வியாழன், 31 மார்ச், 2022

 


குழந்தைகளின் கடவுளுக்கு மாறுவேடம் போட்டு
கோமாளி ஆக்கும்
கோளாறு உலகம்



புதன், 30 மார்ச், 2022

 


இப்போது
எந்தப் போரும் நடக்கவில்லை
இருந்தும்
ஃபிளாட்பாரம் எங்கும்
உள்ளூர் அகதிகள்

நம் ஊரில்
ஒரு போர்
ஏன் நடக்கக் கூடாது...



செவ்வாய், 29 மார்ச், 2022

 


ஏதுமில்லாமல் பிறந்தோம்
எந்திரத் துப்பாக்கிகளுடன் அலைகிறோம்
என்ன செய்துகொண்டு இருக்கிறோம்

ஏதுமில்லாததற்குள்
போவதற்குள்
எத்தனைத் தத்தளிப்பு

வானம் போல இல்லை
இந்த மண்ணில்
எப்போதும் சச்சரவு...



திங்கள், 28 மார்ச், 2022

 

ஒரு எறும்பின் பின்னால்
நடந்துவரும் பொறுமை
எவரிடத்தும் இல்லை

எவ்வளவு பொறுமைசாலி என்றாலும்
அது மனிதர்க்கு மட்டும்தான்
எல்லோர்க்கும் பொறுமைசாலி கடவுள் மட்டும்தான்



ஞாயிறு, 27 மார்ச், 2022

 


சில துளிகள்
படித்துக் கொண்டே இருக்கிறது
கடலை...



சனி, 26 மார்ச், 2022

 


நீயில்லாத இந்த இடத்தில்
காலம் நிரம்பி வழிகிறது
நொடிநொடியாக...


வெள்ளி, 25 மார்ச், 2022


தென்றல் வந்து
திறந்து காட்டியது
இலைகள் பேசிக்கொண்டு இருந்ததை...

நினைவு வந்து
திறந்து காட்டியது
உன்னோடு பேசிக்கொண்டு இருந்ததை...


வியாழன், 24 மார்ச், 2022

 


ஒவ்வொரு நொடியும்
பூத்து உதிர்கிறது
வாழ்க்கை மலர்தூவி வாழ அழைக்கிறது...



புதன், 23 மார்ச், 2022

 


நான்கு கால்களையும்
வானில் அடகு வைத்து
சிறகுகள் கேட்டது குதிரை

ஒற்றைக் காலில்
நானும் வேண்டினேன் குதிரைக்காக
இருவருக்குமே சிறிது நேரம் சிறகு முளைத்தது...


செவ்வாய், 22 மார்ச், 2022

 


சாராயம் குடிப்பவனுக்கு
காய்ச்சியவனின் பைத்தியம்
மெல்ல மெல்ல உள்ளிறங்கும்

சாராயம் காய்ச்சுபவனுக்கு
குடிப்பவனின் பைத்தியம்
தெளிய வைக்கும் மனமிருக்கும்

குடிப்பதற்கு முன்னர்
நேராக நடந்த பைத்தியம்
குடித்த பின்னர்
தலைகீழாய் நடக்கிறது

தெளியத் தெளிய
பிடிக்கிறது
புதிய புதிய பைத்தியம்

பைத்தியம்
பிடிப்பதும் உண்மை
தெளிவதும் உண்மை

நினைத்தது உண்மையா
யாருக்கு தெரியும்...



திங்கள், 21 மார்ச், 2022


கடைசி ஒளி
கடைசியாக பார்த்த உன் கண்களைப் போல
நழுவிச் செல்கிறது...


ஞாயிறு, 20 மார்ச், 2022

 


பயணங்கள் முடிந்த அந்த சாலையில்
மௌனம் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தது
என் பயணத்தை ஒத்திவைத்து பார்த்திருந்தேன்
மௌனம் பயணித்து என்னுள் வருகிறது...



சனி, 19 மார்ச், 2022

 


மேகம் பூத்து
விதையாய் விழுந்து
மண் பூத்தது

மண் பூத்து
விதையாய் விழுந்து
பூ பூத்தது

பூ பூத்து
விதையாய் விழுந்து
புழு பூத்தது

புழு பூத்து
விதையாய் விழுந்து
பறவை பூத்தது

பறவை பூத்து
விதையாய் விழுந்து
வானம் பூத்தது

வானம் பூத்து
விதையாய் விழுந்து
மேகம் பூத்தது...

கண்கள் பூத்து
விதையாய் விழுந்து
காதல் பூத்தது

காதல் பூத்து
விதையாய் விழுந்து
காமம் பூத்தது

காமம் பூத்து
விதையாய் விழுந்து
உயிர் பூத்தது

உயிர் பூத்து
விதையாய் விழுந்து
கண்கள் பூத்தது...



வெள்ளி, 18 மார்ச், 2022

 


காய்ந்த சருகில்
சாய்ந்து கண்மூடி
காயங்கள் ஆற்றுகிறாய்

என் பசுமை அத்தனையும்
உந்தன் கதகதப்பில்
கனவாய் பூக்கிறது...


வியாழன், 17 மார்ச், 2022

 


என் நிலவை
இங்கு அழித்ததை போல
உன் நிலவை
அங்கொரு கை அழித்திருக்கும்

என் நிலவை
இங்கு வரைந்ததை போல
உன் நிலவை
அங்கொரு கை வரைந்திருக்கும்

வானத்தில் மட்டுமல்ல
மனதிலும் நுழையும்
அந்தக் கையை
இதுவரை கைது செய்ய முடியவில்லை....



புதன், 16 மார்ச், 2022

 


உன்னை ஏமாற்றியதும்
என்னை ஏமாற்றியதும்
நான்



செவ்வாய், 15 மார்ச், 2022

 


ஒப்பிடாத வரை பிரபஞ்சம்
ஒப்பிடுகையில் கழன்று விழும்
நான்



திங்கள், 14 மார்ச், 2022

 


மாவிலையின் நரம்புகளை
மா கோலம் வரைகிறது
சிலந்தி

மாமரம் பூத்தூவி
பொன்னாடையாய் அணிவித்ததொரு
வண்ணத்துப்பூச்சி



ஞாயிறு, 13 மார்ச், 2022

 


காலை எழுந்ததும்
எல்லோர்க்கும்
பித்து பிடிக்கிறது

தானே நடப்பதை எல்லாம்
நானே நடத்திட
சித்தம் விளைகிறது

எல்லாமே கிடைக்கிறது
நடுவில்
யார் வந்து பதுக்கியது

இல்லாமல் இருக்கும்
தவறு தனதென்று
பெருங்கூட்டம் நம்பியது

சில கைகள் உண்பதை
பல கண்கள் விழுங்கி
போதாமல் உப்பிட்டது

தினந்தோறும் வருகிறது
சிலருக்கு உறக்கம்
பலருக்கு மயக்கம்

காலை எழுந்ததும்
எல்லோர்க்கும்
பித்து பிடிக்கிறது...


சனி, 12 மார்ச், 2022

 


இல்லாதவர்க்கு வாய்க்காத அரிசி
இறந்தவர்க்கு வாய்க்கரிசி

புழு பூத்து அரிசி
ஓர் சேதி சொன்னது...

'உயிர் பூக்கும் தன்னை
உயிர் காக்க என்னை
பகிர்ந்து கொள்' என்றது



வெள்ளி, 11 மார்ச், 2022

 


அரசு மருத்துவர்
'மூன்று வேளையும்
சாப்பிடும் முன்பு
சாப்பிட்ட பிறகு
போடச் சொல்லி'
சில மாத்திரைகள் கொடுத்தார்

ஒருவேளை மட்டும்
உண்பவருக்கு
இது எப்படி சாத்தியம்?


வியாழன், 10 மார்ச், 2022

 


சட்டை இல்லாத காந்தி
கையில் சாட்டையுடன்
தன்னைத்தானே வருத்திக் கொள்கிறார்...

அவர் உடலின் தோல் உரிகிறது
சில துளிகள் இரத்தம் வழிகிறது
சலங்கையும் மணிகளும் கதறுகிறது

கருணை சில்லறையாய் வந்து விழுகிறது
சில்லறை மத்தியில் பத்து ரூபாய் நோட்டு
காந்தியை பார்த்து காந்தி சிரிக்கிறார்...


புதன், 9 மார்ச், 2022

 


நீர் இல்லாமல்
மீன்களை வரைவதில்லை
குழந்தைகள்

செந்நதியில் இருந்து
செங்குருதியில் துள்ளிக் குதிக்கிறது
மீன்கள்

மீன்களின் சொர்க்கத்தை
பார்த்த கணத்தில்
நானும் சொர்க்கத்தில் நுழைகிறேன்...


செவ்வாய், 8 மார்ச், 2022


பார்த்துக் கொண்டிருந்த குளத்தில்
வானம் நிரம்பி வழிந்தது
நாணல் துடுப்பை
காற்று இயக்க
மேக கப்பல் மிதந்தது

ஒளி
இருள் தேடி
இறங்கி வந்தது
தாமரையை
பரிசாக கொண்டு வந்தது

குளத்தின் ஆழத்தில்
உறங்கும் இருளை
மலர் வாசம் எழுப்பியது

இருள் மெதுவாக
எழுந்து வந்து
அல்லி மலர்க் கதவை
திறக்கின்றது

பின்னர் எல்லாமே
தானாக நடக்கின்றது...



திங்கள், 7 மார்ச், 2022

 


மீனை தேடும்போது நானும்
என்னை தேடும்போது மீனும்
தடாகத்தில் தெரிகிறது




ஞாயிறு, 6 மார்ச், 2022

தாடண்டர் நகர்

 


பெயரில்லா வீதிகள்
மதமில்லா தோழர்கள்
ஜாதியில்லா ஜனங்கள்
ஒன்றாய் கூடி வாழ்ந்த தருணங்கள்

வீட்டிற்கு பல மரம்
உறவாக வளர்த்த மரம்
உள்ளங்களைக் கவர்ந்த மரம்
கண் மறைந்து போனதெங்கோ

ராஜ், கீதன் வீட்டு மாமரம்
அரசு மருத்துவமனை அருகில்
நாவல் தூங்குமூஞ்சி மரம்
பிள்ளையார் கோயில் கற்பூர மாங்காய் மரம்
சமூகக் கூடம் எதிரில் நாவல் மரம்
மணி டெய்லர் கடை பாதாம் மரம்
பரணி வீட்டு மருதாணி நார்த்தங்காய் மரம்
கோபால் வீட்டு மாமரம்
நாவலன், பூங்குன்றன் வீட்டு வாழைமரம்
இமானுவேல் வீட்டு நெல்லி மரம்
டீச்சர்ஸ் ஹாஸ்டல் தைல மரங்கள்
பிரேம் வீட்டு மா பலா மரம்
ஆண்ட்ரூஸ் வீட்டு நெல்லி மரம்
ஜோதியம்மாள் நகர் வாழை மரங்கள்
கோபி வீட்டு முருங்கை மரம்
சரவணன் வீட்டு அரளி செம்பருத்தி மாமரம்
சிவா, ராஜா வீட்டு செம்பருத்தி மரம்
கோகுல் வீட்டு மாமரம் தென்னைமரம்
அருண் வீட்டு நெல்லி மரம்
ரேடியோ மாமா வீட்டு பலா மரம்
ரமேஷ், ரகு வீட்டு
மா எலுமிச்சை கருவேப்பிலை மரம்
லைப்ரரி தெருவில்
சப்போட்டா பலா எழுமிச்சை மரம்
ராஜா வீட்டு மாமரம் பிள்ளையார் கண் மரம்
ராஜேந்திரன் டாக்டர் வீட்டு மாமரம்
ராஜன்பாபு வீட்டு எதிரில் நாவல் மரம்
எ பிளாக் ஆலமரம் கொன்றை மரம்
சி பிளாக் அரசமரம்
டி பிளாக் ஆலமரம்
மணல் கிரௌண்ட் வேப்பமரம்
கே பிளாக் புங்கை மரம்
ராஜேந்திரன், செந்தில் வீட்டு
பப்பாளி முருங்கை தேக்கு மரம்
எம் பிளாக் தேன் காய் மரங்கள்
அரசு பண்ணை புளிய மரங்கள்

தொட்ட மரம் அத்தனையும்
சொல்லிவிட முடியவில்லை...

வீட்டிற்கு பல மரம்
உறவாக வளர்த்த மரம்
உள்ளங்களைக் கவர்ந்த மரம்
கண் மறைந்து போனதெங்கோ

பசுமை அழிந்து வரும் சென்னையில்
மரங்கள் குறைந்து வரும் நகரத்தில்
மதங்களின் பெயரால் பெருகி வரும்
தேவாலயங்கள் கோவில்கள் மசூதிகள் நடுவில்
ஏதேதோ ஜாதிப் பெயருள்ள தெருக்களில்
எங்கெங்கோ பிரிந்து பிழைத்துவருகிறோம்...


சனி, 5 மார்ச், 2022

 


சரி தவறு
சரியா தவறா என்றே
சரியோ தவறோ உதிர்ந்து விடுகிறது

சரி தவறு இல்லாத
குழந்தைகளின் உலகில்
தன்னிறைவான தருணங்கள் மலர்ந்து விடுகிறது


வெள்ளி, 4 மார்ச், 2022

SHANE WARNE

 


சுழற் பந்தின் சூறாவளி
தனக்கென தனி வழி
உனது ராங் வொன்னில்
பேட்ஸ்மேன் பலி
எத்தனை பேருக்கு
பரிசளித்தாய் சுழி
தன்னிகரில்லா வீரன்
தரணியை விட்டுப்போன வலி
தலை தாழ்த்தி வணங்குகிறோம்
வேறென்ன செய்வோம்...


வியாழன், 3 மார்ச், 2022


வகுப்பின் உள்ளே ஆசிரியர்
எப்போதும் அவர் என்னை
வெளியே அனுமதிப்பதே இல்லை

வீட்டுப் பாடம்
மனப் பாடம்
எந்தப் பாடமும்
எனக்கு பிடித்ததே இல்லை

தேர்வுத் தாளில்
நூறு பல்லிகள்
ஊர்ந்து கொண்டே இருக்கும்
கடைசிவரை
நான் நெளிந்து கொண்டே இருப்பேன்

ஆலமரம்
அரசமரம்
வேப்பமரம்
வாகை மரம்
புளியமரம்
நண்பர்கள்
நிறைந்த பள்ளி வளாகம்
நிழலில் அமர்ந்து வரவே
தினமும் பள்ளிக்கு செல்வேன்

குச்சி ஐஸ்
புட்டரிசி
நெல்லிக்காய்
மாங்காபத்தை
இலந்தைப்பழம்
இடைவேளை நேரத்தில்
இதில் ஏதேனும் கிடைத்துவிடும்
கிடைக்காத நாட்களிலே
புளியமரத்தில் கல் எறிவோம்

வெள்ளை சட்டை
காக்கி கால்சட்டைகளும்
வெள்ளை சட்டை
நீல பாவாடைகளும்
சிறகுகள் இல்லாமலே
உடல்களும் இல்லாமலே
பறந்து திரியும்
பள்ளி எப்போதுமே பிடித்திருந்தது
படிக்க மட்டும்தான் பிடிக்கவில்லை

விளையாட்டு வகுப்பில் பயிற்சி
பாட வகுப்பில் விளையாட்டு
எங்களை போல தலைகீழாய்
ஆலமர வவ்வால்கள்
இப்படித்தான் இணக்கமானது

வகுப்பின் வெளியே ஆசிரியர்
எப்போதும் அவர் என்னை
உள்ளே அனுமதிப்பதே  இல்லை





புதன், 2 மார்ச், 2022

 


பறந்து போவதற்கு மட்டுமல்ல
மறந்து போவதற்கும்
சிறகுகள் வேண்டும்


செவ்வாய், 1 மார்ச், 2022

 


புழு பூத்த அரிசியில்
ஒரு குருவி பூத்தது
குருவியைச் சுற்றி ஒரு கூண்டு பூத்தது...