வெள்ளி, 31 மே, 2024


பூனையின் தியானம் எல்லாம்
திருடிக் குடிக்கும் பாலுக்கும்
ஒரு துண்டு மீனுக்கும்...


வியாழன், 30 மே, 2024


குளிர்சாதனங்கள் அமைத்து
காமிராக்களில் தொகுத்து
பாதுகாப்பு வளையம் வகுத்து
பாறையிலே அமர்ந்து
தியானம் என்கிறான்
இந்த நரேந்திரன்
அந்தோ பரிதாபம்
என்ன பாவம் செய்தார்
அந்த நரேந்திரர்...


புதன், 29 மே, 2024


தாய் அகத்து தியானத்தில்
சக்தி பெறாதவன்
தன் அகத்து தியானத்தில்
யுக்தி பெறாதவன்
கேதார்நாத் தியானத்தில்
முக்தி பெறாதவன்
கடைசியில்
கன்னியாகுமரி தியானத்தில்
ஆஸ்காரை வேண்டுகிறான்...



தகப்பன் முதுகில்
அடிக்கும் கத்தரி வெயிலை
முறைத்துப் பார்க்கிறது
அவன் தூக்கிச் செல்லும் குழந்தை...

பிஞ்சு தான் எனினும்
அதன் நெஞ்சு தைரியத்தால்
மேகத்தில் ஒளிந்து கொள்கிறது
கத்தரி வெயில்...

நிழல் அணைத்தபோது
குழந்தையை அணைத்து முத்தமிட்ட
தகப்பனுக்குத் தெரியும் போல
தன் குழந்தை முறைத்த வெயிலை...



செவ்வாய், 28 மே, 2024


சொன்னதையே
திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள்
அம்மா

இறைவனிடமும்
திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள்
எல்லாம் உனக்காகத்தான்

திரும்பத் திரும்பச் சொல்லுவதையே
அவள் வாழ்வாக்கிக் கொண்டாள்
திரும்பத் திரும்பக் கேட்காமல் போகும்
உனக்காகத்தான்...

திரும்பத் திரும்பச் சொல்லுகிறவளுக்காக
திரும்ப ஏதேனும் செய்
அவளின் கடவுள் நம்பிக்கையை காப்பாற்று

அவளோடு இப்போது இருப்பது
அந்தக் கடவுள் நம்பிக்கை
ஒன்றுதான்...


திங்கள், 27 மே, 2024


விரலில் இல்லை
கித்தாரிலும் இல்லை
இறைவனிடத்திலிருந்து
இறங்கி வருவதுதான்
இசை...

இசையின் இறைவனிடம்
சரணடைந்தவன்
இசை ஞானி...

மனிதனாக
அவன் இருக்கும் போது
வம்பிழுப்பவர்களே...
அவன்
ஞானியாகும் நேரத்தில்
வந்திறங்கும் இறைவனை
சற்றே கேளுங்கள்
நிச்சயம் உங்கள் மனம் மாறும்...


ஞாயிறு, 26 மே, 2024


சிறு முள்ளும்
பெரு முள்ளும்
நொடி முள்ளும்
மட்டுமல்ல
இந்த நேரத்தில்
நானும் ஒரு
முள்ளாகிப் போனேன்...

இதயத்திலிருந்து உன் பெயரை
மணிக்கு மணி உச்சரிக்கும்
பழக்கி வைத்த
ஒரு பறவையாகிப் போனேன்

மின்னூட்டம் தீரலாம்
நேரம் நின்று போகலாம்
என்றாலும்
காலத்தில் காத்திருப்பேன்
வா...


சனி, 25 மே, 2024

 


சிலை ஆக வேண்டுகிறேன்
நீ பக்கத்தில் இருக்கையில்
உயிராக இருக்க வேண்டுகிறேன்
உனை மீண்டும் காணும் வரை...

இதுவே எனக்கு
பிரார்த்தனை
தியானம்...


வெள்ளி, 24 மே, 2024


நெருங்கத் தவிப்பது காதல்
நெருங்கிவிட்டால் மோதல்
அறிந்த கோல்கள் நெருங்காமல் சுற்றிவரும்...

வியாழன், 23 மே, 2024


காலால் தொடும்போதும்
புரிதல் உண்டெனில்
அன்பு...

அப்படியொரு உறவு
அருகிருந்தால்
அவன் அவதாரம்...


புதன், 22 மே, 2024


எனக்கென்று ஒரு காடு
பேசப் பலச் சருகுகளுடன்
எப்போதும் காத்திருக்கும்...


செவ்வாய், 21 மே, 2024


தரையில் இருக்கும் வானத்தை
தலை நிமிர்ந்து பார்க்கிறது
ஆலமரத்து வவ்வால்

சில பழுத்த ஆலம் பழங்களை
அந்த ஆகாயத்திற்கு
அன்பாய் உதிர்க்கிறது

வவ்வால் ஒன்று உளதேல்
அதன்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை...


திங்கள், 20 மே, 2024


உன்னைப் பார்க்காதது போலவே
இருக்கும் பாவி நான்
நீ பார்க்காமல் போனால்
உன் பாதங்களில் வீழ்வேன்
அவ்வளவு தான் நான்
அதனால் தான் தள்ளியே நிற்கிறேன்

நீ பேசுவதை எல்லாமும்
ஒன்று விடாமல் சேகரிப்பேன்
சேகரித்த வார்த்தைகளில்
தனியாகப் பூமாலை கோர்ப்பேன்

நீ பார்க்காத போதெல்லாம்
கண்களில் உன்னைப் படம் பிடிப்பேன்
கனவினில் அவைகளைத்
தொகுத்து வைப்பேன்

உன் கண்களில்
விழ முடியும்
எழ முடியாது...

உன் கரங்களைத்
தொட முடியும்
விட முடியாது...

என்றே கற்பனைகளை வளர்த்து
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னைப் பார்க்காதது போலவே
அவ்வளவு தான் நான்...



ஞாயிறு, 19 மே, 2024


கணம் தோறும் காத்திரு
மணியல்ல
நாளல்ல
வாரமல்ல
வருடமல்ல
கணம் தோறும் காத்திரு...

நிகழும் நிகழ்வுகளைப் பார்த்திரு
நீயாக நிகழ்தாமல்
தானாக நிகழும்
கணம் தோறும் காத்திரு...

பார்த்ததும் வருமே பரவசம்
பார்த்துக்கொண்டே இரு புதிதாகவே
ஆழம் இருக்கும்வரை
புதிதும் இருக்கும்
புதிதினும் புதிது கேள்
ஆழம் அழைத்துக்கொண்டேச் செல்லும்
அதுவே பேரண்டப் பேருண்மை
கணம் தோறும் காத்திரு...

புன்னகையைப் பூக்க விடு
பறித்திடாமல் பார்த்துக்கொண்டே இரு
மலர்ந்து மலர்ந்து நட்சத்திரமாகும்
எண்ணிலாமல் பூக்கும்
முடிவிலாத முதற் கடவுளை
கண்கள் மூடிப் பார்
யாவும் ஒன்றென ஜொலிக்கும்
தூங்கும் குழந்தையாகச் சிரிக்கும்
உள்ளும் வெளியும் புன்னகைதான்
கணம் தோறும் காத்திரு...


சனி, 18 மே, 2024


காற்றே வரைந்து
காற்றே அழிக்கிறது
புகை படத்தை...


வெள்ளி, 17 மே, 2024


ஏதாவது ஒன்றன் பின்
தொடர்ந்து போகிறேன்
ஏதாவது ஒன்றைப் போல்
மாறிவிடப் பார்க்கிறேன்

நானாக நடந்தது போல்
இந்த நடையில்லை
உள்ளிருந்து முளைத்த
விதை இதுயில்லை

பறவையின் பறத்தல்
உயிருள்ள வரை
மீன் நீந்துதல்
எறும்பு ஊர்தல்
தவளையின் தாவுதல்
எல்லாமே எல்லாமே
வாழ்வின் கடைசி வரை

உள்ளிருந்து முளைக்கும் விருட்சத்தை
வேர்கள் தாங்கி நிற்கும்
உள்ளிருந்து நகர்ந்து செல்வதுதான் உயிர்ப்பு
நகர நகர வாழ்வு விரியும்...


வியாழன், 16 மே, 2024


ஒன்றன் பின் ஒன்றாக
நானும் சென்றேன்
சேர்ந்து கடைசியாக...

புற்றில் சேர்ந்தன
எறும்புகள்
வீட்டில் சேர்ந்தேன்
நான்...

கூடி வாழும்
கற்பனையில்
தனித்து வாழ்கிறேன்...


புதன், 15 மே, 2024


உடைந்துவிடும் முன்னே
உடையாமல் பார்த்திருக்க
கற்றுக் கொடுக்கிறது
ஓர் நீர்க்குமிழி...


செவ்வாய், 14 மே, 2024


வெடிப்பு விழுந்த உன் பாதங்களில்
என் கண்ணீர்த் துளிகளை ஒளித்து வைப்பது
உனக்குத் தெரியாது...


திங்கள், 13 மே, 2024


துறைமுகம் தேடும் படகு
மேலாக் கீழாக் குழம்பி நிற்கிறது
உன் முகம் நாடும் உதடு...


ஞாயிறு, 12 மே, 2024


தாகம் தீராத கூழாங்கல்
நீரில் மூழ்கியது
கனவில்...

காற்றில் தேடிய ஈரத்துடன்
உச்சி வெயிலில்
உறவில்...

உள்ளங்கைகளில்
உதடுகளில்
உணர்ந்ததுண்டு
வேர்களில் பாயும்
குளிரில்...

ஆம்
இப்படித்தான் இப்படித்தான்
இதயக் கூழாங்கல்
உயிர்த்து இருக்கிறது
நினைவில்...


சனி, 11 மே, 2024


முத்துப் பல்லை மூடி வைத்த
மெல்லச் சிவந்த மென் உதட்டை
கண்கள் மூடிச் சுவைத்தேன்
தேன் தீர்ந்திடாத
அந்த மாதுளையில்....


வெள்ளி, 10 மே, 2024


பறவை இல்லாத வானம்
பறந்து கொண்டு இருக்கிறது...


வியாழன், 9 மே, 2024


பெயர்கள் இல்லாத
பொருட்களே இல்லை
மனிதரும் கூட...


புதன், 8 மே, 2024


மலர்ந்துகொண்டே
உதிர்ந்துகொண்டே
இருக்கிறது மின்சாரப் பூக்கள்...

மலர்ந்துகொண்டே
உதிர்ந்துகொண்டே
இருக்கிறது நிகழ்காலப் பூக்கள்...

மலர்ந்துகொண்டே
உதிர்ந்துகொண்டே
இருக்கிறது நினைவுப் பூக்கள்...

மலர்ந்துகொண்டே
உதிர்ந்துகொண்டே
இருக்கிறது உயிர்ப் பூக்கள்...

மலர்ந்துகொண்டே
உதிர்ந்துகொண்டே
இருக்கிறது அத்தனையும் பூக்கள்...


செவ்வாய், 7 மே, 2024


சுவர்க்கமாக மாறிக்கொண்டு இருக்கும்
பூங்காவின் இருக்கையில்
பூனை புரண்டு புரண்டு படுக்கிறது

சுவக்கத்தில் நான் நுழைய
பூனை எகிறி குதித்து ஓடியது
நரகமாக மாறத் தொடங்கியது சுவர்க்கம்...


திங்கள், 6 மே, 2024


பழக்கப்படுத்தப்பட்ட குதிரை
கட்டளைகளுக்குச் செவி கொடுக்கிறது
அகத்திலும் காட்டை காலி செய்து
நகரத்தை மெல்ல மெல்லக்  குடியேற்றுகிறது

மரங்களைக் கண்டால்
மிரட்சியடையும் குதிரைகள்
பாதி மனிதராய் மாறிவிட்டது

மீதி மாறுவதற்குள்
காடு ஒரு குதிரை தேவதையை அனுப்பி
அதன் மனதை மாற்றிட வேண்டும்

காடு
காதல்
சுதந்திரம்

நாடு
நாம்
இயந்திரம்


ஞாயிறு, 5 மே, 2024


பொருட்களை தொலைத்து விட்டு
குழந்தை அழும்
நீ பார்த்தால்
அல்லது
நீ பார்க்க...

கண்டும் காணாது போனால்
குழந்தை விளையாடும்
அழுகை இசை பாடும்...


வெள்ளி, 3 மே, 2024


ராஜநாயஹம் தாத்தாவின்
முதுமை மொத்தத்தையும்
ரகசியமாக மறைத்துவிட்டு
ஏதும் அறியாதவளைப் போல
எங்கோ பார்க்கிறாள் பூக்குட்டி

தான் குழந்தை ஆனது தெரியாமல்
மகனின் மகள் பூக்குட்டி அறியாமல்
ரகசியமாக செல்ஃபி எடுக்கும்
செல்லத் தாத்தா

எங்கோ பார்ப்பதைப் போல
நம்மைப் பார்ப்பதுவும்
விளையாட மறுப்பதைப் போல
நம்முடன் விளையாடுவதுவும்
குழந்தைக்கு உரித்தான குறும்பு

தாத்தாவின் முகத்திலும்
மெல்லத் துளிர்க்கிறது
அந்த அரும்பு...


வியாழன், 2 மே, 2024


புரிந்துகொள்ள முடியாத போதுதான்
புரிந்தது
உண்மை என்று...


புதன், 1 மே, 2024


தினமும் வீட்டின் எதிரில்
மரக்கிளையில் வந்தமரும்
அந்த சிறிய பறவைக்குத் தெரியும் போல
என் இதயத்தில்
அதற்கான இடம் இருப்பது...