கயிறு இல்லை
சங்கிலி இல்லை
கட்டிவைக்கப்பட்டிருப்பது கைபேசியில்...
அழைப்புகள் தடவிக் கொடுக்கிறது
சில குரைத்துச் சண்டையிடுகிறது
சில கால்களில் நக்கிப் பிழைக்கிறது
தெரு நாய்களென சிலநேரம்
வளர்ப்பு நாய்களென சிலநேரம்
காட்டு நாய்களாய் மாறிவிட பலநேரம்
எந்த முதலாளி கட்டிப்போட்டது
நவநாகரீகமாய் அலுவலகங்களில்
காட்டைக் கனவு காணாமல்
வீடு கட்டக் கனவு காண்கிறது அத்தனையும்...
மத்தியிலிருந்து மாநிலம் வந்து
கூட்டி வைத்தவற்றிடம் தேர்தலுக்காக
தூய்மை இந்தியா திட்டம் பேசியது
கூட்டத்திலிருந்து எழுந்து சென்று
பலவும் கம்பத்தில் கால் தூக்கியது
திருக் குறளில் துவங்கியது
பின் வந்ததெல்லாம்
குழைந்துச் சிணுங்கிப்பேசி
நலிந்து முடிந்தது
மார்கழிப் பனியில்
ஒரு அழைப்பில்
இரண்டு மூன்றாகச் சேர்ந்து
ஒன்றாகப் பேசிக் கொண்டிருக்கிறது
தெரு முக்கில்...
கைபேசி கட்டப்படாத சிறுவன்
கல்லெறிந்து துண்டித்தான்
அந்த அழைப்பை...
டீக்கடை பெருசுகள்
பாவ புண்ணியம் பேசியது
சிறுவன்
மீண்டும் ஒரு கல்லெடுத்தான்
அத்தனையும் சுவிட்ச் ஆஃப் ஆனது...
கைபேசி கட்டப்படாத
சிறுவனும், ஒரு பைத்தியமும்
காட்டைத் தேடி அலைவதை
பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தது
இந்த நாய்...