நீ இருக்கும் போது
ஏந்த விட்டவர்கள் தான்
நினைவேந்தல் செய்கிறார்கள்
இப்போது
நினைவில் இருக்கிறான்
இல்லாமல் ஆன பின்பு...
எண்ணிவிடக்கூடிய
நட்சத்திரம் தான் கவிஞன்
அதில் மின்னிய எவையும்
உன் இருளை பகிர்ந்து கொள்ளவேயில்லை
இருளும்
உன்னை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை
கடைசிவரை வெளிச்சத்திற்கு
விட்டுத்தரவுமில்லை
இருள் உனை விழுங்கியது
இரவு மட்டும்தான் உறவாக இருந்ததால்
நீயும் உன்னை இரவுக்கு
உயில் எழுதிக் கொடுத்துவிட்டாய்
இப்படித்தான் உனக்கான வெளிச்சத்தை
பிறருக்கு விட்டுக் கொடுத்தாய்
இப்போது நீ இருள்
ஒர் பொழுது
காலமாகிவிட்டாய்...
மினுக்க மினுக்க
இரவை மறித்து இமைகள்
முத்தம் தரும்போதெல்லாம்
ஜொலிக்க ஜொலிக்க ஒரு விடியலைப்பிடித்து
விழிகளுக்குத் தருகிறது
இந்த இருள்
உன் நினைவேந்தும்
இந்தப் பாவிகளை
இரட்சிப்பாய்
மேலாக ரசிப்பாய்
இதைத்தானே
உன் வாழ்நாள் முழுவதும் செய்தாய்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக