வியாழன், 14 மார்ச், 2024


அமர் ஐஸ் வண்டிக்கார மாமா
சிரித்த முகத்துடனே
மணியடித்துக் கொண்டு
நினைவில் வந்தார்
கிரேப் ஐஸ் வாங்க
பத்து வயதுச் சிறுவனாய்
ஓடி வந்தேன்
காசு இல்லை
இருந்தாலும் அன்புடனே
என் பெயரைச் சொல்லி
கையில் தந்தார்
அதனால்தான் அதனால்தான்
இப்போதும்
அவர் நினைவில் வந்தார்...

அப்போது
ஞாயிற்றுக் கிழமைகளிலும்
விடுமுறை தினங்களிலும்
விற்பனைக்கு வருபவர்
முப்பது வருடங்களுக்குப் பிறகு
கற்பனையில் வந்து போனார்
இன்று கடும் பகலில்
காப்பீடு விற்பனைக்கு
நான் காத்திருக்கும் வேளையில்...

இப்போது
நவநாகரீக ஐஸ் பார்லர்களில்
வகைவகையாய் ஐஸ் இருக்கிறது
அன்பானவர்கள் யாரும் இல்லை
பெயரைச் சொல்லி எடுத்துத் தர...

அமர் ஐஸ் வண்டிக்கார மாமா
சிரித்த முகத்துடனே
மணியடித்துக் கொண்டே
நினைவு வளைவில்
திரும்பி மறைந்தார்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக