்பர், 2023


சிலுவையில் அறைந்த
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தால்
மீண்டும் சிலுவையில் அறைகிறது வாழ்க்கை...

உயிர்த்தெழுந்து
உயிர்த்தெழுந்து
வாழ்வதெல்லாமும்
ஓர் நாள்
உயிர்த்தெழாமல் போகத்தான்...


வெள்ளி, 22 டிசம்பர், 2023


இது என்னுடைய உலகம்
இது உன்னுடைய உலகம்
மனிதரைத் தவிர எவையும்
இப்படிச் சொல்வதில்லை
இடத்தைப்
பத்திரப்பதிவு செய்வதில்லை
கூடு
ஒன்றுக்கு மேல் தேவையில்லை
கூட்டில்
உடலைத் தாண்டிய அறைகளில்லை
அனைவரின் உலகம்
அனைவரும் உலகம்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு அங்கம்
அங்கும் இங்கும்
எங்கும் தெரிவதெல்லாம்
தெரியாததெல்லாம்
ஓர் உடல்
ஒன்றே தெய்வம்...


வியாழன், 21 டிசம்பர், 2023


ஊர்ந்தாலும் நடந்தாலும்
மிதந்தாலும் பறந்தாலும்
நீந்தினாலும் தாவினாலும்
நகர்வது உடல்
நகர்த்துவது உயிர்
இணைப்பது எதுவோ
பிரிப்பதும் அதுவோ
இணைந்து இணைந்து
பிரிந்து பிரிந்து
இருப்பதெல்லாம் ஓர் கனவோ
நீள் கனவின் நிஜம் உளதோ...
கனவே நிஜமோ?


புதன், 20 டிசம்பர், 2023



வெயில் பிடிக்கும் வேளையில்
வெயில் இல்லை
மழை பிடிக்கும் வேளையில்
மழை இல்லை
அனல் பிடிக்கும் வேளையில்
அனல் இல்லை
குளிர் பிடிக்கும் வேளையில்
குளிர் இல்லை
இயற்கை இப்படித்தான்
உனைப் பிடிக்கும் வேளையில்
நீ இல்லை
ஆமாம்
இயற்கை இப்படித்தான்...


செவ்வாய், 19 டிசம்பர், 2023


இலைகள் வேரையும்
வேர்கள் இலையையும்
நம்பி இருக்கும்

இலைகள் சமைக்கும்
வேர்கள் சம்பாதிக்கும்
கடவுள் துணை இருக்கும்

பட்டுப் போகும் வரை
விட்டுப் போகாது
பல உறவு

விட்டுப் போகும் வரை
பட்டுப் போகாது
சில உறவு


ஞாயிறு, 17 டிசம்பர், 2023


காட்டின் கண்களில்
பறவை உண்டு
பறவை கண்களில்
காடு உண்டு

கொடுத்துப் பெறுவதில்
தழைத்து வளர்கிறது
காடு

அழித்துப் பறிப்பதில்
கொழுத்து வளர்கிறது
நாடு

நாம் படித்துப் படித்து அழிக்கிறோம்
பறவைப் பறந்துப் பறந்து வளர்க்கிறது
காடு...

காட்டின் கண்களில்
பறவை உண்டு
பறவை கண்களில்
காடு உண்டு

மனிதன் கண்களில்
இயற்கை இல்லை
இயற்கை கண்களில்
மனிதன் இல்லை

கண்கள் இல்லாத உலகம்
வளர்ந்து வருகிறது
இதயம் இல்லாத மனிதன்
அதில் பிழைத்து வருகிறான்...


சனி, 16 டிசம்பர், 2023


யாரும் கற்றுக்கொடுக்காமலேயே
சமநிலையில் இருப்பதற்குச் சிறுவர்கள்
சீசாவில் சமத்துவம் படிக்கிறார்கள்...

வெள்ளி, 15 டிசம்பர், 2023


துள்ளாத மீனுக்கு
ஆயிரம் துன்பம்
மூழ்கிப் பார்
மூச்சு நின்றுவிடும்...


வியாழன், 14 டிசம்பர், 2023

புதன், 13 டிசம்பர், 2023

 


எடையை உணரும் தருணத்தில்
சிறகுகள் காணமல் போகிறது...

திங்கள், 11 டிசம்பர், 2023



காயங்கள் தான்
கலையாகும்...
கனவுகளின் மீது
செயல் படும்போது
கற்களின் மீது
உளி படும்போது
காயங்கள் தான்
கலையாகும்...



ஞாயிறு, 10 டிசம்பர், 2023

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி


நண்பன் பாரதி
கம்பன் பாரதி
நல்லக் கவிதையெல்லாம் பாரதி...

புதுவை புயலில் இறந்த
பறவைகளைத் தன் கைகளால்
அடக்கம் செய்தவன் பாரதி...

தன்னை மறந்தவன் பாரதி
தரணியின் கண்கள்  பாரதி
உலகை உடலாக உணர்ந்தவன் பாரதி...

தீக்குள் விரலை வைத்து
சுடும் சுடரை
பாட்டில் வைத்தவன் பாரதி...

சிட்டுக்குருவிகளுக்கு
தன் உணவளித்து
பட்டினி கிடப்பான் பாரதி...

மீசை பாரதி
தலைப்பாகை பாரதி
கனல்பார்வை பாரதி


சனி, 9 டிசம்பர், 2023


பஞ்சப் பாட்டுப் பாடிக் கேட்காதே
தட்டிக் கொண்டே நிற்காதே
எட்டி உதை கதவு திறக்கும்...


வெள்ளி, 1 டிசம்பர், 2023


கிழிந்து தொங்கும்
சில்க் சினிமா பட போஸ்டர் முன்
எச்சில் வழிய நின்று கொண்டிருந்தது
ஒரு எருமை மாடு...
மாறுவேடம் போட்டு வந்த
அந்த மன்மதனுக்கு
ஒரு கட்டிக் கரும்பைக் கொடுத்தேன்
அதையும் தாண்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்
அதனினும் இனிய ஒன்றை!


வியாழன், 30 நவம்பர், 2023


எப்போதும்
என்னுடன் இருப்பதாகச் சொல்லி
பிரிந்து சென்றாய்...
ஒருவகையில்
நீ சொன்னது உண்மை தான்...


செவ்வாய், 28 நவம்பர், 2023


தரையில் இருந்து பார்த்தேன்
கூரை பெரிதாகத் தெரிந்தது
கூரையில் ஏறிப் பார்த்தேன்
நிலவு பெரிதாகத் தெரிந்தது
நிலவில் ஏறிப் பார்த்தேன்
பூமி பெரிதாகத் தெரிந்தது...
கண் விழித்துப் பார்த்தேன்
எல்லாம் சிறிதாகத் தெரிகிறது


திங்கள், 27 நவம்பர், 2023


ஏதேதோ முயற்சி செய்கிறோம்
ஏதுமில்லாமல் போவதற்கு...


ஞாயிறு, 26 நவம்பர், 2023


முதல் துளியில் கரைந்துவிட்டால்
நாமும் மழைநீர் தான்
சிறு ஓடை காத்திருக்கும்
சிறு புல்கள் ஆர்பரிக்கும்
மலர்கள் இதழில் ஊற அனுமதிக்கும்
குளங்கள் வரவேற்று குதுகலிக்கும்
மீன்கள் துள்ளி விளையாடும்
தவளைகள் கோரஸ் இசை பாடும்
இருபது விரல்கள் இணை சேரும்
ஈருடல்  ஓருடலாய் உருமாறும்
கொட்டித் தீர்க்கும் வரை மழை
கோடானுகோடி கதைகள் பேசும்
நின்றுவிட்ட மழை
நீ நீங்கிப் போனதுபோல் இருக்கும்
விழி துளியை தூது அனுப்பும்
முதல் துளிக்குக் காத்து நிற்கும்
முதல் துளியில் கரைந்துவிட்டால்
நாமும் மழைநீர் தான்...


வெள்ளி, 24 நவம்பர், 2023



காக்கை
தூக்கிச் சென்றதாய்
குழந்தையில் கேட்ட
ஒன்றைக் கூட
இதுவரையில்
எந்த காக்கையிடமும்
கண்டதில்லை...
அப்படி எடுத்துச் சென்ற காக்கைகள்
உலகம் விட்டு பறந்து சென்றிருக்கலாம்
நிலவில் வடை சுடும் பாட்டி
அதனை கூலியாக வாங்கி இருக்கலாம்...
அன்னை சுட்டுக் கொடுத்த வடையில்
எல்லாமும் மறந்து போனதா?
வடைக்கு கூலியாய்
காக்கை கொண்டு போனதா?
அன்னையின் கை பக்குவமுள்ள
வடைக்குக் கூலி தர
எதையும் கலவாடலாம்
உலகம் தாண்டியும் போகலாம்...


வியாழன், 23 நவம்பர், 2023


தந்தையைத் தொடர்தல்
தவறின் நீட்சி...
சின்னச் சின்னத் தவறுகளைத் தான்
உலகம் தாங்கும்

உச்சம் மீறும் போது
சரி கூட சரியில்லை தான்
சரியான சரியில்
உயர்வு தாழ்வு இல்லை

பெரும் மௌனம்
மரணம்
சிறு மௌனம்
உயிர்ப்பு...


செவ்வாய், 21 நவம்பர், 2023


கனவில் கண்ணாடியே இல்லை
கனவே கண்ணாடி...
கண்ணை மூடிக் காணும் கண்ணாடியிலும்
என்னைத் தொட முடியவில்லை...
உன்னைத் தொட முடிகிறது
தொட்டால் சுக்கு நூறாய் உடைகிறது...


திங்கள், 20 நவம்பர், 2023


உண்மையாய் இருப்பதெல்லாம்
அழகான பொய்தான்...


ஞாயிறு, 19 நவம்பர், 2023


குழந்தைக்குள் ஒரு பெரியவரும்
பெரியவருக்குள் ஒரு குழந்தையும்
மேலும் கீழும் சீசா ஆடும்...


சனி, 18 நவம்பர், 2023


கோபம் என்றாலும்
அன்பான கரங்கள்
அன்னம் இடும்
பிறகுதான் சண்டையிடும்...

வெள்ளி, 17 நவம்பர், 2023


பேருந்தில் பயணிக்கும்
அதே வேளையில்
ஒரு பூங்காவிலும்
நின்று கொண்டிருக்கிறேன்
நீ
திரும்பிப் பார்க்காமல்
தொலைவில் சென்று
மெல்ல மெல்லத் தேய்ந்து
முற்றும் மறைந்து
அந்தப் பகலில்
ஒரு அமாவாசையை
விட்டுச் சென்றாய்...
பேருந்தில் விளக்குகள் போட்டு
இறங்குமிடம் வந்துவிட்டதாக
நடத்துனர் கூப்பிட்டார்...
இப்போது பூங்காவில்
இருளில் நின்றுகொண்டிருக்கும்
அதே வேளையில்
ஒரு பேருந்திலிருந்து
இறங்கிக்கொண்டும் இருக்கிறேன்...


வியாழன், 16 நவம்பர், 2023


உத்தமனாய் நடித்து அசத்தியதர்க்கு
உன் விரல்களைப் பரிசாக
என் கரங்களில் சேர்த்தார் கடவுள்
கைநழுவிப் போனது நடிப்பு...


புதன், 15 நவம்பர், 2023


ஆண்கள் பார்க்கும் கண்ணாடியில்
தெரிவதெல்லாம் பெண்கள்
அதுவும் வெறும் கண்கள்...


செவ்வாய், 14 நவம்பர், 2023


உள் உலகமும்
வெளி உலகமும்
கலந்து நிற்கும்
கண்ணாடிக்கும் தெரியாது
உனை ரகசியமாய்
நான் பார்ப்பது...

சந்தேகமென்றால் வந்து பார்
உனை புதிதாகவே பார்க்கும்
என் வீட்டுக் கண்ணாடி...


திங்கள், 13 நவம்பர், 2023


மரங்களின் காதுகளை தேடிக் கொண்டிருக்கிறேன்
தெரிந்தால் சொல்லுங்கள்
உயரத்தில் கூடி
ரகசியம் பேசும்...

சிலுசிலுவென சில வார்த்தைகள்
காதலாகத்தான் இருக்கும்
சலசலவென சில வார்த்தைகள்
ஊடலாகத்தான் இருக்கும்

மரங்களின் நிழலில் நிற்கையில்
சில வார்த்தைகள்
நீ பேசியதா?
மரம் பேசியதா?
நெஞ்சம் குளிரும்
இன்பம் துளிரும்

யாரும் பேசாத நேரங்களில்
நானும் மரமாகிறேன்
எனது காதுகளைத் தேடுகிறேன்
தெரிந்தால் சொல்லுங்கள்...


சனி, 11 நவம்பர், 2023

 


பிறருக்காக துடிக்கும் இதயம்
பிறருக்காக சிந்தும் கண்ணீர்
பிறர் பொருட்டே இந்த வாழ்க்கை
என வாழ்பவர் யாவரும்
வாழ்வாங்கு வாழட்டும்...

இனிய தீபாவளி வாழ்த்துகள்


வியாழன், 9 நவம்பர், 2023


வெறும் உறுப்பல்ல இதயம்
தொடர் துடிப்பல்ல இதயம்
தொடாமல் தொடும் இதயம்...


புதன், 8 நவம்பர், 2023


போகும்போது வரும்போது பார்ப்பவைதான்
எந்தச் சிரத்தையுமின்றி அடைபவைதான்
சொர்க்கம்...

ஒப்பிலாதது
யாவர்க்கும் பொதுவானது
பாவம் செய்பவர்களுக்கு வாய்க்காதது...


திங்கள், 6 நவம்பர், 2023


எட்டி இருக்கும் வரைதான்
தீயின் கருணை
கட்டியணைப்பவரை சுட்டெரிக்கும்...

தீயும்
நீயும்
ஒன்று...

ஞாயிறு, 5 நவம்பர், 2023



வானம் பார்க்கக் கற்றுக்கொண்டால் போதும்
மேகம்
நிறைய நிறையக் கற்றுக்கொடுக்கும்...

ஒன்றாய்க் கூடும் மேகம்
ஒன்றுமில்லாமல் போகும்
மனதை எழுதும் பள்ளிக்கூடம்...

இரவு மேடையில்
எண்ணிலா நட்சத்திரங்கள்
ஊமை நாடகம் உண்மை பேசிடும்...

வானம் பார்க்கக் கற்றுக்கொண்டால் போதும்
கனவு சிறகாகும்
உச்சம் உறவாகும்... 

சனி, 4 நவம்பர், 2023


மறக்க முடியாமல்
தவிக்கும் நினைவுகள்
வரமா? சாபமா?...

சில துளிகள் முடிவில்
சிறு புன்னகை பூப்பது
துன்பமா? இன்பமா?...


வெள்ளி, 3 நவம்பர், 2023

 


ஓ நாய் கூட
விளங்கியதும் தான்
வீட்டு நாய் ஆனதோ...
விளங்காத மனிதன் நான்
கண்ணாடியில் விலங்கானேன்...
அழகான ஒருத்தி
அரிதாரம்  கூட்டி
தேவதை ஆகிறாள்...
அவள் நிச்சயம்
அவளை அறிந்திருப்பாள்...


புதன், 1 நவம்பர், 2023


காற்றில் ஆடும் நாணலில்
நானும் ஆடுவேன்
காலை நேரப் பனியைப்போல்
புல்லில் தூங்குவேன்
எங்கும் பாயும் ஒளியென
கனவில் நுழைகிறேன்
எல்லையற்றத் தூய வெளியில்
தன்னை மறைக்கிறேன்
ஏதுமற்ற இரவரைப் போல
இருந்துப் பார்க்கிறேன்
இரையை வீசி என்னை
இறைவி வேட்டையாடினாள்...


செவ்வாய், 31 அக்டோபர், 2023



பாறை
மென்மையாக மௌனமாக
பூவைப் போலவே இருக்கிறது...

உதிர்ந்து விழுந்தாலும்
மலர்ந்தே இருக்கிறது
கண் அயர்வதும் இல்லை...

எத்தனைக் குளிர் உள்ளிருந்தால்
அத்தனை வெயிலையும் விழுங்கும்
யார் தந்ததோ அந்த முத்தம்...


திங்கள், 30 அக்டோபர், 2023


எம்ஜிஆர் சிவாஜி போல்
இருக்க முயன்றவரெல்லாம்
தன் பிள்ளை தனைப் போல்
இருக்க நினைத்தார்

ரஜினி கமல் போல்
இருக்க முயன்றவரெல்லாம்
தன் பிள்ளை தனைப் போல்
இருந்திட நினைக்கிறோம்

விஜய் அஜித் போல்
இருக்க முயலும் அவனும்
தன் பிள்ளை தனைப் போல்
இருக்கவே நினைப்பான்

அப்பனுக்குத் தப்பாமல்
பிறந்த எனைப் போல
எனக்குத் தப்பாமல்
பிறந்த மகன் போல
அவனவனுக்கு  அவன்
பிறக்கின்றான் அவனியிலே...


ஞாயிறு, 29 அக்டோபர், 2023


உண்மைக்கு
மொழி தேவையில்லை
மொழியின்றி பொய்யில்லை...


சனி, 28 அக்டோபர், 2023


புழு பூச்சிக்கும் வஞ்சகம் செய்ததில்லை
என்று சொன்ன நாளில்
வீட்டில் கோழிக் குழம்பு...


வெள்ளி, 27 அக்டோபர், 2023


நிசப்தம் கலையாமல்
நடக்கத் தெரிந்தது பூனை
சமயத்தில் தோன்றும்
மௌனம் கடந்து போவதாக...
மௌனம் பேசும் ஒற்றை வார்த்தை
மியாவ்...