சனி, 22 ஜனவரி, 2022

 


திரும்பத் திரும்ப
படித்துப் பார்க்கிறேன்
அப்பாவை...

எனக்காக ஏனோ
வீணே யோசித்துத்
தவங்கிடந்தவர்...

அவர்
தவம் கலைத்த
வீணனும் நானே...

தவம் கலைத்த
எனக்கே நாளும்
வரம் கொடுத்தவர்...

செருப்புகள் தொலைப்பேன்
என் பாதங்களுக்காக
வறுத்தப்படுவார்...

சாப்பிட மாட்டேன்
என் உடலினை எண்ணி
அவர் புகைப் பிடிப்பார்...

அவர் தவறுகளை
என்னிடம் மறைத்தில்லை
எனக்கான பாடம் ஆக்கினார்...

சொத்து பத்தை விரும்பாதவர்
நம்பிக்கை வித்தை
விதைத்துச் சென்றார்...

அவர் தோட்டம் வளர்க்கவில்லை
காட்டை உருவாக்கிக் கொள்ள
சுதந்திரம் தந்தார்...

திரும்பத் திரும்ப
படித்துப் பார்க்கிறேன்
அப்பாவை...

தோளில் தூக்கி
வானில் தெய்வம்
காட்டி நிற்கிறார்...

வானில் தெரியும்
தெய்வமாகவும்
காட்சி தருகிறார்...

திரும்பத் திரும்ப
படித்துப் பார்க்கிறேன்
அப்பாவை...

தாகம் தீர
தோன்றும்
தாகம் போலவே...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக