வெள்ளி, 30 ஜூன், 2023


நீ இல்லாத வெற்றிடத்தில்
உன்னை வரையக் கற்றுக்கொண்டன
கண்கள்

கண்கள் மூடி வரையும் போது
மிக நெருக்கமாகிறாய்
நான் வெற்றிடமாகிறேன்

வெற்றிடத்தை
வெளியில் காணும் போதெல்லாம்
நானுனக்கு நெருக்கமாகிறேனா...

இப்போது இங்கு
உன் கண்களுக்கு உள்ளாகவா?
என் கண்களுக்கு வெளியிலா?


வியாழன், 29 ஜூன், 2023


பார்வையால் சிறு கல் எறிந்து
மனமும் வனமும் அதிர்ந்து
அடங்கும் நேரத்தில்
மீண்டும் ஒரு கல் எறிந்தாள்

மீண்டும் மீண்டும் கல் எறிந்தாள்
அவள் அப்படித்தான்
இரகசியங்கள் அறிந்தால்...


புதன், 28 ஜூன், 2023


சரியாகச் சொல்லத் தெரியவில்லை
என்பதுதானே காதல்
சரியாகச் சொல்லத் தெரியவில்லை

சரியாகச் சொல்லத் தெரியவில்லை
என்பதுதானே உண்மை
சரியாகச் சொல்லத் தெரியவில்லை

சரியாகச் சொல்லத் தெரியவில்லை
என்பதுதானே கடவுள்
சரியாகச் சொல்லத் தெரியவில்லை...


செவ்வாய், 27 ஜூன், 2023


காத்திருக்க மறுக்கும் யாவருமே
காத்துக் கொண்டுதான் இருக்கிறோம்
காலன் வரும்வரை...


திங்கள், 26 ஜூன், 2023


வீடு மட்டுமல்ல
தனக்கான சவப்பெட்டியையும்
வைத்திருக்கிறது ஆமை

முதலும் முடிவும்
அறிந்த ஆமை
நிதானமாக இருக்கிறது

கூடி இருந்தாலும்
தனித்தே இருக்கும்
தாமரை இலை நீர் ஆமை

தரையில் தவழும்
நீரில் நீந்தும்
தனக்குள் இருக்கும்
வானில் பறக்கும்

ஒரு ஆமை
ஒரு வீடு
ஒரு உலகம்...


ஞாயிறு, 25 ஜூன், 2023


சில புறாக்கள்
சில நிமிடங்கள்
போதும்
காயங்கள் ஆறும்...



சனி, 24 ஜூன், 2023


இந்த காய்ந்து சுருண்ட இலைகள்
ஊரிலுள்ள கிளவி போல
குனிந்து என்னை அருகில் அழைக்கிறது...

அவள்
உச்சி முகர்ந்து தரும் முத்தம்
நெஞ்சில் உதிர்கிறது...


வெள்ளி, 23 ஜூன், 2023


இத்தனைக் காலமாய்
எத்தனைத் துளிகளாய்
இறங்கி வந்தாலும்
அப்படியே இருக்கிறது
தீராத வானம்...


புதன், 21 ஜூன், 2023

நகர் பாலன் இன்று காலமானார்


பேரில் தொழில் பொதிந்தவர்
தொழிலில் வாழ்வை புதைத்தவர்
ஊருக்கு பால் ஊற்றியவருக்கு
ஊர் ஊற்றும் பால் நாளைக்கு
உறவுக்கெல்லாம் வேர் ஊன்றி நின்றவர்
வேர் அறுந்து வேறு இடம் போகிறார்...


செவ்வாய், 20 ஜூன், 2023


உலகை வாயில் காட்டிய மழலைக்கும்
வியந்து பார்த்த மங்கைக்கும்
இடையில் ஓர் நீர்க் குமிழ்
தனக்கான பானையைத் தானே உடைத்திருக்கும்... 

திங்கள், 19 ஜூன், 2023


மீன் தொட்டி போதும்
உணவு தந்தால் போதும்
எனும் மனிதா
மீன் மட்டும் பேச வாய் திறந்தால்...
உன் கைகள் செவி மூடும்

கடலுக்கு வழி தேடி
கணம் தோறும் புலம்பிடும்
கண்ணாடித் தொட்டி மீன்கள்...

குளத்தில், ஆற்றில்
விட்டுப்பார்
மீன் கடலைத் தான் தேடும்

கடல் சுதந்திரம்
கடல்
மீனின் ஞானம்

கடல் மீன்கள் கூட
கடலைத் தான் தேடும்
ஞானம் வந்த பொழுதில் தான்
கடலாக மாறும்
கடல்
ஆறு
குளம்
கண்ணாடி மீன் தொட்டி...

ஞானம் இல்லாதவர்கள்
வாழும் வீட்டின் சின்னம்
கண்ணாடி மீன் தொட்டி...

மனிதா
உன் ஞானம் தேடு
மீன்கள் வாழாது உன்னோடு...

 

சனி, 17 ஜூன், 2023


ஞானமுள்ள முருங்கை
முறிக்க முறிக்கத் துளிர்க்கும்
பறிக்கப் பறிக்கக் கொடுக்கும்
பூத்துக் குலுங்கிச் சிரிக்கும்...


வெள்ளி, 16 ஜூன், 2023


என்னது உன்னது என்றில்லை
அதனால்தான்
அத்தனைப் பட்டாம்பூச்சியும் அழகு...


வியாழன், 15 ஜூன், 2023


இதயத் துடிப்பு
இசையாய் மாறும் தருணம்
காதல்

இடி இறங்கி
மலரும் மொட்டு
காதல்

புழுதிப் புயலில்
புல்லின் நடனம்
காதல்

கண்களின் கரையில்
உப்பளம் பூக்கும்
காதல்

இமைகள் திறந்து
எனக்குள் நுழையும் நீதான்
காதல்...


புதன், 14 ஜூன், 2023


தன்னைத் தானே பூஜிக்கும்
நிழலால் மண்ணை நேசிக்கும்
காற்றைத் தான் அனைத்தும் சுவாசிக்கும்
மரம் வேறு மனிதன் வேறில்லை
பெயர்கள் மட்டுமே வேறு

பெயரில்லாமல் மாறினால்
பறக்கலாம் மிதக்கலாம் சிரிக்கலாம்
தருவாய்த் தவமிருக்கலாம்...


செவ்வாய், 13 ஜூன், 2023


பேரண்டப் பெரு வெளிக்கு
சொந்தம் கொண்டாடும் கலைஞனிடம்
வாடகை கேட்பது நியாயமா?
அவனும் வாடகை கொடுக்கிறான்
அநியாயமா...

கொடுப்பதற்கு கோடி உண்டு அவனிடம்
அந்தக் கோடியில் சில நூறு கூட இருக்காது
நீ கேட்கும் அச்சடித்த காகிதம்

எப்படி இருக்கும்
சுயநலமில்லாத ஓவியனிடம்
சுயம் மறந்த கவிஞனிடம்
சுதந்திரமாய் திரியும் பறவையிடம்...

பேரண்டப் பெரு வெளிக்கு
சொந்தம் கொண்டாடும் கலைஞனிடம்
வாடகை கேட்பது நியாயமா?
அவனும் வாடகை கொடுக்கிறான்
அநியாயமா...


திங்கள், 12 ஜூன், 2023


உருவம் எனும் சிறையில்
வாழ்ந்து பழகிய அறையில்
விடுதலைக்கு மறுதலிக்கிறேன்...

அருவம் என்னை
விடுவதாக இல்லை
அந்தப் பேரருவம்

உருவில் உள்ள வரை
உயர் தாழ்வு விடுவதில்லை
அருவத்தில் ஏதடா சிறிது பெரிது...


ஞாயிறு, 11 ஜூன், 2023


பறவையாய், மீனாய்
வாழ்வது போல் இல்லை
மண்ணில் மனிதனாய் திரிவது... 

வெள்ளி, 9 ஜூன், 2023


நின்று எரியும் நெருப்பு
நாவுகளை நாலாபுறமும் துருத்தி
உலகை ருசிக்கிறது

தனக்குள் கருகும் வாசத்தை
நமக்குள் கமழும் மணமாக
மாற்றிச் சமைக்கிறது

நீர் உறிஞ்சி பற்ற வைக்கும்
காற்று வாங்கி தீ வளர்க்கும்
பூவும் தான் ஒருவகையில் நெருப்பு

தீக் குளிக்கும் பட்டாம்பூச்சி
தேன் எடுத்துப் பறக்கும்
நானும் முயன்று கனவிலிருந்து கண்விழித்தேன்...


வியாழன், 8 ஜூன், 2023

பெயரில்லாப் பெருவாழ்வு (52)


முதியது இல்லை
புதியது என்போம்
ஒவ்வொரு வயதும் புதிதுதானே...


செவ்வாய், 6 ஜூன், 2023



மொபைலும் கையுமாய் இருந்தாலும்
உள்ளிருக்கும் மிருகம்
வேட்டைப் பார்வையே பார்க்கிறது...


ஞாயிறு, 4 ஜூன், 2023


ஒடிசா ஒடிசா
இது என்ன புதுசா...
விபத்தை பழகிக் கொள் மனுசா

மூன்று ரயில்கள் ஒன்றாய் மோதினாலும்
முன்னூறு பேர் இறந்து கூவினாலும்
காதுகள் கேட்காமல் இருப்பது புதுசா...
விபத்தை பழகிக் கொள் மனுசா

இதயம் இல்லாத தேசத் தலைவர்கள்
இதயம் நொருங்கியதாய் சொல்லும்
விளம்பரங்கள் புதுசா...
விபத்தை பழகிக் கொள் மனுசா

மோடிக்கும் அம்பானிக்கும்
தனி விமானம் சொகுசா
தயாராய் இருக்கும் புதுசா...
விபத்தை பழகிக் கொள் மனுசா

வெங்காயம் விலை ஏறும்
உன் காயம் மீது ரயில் ஏறும்
காலங் காலமாய் அரங்கேறும்
அக்கிரமங்கள் புதுசா...
விபத்தை பழகிக் கொள் மனுசா

பெரும் கிரிக்கெட் அரங்குகள் கட்டும்
அறுநூறு அடியில் சிலைகள் கட்டும்
ராமருக்கு பாலம் கட்டும் புதுசா...
விபத்தை பழகிக் கொள் மனுசா

12 மணிநேரம் வேலை வாங்கும்
சில்லறை வணிகத்தை காவு வாங்கும்
பழையதை வாங்கி அச்சடித்து விற்கும் புதுசா...
விபத்தை பழகிக் கொள் மனுசா

விவசாயம் அழிந்தாலும்
தன் சாயம் கலைந்தாலும்
ஓட்டு கேட்டு வருவோம் புதுசா...
விபத்தை பழகிக் கொள் மனுசா