திங்கள், 31 ஜூலை, 2023


ஆயிரம் மலர்கள் மலர்ந்து இருக்கிறது
ஆயினும் ஒரு மலரை மட்டுமே நினைந்து
மனம் தவிக்கிறது...


ஞாயிறு, 30 ஜூலை, 2023


இலைகள் இல்லை
நினைவுகள் தான்
மீண்டும் மீண்டும் துளிர்க்கிறது
காற்றினிலே அசைகிறது
மெல்ல மெல்ல இசைக்கிறது...

மௌனமான கிளைகளெல்லாம்
ஈரம் இல்லாமல்
பாறைகளாய் பூத்து
மணலாக உதிர்கிறது
மெல்ல மெல்ல இசைக்கிறது...

ஒரு நாள் ஏதும் கேட்காது
விழிகள் கூட பூக்காது
ஒளியே காணும் விழியானது
பேரமைதி பேரிசையானது
மெல்ல மிகமெல்ல இசைக்கிறது...


சனி, 29 ஜூலை, 2023


வாழப் பிடிக்காதவர்
தனக்குப் பிடித்த மாதிரி
சிலரின் நினைவில் வாழ்கிறார்

அந்தச் சிலரை
தெரிந்துகொண்டால் போதும்
வாழப் பிடித்துவிடும்... 

வெள்ளி, 28 ஜூலை, 2023


நீராகி நீர்த்த என்னை
வான் ஆக்க வந்ததெது
வானாகி நிறைந்த என்னை
மண்ணாக மாற்றுமெது
மண்ணாகி நிலைத்த என்னை
காற்றாகக் கரைத்ததெது
காற்றாகிக் கலந்த என்னை
ஒளியாகக் காண்பதெது
பெயரினுள் அடங்காதது
பெயரில்லாப் பெருவாழ்வது...


வியாழன், 27 ஜூலை, 2023


ஒரு குழந்தை நட்சத்திரம்
திரையைத் திறந்து பார்க்கிறது
தனது அன்னையைக் கூட்டி வந்து
என்னைக் காட்டிக் கொடுக்கிறது
அவர்கள் கண்களுக்கு
நானும் ஒரு நட்சத்திரம் தான்
இந்த நட்சத்திரங்களுக்கு
குலம், கோத்திரம் ஏதுமில்லை
அத்தனையும் அழகாய் இருக்கிறது
மின்னி மின்னிச் சிரிக்கிறது...



புதன், 26 ஜூலை, 2023


கம்ப்யூட்டர் கற்றுக்கொண்ட சிங்கம்
கையில் மவுஸ் பிடித்து
மானை  வேட்டையாடிக் கொண்டிருக்கிறது

பசி வேறொன்றாக
பேயாக வேடமிடுகிறது
காட்டை விழுங்கிட கனவு காண்கிறது

3023லும் காலை அழகாய் விடிகிறது
கூண்டுக்குள் ஒரு உலகம் இருக்கிறது
'மனிதக் காட்சி சாலை' என்கிற பெயரில்... 

செவ்வாய், 25 ஜூலை, 2023


இதழ்கள் குவித்து
நீரை முத்தமிட்டேன்
நீரும் முத்தமிடுகிறது

நீந்தி அருகில் வருவது
மீனா இல்லை நீனா
குவிந்த இதழ்கள் மட்டும் தெரிகிறது

மூச்சைக் கேட்கும் உயிர்
நின்று
முத்தம் கேட்கிறது...


திங்கள், 24 ஜூலை, 2023


கரிய மொட்டு மலர்ந்து விகசிக்க
கரு விழி வண்டுகள் வியாபித்து
அனுபவத் தேன் நுகரும்...

பசியோடு சில நாட்கள்
ருசியோடு  சில நாட்கள்
மனம் ரீங்காரம் பாடித் திரியும்...


ஞாயிறு, 23 ஜூலை, 2023


புயல், மழை
வெயில், நிழல்
இரவு, பகல்
இந்தக் கூட்டில்
இருந்துகொண்டே இருக்கிறது
உயிர்ப் பறவை...

புகையை ஊதுகிறேன்
சாராயம் ஊற்றுகிறேன்
சோற்றுக் கடன் தீர்க்க
அமைதியாய் இருக்கிறது...

மருத்துவரோ மாந்திரீகரோ
அமைக்கும் கூண்டிலெல்லாம்
சிறைபடாது...

அதன் சிறகுகளில்
எனை அணைத்திருப்பதை
உணரும் தருணத்தில்
இதோ சிறகை விரிக்கிறது
பறவை...

அது மறையும் வரை
பார்த்துக் கொண்டிருக்கும் கண்களை
யார் விரல்கள் மூடுமோ...
முன்னமே
புள்ளியாய் மறைந்த
புள்ளினம் வைத்தது
முற்றுப்புள்ளி


சனி, 22 ஜூலை, 2023


எழுத முடியாத கற்பனைகள்
தனக்கு மட்டும் கதவைத் திறக்கும்
ரகசியமாக...

தொட மறுக்கும்
தொட்டால் முறைக்கும்
தூண்டிலெனக் கள்ளமாகச் சிரிக்கும்...

முத்தம் மட்டுமல்ல
யுத்தம் வந்தும்
இரத்தம் சிந்தும் கற்பனையில்...

எனக்குக் காட்டியது
உனக்குக் காட்டும்போது இல்லை
எரிந்தது அணைந்தது நெருப்பு...

எனக்காக உன்னிடமும்
உனக்காக என்னிடமும்
நடையாய் நடக்கும்...

எழுத முடியாத கற்பனைகள்
தன்னைக் கொல்லும்
தன்னை உயிர்க்கும்... 


வெள்ளி, 21 ஜூலை, 2023


உன் வாசல் கடக்கும் போதெல்லாம்
வயதை மறக்கிறேன்
வயதை மறக்கவே உன் வாசல் கடக்கிறேன்... 

வியாழன், 20 ஜூலை, 2023


ஒரு பறவை
பறந்து வந்து
அமர்ந்தது...

இரு இலைகள்
இடம் கொடுத்து
உதிர்ந்தது...

ஒரு பறவை
கிளையை விட்டு
பறந்தது...

இரு இலைகள்
கிளையில் வந்து
துளிர்த்தது...

பறவை வராத
கிளைகள் யாவும்
பட்டுப்போகிறது... 

புதன், 19 ஜூலை, 2023


ஒரு பட்டாம்பூச்சி
காற்றில் கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறது
பூவின் காதில் சொல்ல...

நல்ல கவிதைக்கு
தேன் பரிசு

கவிதை கேட்காத
பூக்கள் மட்டும்தான்
கழன்று விழுகின்றன...

பட்டாம்பூச்சி படபடக்கிறது
தேனுக்காகவும்
கழன்று விழும் பூவிற்காகவும்...

கனவில்
யார் பூ?
யார் பட்டாம்பூச்சி?


செவ்வாய், 18 ஜூலை, 2023


வாசல் கைப்பேசியில்
நித்தமும் பார்த்துக் கொண்டிருப்பது
உன் வரவைத் தான்...

காற்றில் துழாவிய
விரல்கள் இப்போது
தொடு திரையில் உலாவுகிறது... 

திங்கள், 17 ஜூலை, 2023


தாகம் எனும் பறவை
எங்கிருந்து பறந்து வருகிறது
எங்கே பறந்து மறைகிறது...


ஞாயிறு, 16 ஜூலை, 2023


சும்மாவே பார்த்துக் கொண்டிருப்பது
மிகவும் பிடித்தமானது
உன்னையும் அப்படித்தான் பிடித்துப்போனது... 

சனி, 15 ஜூலை, 2023


கவிதைக்கு இரண்டு ரூபாய்...

ஏன் தரவேண்டும்
எதற்குத் தரவேண்டும்
கவிஞர் இல்லாத உலகம்
சுற்ற மறுத்திடுமா?

நீ எழுதாது
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
வண்ணம் அழிந்திடுமா?

என் மனதை
நீ வசியம் செய்ய
ஒப்புக் கொண்டால்
இருநிலை நடுநிலை ஆகிடுமா?

மலிந்த விலையில்
உயர்ந்த பொருளை
தந்திட உலகம் நம்பிடுமா?

வெறும் இரண்டு ரூபாய்க்கா
மெனக்கெட்டு எழுதினாய்
இதில் சத்தியம் இருப்பது சாத்தியமா?

கவிதைக்கு ஒரு ரூபாய்
பேரம் பேசி குறைத்து வாங்கி
விற்று இலாபம் பார்த்திடலாகிடுமா?

ஒன்றுக்கும் உதவாது எனினும்
எனக்கு ஒன்றைக் கொடு
என்னைப்போல் ஒன்றை காண விரும்புகிறேன்
என்றான் என் நண்பன்...


வெள்ளி, 14 ஜூலை, 2023


நானும்
நீயும்
நாமும்
ஆளுக்கொரு பாதையில்
பிரிந்து போகிறோம்
முச்சந்தியில் நின்று
காதல் மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறது
குழந்தையைப் போல...


வியாழன், 13 ஜூலை, 2023


நான்
100 சதவீதம் எனில்
தலைவன்

நான்
90 சதவீதம் எனில்
மந்திரி

நான்
80 சதவீதம் எனில்
தொழிலதிபர்

நான்
70 சதவீதம் எனில்
அரசு ஊழியன்

நான்
60 சதவீதம் எனில்
தனியார் தொழிலாளி

நான்
50 சதவீதம் எனில்
சராசரி

நான்
40 சதவீதம் எனில்
எடுபிடி

நான்
30 சதவீதம் எனில்
பிச்சைக்காரன்

நான்
20 சதவீதம் எனில்
உதவாக்கரை

நான்
10 சதவீதம் எனில்
பைத்தியம்

நான்
ஒன்றும் இல்லாதவன்
கவிஞன்

எனக்கும் கீழே
கடைநிலையில் இருக்கிறான்
அவன் ஞானி...


புதன், 12 ஜூலை, 2023


நமக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே
நம்முடன் உரையாடுவதில்லை
கடவுள்...

செவிகளைத் தளர விட்டால்
எல்லாமே கேட்கிறது
எல்லாமே புரிகிறது...

காதைத்  திருகித்
தந்தைச் சொல்லித்
-தந்ததும் புரிகிறது...

கண்ணீர் வழிகிறது
அந்த மெல்லிய ஒலி
கடவுள் பேசியது...


செவ்வாய், 11 ஜூலை, 2023


சந்திக்கும் போது
ஒரு முகம்
சற்றே கடந்ததும்
மறு முகம்
மனிதரைப் போல
மனிதரைப் போல
மேகங்களுக்கும் உண்டு
பல முகம்...

சில நேரம்
பார்த்தும்
சில நேரம்
பார்க்காமலும்
சில நேரம்
பார்த்தும் பார்க்காமலும்
போகின்ற மேகத்திற்கு
அவள் முகம்...


திங்கள், 10 ஜூலை, 2023



யாரைத் தேடி வருகிறது
மழைத் துளிகள்...
தெரியவில்லை

கண்டடைந்த துளியில்
பூ பூக்கும்

கண்டிராத துளியில்
உப்பு பூக்கும்

அங்கே ஒரு துளியில்
வெண்ணிறத்தில் பூக்கிறதே
அது பூவா உப்பா... 

ஞாயிறு, 9 ஜூலை, 2023


ஒரு இதயம் போதும்
உயிர் வாழ
இரு இதயம் வேண்டும்
காதல் வாழ...


சனி, 8 ஜூலை, 2023


கண்கள் மூடி
கண்கள் திறந்து
எனை நானே முத்தமிட்டேன்...

விண்ணைப் பிளக்கச் சத்தமிட்டேன்
நீ வரவில்லை என் செய்வேன்
எனை நானே மீண்டும் மீண்டும் முத்தமிட்டேன்...


வெள்ளி, 7 ஜூலை, 2023


நிலவு ஒளியில்
படிகள் முளைக்கிறது
நிலவு அல்ல
இரவுதான் வாயைத் திறக்கிறது
தோழியுடன் போகும் இடம்
நிலவோ இரவோ
சொர்க்கமோ நரகமோ...
எதுவானால் என்ன?
கைப்பிடித்து போக வேண்டும்
அவ்வளவுதான்


வியாழன், 6 ஜூலை, 2023


வெட்டவெளியில் சிலநேரம்
கூந்தலில் மறைத்து சிலநேரம்
எந்நேரமும் முத்தமிடுகிறாள்

பகல் என்றும்
இரவு என்றும்
கற்பனையில் கடந்து விடுகிறேன்

தெளியும் வரைதான் முத்தம்
எனில்
தெளிய வேண்டாம் பித்தம்... 

புதன், 5 ஜூலை, 2023


வண்ணத்துப்பூச்சியை பார்த்துக்கொண்டிருந்த
நான் இல்லை இப்போது
வண்ணத்துப்பூச்சியும் இல்லை...

வண்ணத்துப்பூச்சியாய் மாறிய நான்
நானாய் மாறிய வண்ணத்துப்பூச்சி
ஒன்று மாறி ஒன்றாய் ஒன்றுமில்லாமல் போகிறோம்

நீயும் நானும் கூட
இப்படித்தான் பார்த்துக்கொண்டோம்
அப்பொழுதே மாறிக்கொண்டோம்

உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த
நான் இல்லை இப்போது
நீயும் இல்லை...

செவ்வாய், 4 ஜூலை, 2023



பாழடைந்த ஜன்னலில்
பழைய தூசியாய் படிந்திருக்கும்
உன் நினைவுகள்...

நினைவுகளுக்கு
எட்டுக் கால் முளைக்கும்
நானே வலை நானே இரை...

காற்று தாலாட்டும்
சிலநேரம் இதயம் கிழித்து
ஊமையாய் நிற்கும்...

பாழாய்போன ஜன்னலை
எதேச்சையாக நீ திறந்ததும்
நான் அவளைப் பார்த்ததும்
அன்று நிகழ்ந்திருக்கக்கூடாது...


திங்கள், 3 ஜூலை, 2023


சிறிய புல்வெளி
உன் மடி
இந்தப் பனித்துளியின் நிம்மதி...


ஞாயிறு, 2 ஜூலை, 2023

சனி, 1 ஜூலை, 2023


உடைந்த வானமெல்லாம்
விழுந்த கிணறு
உன் வீட்டில் இருக்கிறது...
வானம் எட்டி நின்று
பார்த்துக் கொண்டிருக்கிறது
நானும் கூட...