வகுப்பின் உள்ளே ஆசிரியர்
எப்போதும் அவர் என்னை
வெளியே அனுமதிப்பதே இல்லை
வீட்டுப் பாடம்
மனப் பாடம்
எந்தப் பாடமும்
எனக்கு பிடித்ததே இல்லை
தேர்வுத் தாளில்
நூறு பல்லிகள்
ஊர்ந்து கொண்டே இருக்கும்
கடைசிவரை
நான் நெளிந்து கொண்டே இருப்பேன்
ஆலமரம்
அரசமரம்
வேப்பமரம்
வாகை மரம்
புளியமரம்
நண்பர்கள்
நிறைந்த பள்ளி வளாகம்
நிழலில் அமர்ந்து வரவே
தினமும் பள்ளிக்கு செல்வேன்
குச்சி ஐஸ்
புட்டரிசி
நெல்லிக்காய்
மாங்காபத்தை
இலந்தைப்பழம்
இடைவேளை நேரத்தில்
இதில் ஏதேனும் கிடைத்துவிடும்
கிடைக்காத நாட்களிலே
புளியமரத்தில் கல் எறிவோம்
வெள்ளை சட்டை
காக்கி கால்சட்டைகளும்
வெள்ளை சட்டை
நீல பாவாடைகளும்
சிறகுகள் இல்லாமலே
உடல்களும் இல்லாமலே
பறந்து திரியும்
பள்ளி எப்போதுமே பிடித்திருந்தது
படிக்க மட்டும்தான் பிடிக்கவில்லை
விளையாட்டு வகுப்பில் பயிற்சி
பாட வகுப்பில் விளையாட்டு
எங்களை போல தலைகீழாய்
ஆலமர வவ்வால்கள்
இப்படித்தான் இணக்கமானது
வகுப்பின் வெளியே ஆசிரியர்
எப்போதும் அவர் என்னை
உள்ளே அனுமதிப்பதே இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக