திங்கள், 29 நவம்பர், 2021

 


நீங்கள் சொல்லிக் கேட்காதது மட்டுமல்ல
நான் சொல்லி
நானே கேட்காதது தான் அதிகம்

உங்களுக்கு மட்டும் அல்ல
எனக்கும் நானேதான் கெட்டவன்

துவேஷச் சொற்களை
தூர இருந்து வீசாதீர்கள்
அது எப்போதும் ஊற்றெடுத்து
என்னில் நிரம்பி இருக்கிறது

என்னைப் பிடிக்காமல் தானே
உங்களை நோக்கி வருகிறேன்
அனுமதிக்கக் கூடத் தேவையில்லை
அலட்சியமாக இருந்து கொள்ளுங்கள்

இந்த மழைநீரைப் போல
கொஞ்சம் தேங்கி வடிந்து விடுவேன்...


ஞாயிறு, 28 நவம்பர், 2021

 


பனி
என் மீது
வரைந்து கொண்டே இருக்கிறது
உடலெங்கும் கைத்தட்டல்
அதிர்கிறது உள் அரங்கம்
உணர முடிகிறது
என் ஆயிரம் கரங்களை...


சனி, 27 நவம்பர், 2021

 


ஏழையோடு பழகு
பணக்காரனோடு பழகு
பணக்காரனைப்போல் நடிக்கும்
ஏழையோடு
ஏழையாக நடிக்கும்
பணக்காரனோடு
பழகவே பழகாதே


வெள்ளி, 26 நவம்பர், 2021


ஆறடிக்கு மேல்
இடமிருந்தால் வீடு
ஆறடிக்கு உள்
நாமிருந்தால் சுடுகாடு

சொந்தமோ
வாடகையோ
பரந்த உலகை
சுருங்கச் செய்யும் வீடு

பழக்கம் என்னும் வியாதி
யாரையும் விட்டு வைப்பதில்லை
வீடென்னும் புற்றுநோய்க்கு
விடிவேதும் இல்லை


வியாழன், 25 நவம்பர், 2021

 


சுவர் இருந்தால்
காற்று இல்லை
காற்று இருந்தால்
நீர் இல்லை
நீர் இருந்தால்
ஒளி இல்லை
ஒளி இருந்தால்
வெளி இல்லை
வெளி இருந்தால்
சுவர் இல்லை
எல்லாம் இருந்தால்
கொடுக்க வாடகை இல்லை...

நல்லவேளை
நிலவில் உறங்கி
திரும்பும் என்னை
கனவு காசு கேட்பதில்லை

வானம் பார்த்து
வாழும் தருணம்
துன்பமில்லை துயருமில்லை...


புதன், 24 நவம்பர், 2021

 



சுவர்கள் எல்லாம்
நாம் கட்டிக் கொள்ளும்
சுடுகாடுகள் தானே...


செவ்வாய், 23 நவம்பர், 2021

சாமி

 


சாமி
எனக்கு நண்பன்
நண்பன்
எனக்குச் சாமி

தாய் சாமி
மண் சாமி
நீர் சாமி
வான் சாமி
நெருப்புச் சாமி
காற்றுச் சாமி
குல சாமி
எல்லைச் சாமி
ஊர் சாமி
உலகச் சாமி
சிலுவைச் சாமி
நிலவுச் சாமி
தகப்பன் சாமி
எல்லாமே தள்ளி நின்று
நாம் கும்பிடும் சாமி

நண்பன் சாமி
உடனிருக்கும் சாமி
தோள் கொடுக்கும்
தோழன் சாமி
உயிர் சாமி
உயிர் இருக்கும்வரை
சாமி

சாமி
எனக்கு நண்பன்
நண்பன்
எனக்குச் சாமி...

பிறந்தநாள் வாழ்த்துகள் சாமி


 


வானம் விழுந்து கிடக்கிறது
அந்தக் கிணற்றில்
எட்டிப் பார்த்த
நானும் விழுந்தேன்
நனையாமல் வீடு வந்தேன்

வானம் விழுந்து கிடக்கிறது
அவள் விழிகளில்
எட்டிப் பார்த்த
நானும் விழுந்தேன்
சிறைபடாமல் வீடு வந்தேன்

வானம் விழுந்து கிடக்கிறது
அந்த இரவில்
எட்டிப் பார்த்த
நானும் விழுந்தேன்
புதையாமல் வீடு வந்தேன்

நனையாமல்
சிறைபடாமல்
புதையாமல்
இருக்கிறேன்
நான் விழுந்தது வானத்திலா...

வானம் விழுந்து கிடக்கிறது
அந்தக் கிணற்றில்
அவள் விழிகளில்
அந்த இரவில்
நான் விழுந்து எழுந்து வர...

வானம் இல்லையென்றால்
நானும் இல்லை
விழுந்து விழுந்து காப்பாற்றும் வானம்
எழுந்து எழுந்து விழும் நானும்...


திங்கள், 22 நவம்பர், 2021

லஷ்மி மணிவண்ணன்

 


கடலொரு பக்கம்
வீடொரு பக்கம்
நடுவினில் பித்துக்குளித்தல்
உன் பழக்கம்

முத்துக்கள் அல்ல
நீ எடுத்து வருவதெல்லாம்
மனதின் சத்துக்கள்

மூன்றாம் கண் வழிநடத்தும்
ஆயிரம் கண்கள் வழித் தொடரும்
அழகான புதிரான கவி உலகம்

அதில் நிதம் உலவும் அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்


 


ஓடும் நீரில்
ஒரு கூழாங்கல்
தலை கோதும் நதியின் விரல்கள்
குளிர்ந்து உறைந்த கூழாங்கல்
வேண்டும் கதகதப்பு...

உச்சி வெயிலில்
கரையில் தவமிருந்து
மறு கூழாங்கல்
வேண்டும் சிலுசிலுப்பு...


ஞாயிறு, 21 நவம்பர், 2021

 


குளிர்ந்த நீரில்
இதழ் படும்போது
வெதுவெதுப்பான நினைவுகள்...


சனி, 20 நவம்பர், 2021

 


மின்னி மின்னி ஒளிர்கிறது
இங்கும் அங்கும் பறக்கிறது

விளக்கில்லாத தீபங்கள்
காற்றில் அணையாமல் தவிக்கிறது

பூ விளக்கில்
திரி இல்லாமல்
தேன் குடித்து எரிகிறது

பற்றி எரியாத
பட்டுத் தாவணியை
பல வண்ணங்களில் அணிகிறது

ரெட்டை ஜடை பின்னி
கண்கள் எடை போட
கண்டும் காணாமல் போகிறது...

வண்ண வண்ணப் பட்டாம்பூச்சி
என்னோடு ஆடும் கண்ணாம்மூச்சி


வெள்ளி, 19 நவம்பர், 2021

 


காற்றில் ஆடும் தீபத்திற்கு
கேட்கும் ராகம் என்னவோ?
கேட்கும் குழந்தையும்
ஆனந்தமாய் ஆடுது...

மௌனம் வந்து அணைத்ததோ
தீபமும் குழந்தையும்
உறங்கிப் போனது...


வியாழன், 18 நவம்பர், 2021

 


இனி எந்த ராவணனையும் அழிக்க
ராமனிடம் ஆயுதங்கள் இல்லை போலும்
வானரங்கள் வாங்கிச் சேர்க்கின்றன


புதன், 17 நவம்பர், 2021

 


கடவுளின் ஞானத்தை
கேலி செய்யும் வழிமுறைகள் தான்
வேண்டுதல் தொழுகை ஜெபம்


செவ்வாய், 16 நவம்பர், 2021

 


சபிக்கப்பட்ட உலகத்தை
ஜெபிக்கும் மனிதர்கள்
காட்டிக் கொடுத்து விடுகிறார்கள்


திங்கள், 15 நவம்பர், 2021

 


கிளிப்பிள்ளை மட்டுமல்ல
வேதம் ஓதும் பிள்ளைகளும்
சொன்னதையே சொல்லும்...


ஞாயிறு, 14 நவம்பர், 2021

 


எதுவும் வாங்காமலே
எதையோ தருகிறது
குழந்தைகளின் சிரிப்பு

தூர மின்னும் நட்சத்திரங்கள்
அருகில் மின்னும் குழந்தைகள்
மன இருளில் பாயும் வெளிச்சங்கள்...


சனி, 13 நவம்பர், 2021

 


நாமெல்லாம் சேர்ந்து
மண்ணின் துகில் உரிக்கிறோம்
எந்தக் கிருஷ்ணனும் இதுவரை வரவில்லை...


வெள்ளி, 12 நவம்பர், 2021

 


தூக்கம் கலைந்ததும்
அழுத குழந்தையா நான்
யார் பிரிந்தாலும்
சிரிக்கிறேன் இன்று
வலியின் பசிக்கு
இப்போதெல்லாம்
சிரிப்பே உணவாகிறது...

வியாழன், 11 நவம்பர், 2021

 


கடந்து கொண்டிருப்பது பிழைத்தல்
கலந்திருப்பது வாழ்தல்
நேற்று வெயில்
இன்று மழை
நாளையும் பிழைப்பு தான்
வாழ்க்கை வியாபாரம் ஆகி
நெடுநாள் ஆகிறது
அரசியல் அறிவியல் சமயம்
எல்லாமே வியாபாரம் மட்டும் தான்
கடல் மலை மேகம் ஆகாயம்
எல்லாம் கடந்து
நிலவை வாங்க
உயிரை வாங்குகிறார்கள்...

அன்று
நிலத்தை பட்டா போட்டவனின்
கழுத்தை துண்டாய் போட்டிருக்க வேண்டும்

இன்று
தலையில் துண்டு போட்டு
ஆவதற்கு ஒன்றுமில்லை...

பிழைப்பை பார்க்க வேண்டியதுதான்


புதன், 10 நவம்பர், 2021

 


என் போதையை
வெறித்து வெறித்துப் பார்க்கும்
கங்கு

தீக்குச்சி
காத்திருந்து பற்றவைக்கும்
என் மகிழ்ச்சிக்காக
தன் உடல் எரிந்து
காற்றில் நடனம் ஆடும்
கைகளைக் கூப்பி
மௌனமாய் நிற்பதைத் தவிர
என்னிடம் கைமாறு வேறில்லை...

கங்கு
உந்தன் மறுபிறப்பா...
வெறித்து வெறித்துப் பார்க்கும்
என்னுள்
ஆனந்தத் திரியைப்
பற்றவைக்கும்...

வெள்ளைப் புகைச் சூழ
கண்ணில்
பல நினைவுகள்
பூத்துக் குலுங்கும்
எல்லாப் பூக்களும்
உதிர்ந்துக் காத்திருக்கும்
என்னை வழியனுப்ப...


செவ்வாய், 9 நவம்பர், 2021

 


சிகரெட் பிடித்து பிடித்து
ஒருநாள் பிடிக்காமல் போனது
விட்டுவிட்டேன்

லைட்டர் பிடித்தது
பற்றிக் கொண்டது மனது
பாழாய் போகிறது உடம்பு...


திங்கள், 8 நவம்பர், 2021

 


நிலையானதாய் தெரியும் நிலையாமைகள்
நிலையில்லாதாய் தெரியும் நிலையானவைகள்

கனவில் தோன்றும் நினைவுகள்
நினைவில் நீந்தும் கனவுகள்

உனக்கு முன்
உனக்குப் பின்

வேறேதும் இல்லை வாழ்வில்...


ஞாயிறு, 7 நவம்பர், 2021

 


கதகதப்பு நீ
என்னைக் காத்திருப்பது நீ
ஊர் மூழ்கி இருந்தாலும்
தோளில் வைத்து
அந்தத் தேரில் வைத்து
கொண்டாடி இழுப்பவன் நீ
தரையில் வீழ்ந்த கொடி எனக்கு
பிடி நீ, நம்பிக்கை நீ
தந்தை நீ
விந்தை நீ
சிந்தை நீ
சிரிப்பு நீ
கண்ணீர் துடைக்கும் கை நீ
கட்டுக்குள் அடங்காத வானம் நீ
மூச்சுக்குள் அடங்கிய உயிர் நீ
சிறை நான்
ஆயுள் கைதி நீ
உன்னை எப்படி விடுவிப்பேன்...
நீ இறந்தாலென்ன?
உன் ஆயுள் இல்லை
என் ஆயுள் கைதி நீ...


சனி, 6 நவம்பர், 2021

 


கலையில் சகலகலா வல்லவன்
அரசியல் தெரியாத நல்லவன்
பல நூல்கள் அறிந்தவன்
புற நூலை அறுத்தவன்
"நாலு பேருக்கு நல்லதுன்னா
எதுவுமே தப்பில்லை" என்றவனுக்கு
சட்டமன்றத்தில் வாய்ப்பில்லையா...

"வீழ்வேன் என்று நினைத்தாயோ"
எனும் எங்கள் இந்தியன்
நாட்டுப் பற்று இல்லாதவன் தான்
உலகப் பற்று கொண்டோன் இவன்
உலக நாயகன்
நாளைய மக்கள்மன்றக் காவலன்
கமல்ஹாசனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்


 


பொம்மையோடு பேசிய
பொம்மையோடு ஆடிய
பொம்மையோடு தூங்கிய
பொம்மையோடு பழகிய
அந்தக் காலங்களில்
அது பொம்மை இல்லை
உண்மை...

வெள்ளி, 5 நவம்பர், 2021

 


ஜன்னலுக்கு உள் குதித்து
பாலைக் குடிக்கும் பூனையை
ஜன்னலுக்கு வெளியே குதித்து
பாலைக் குடிக்கும் கண்களைக்
காண்பது அரிது...


வியாழன், 4 நவம்பர், 2021

 


ஒளி கூட
பகல் இரவு
வேடம் போடும்

காற்று கூட
மிதமாகும்
தீவிரமாகும்

ஆகாயம் கூட
கைக்குள் அடங்கும்
மெய்க்குள் விரியும்

மழை கூட
கடலாகும்
மேகமாகும்

மண் கூட
மலையாகும்
குழியாகும்

நான் கூட
நல்லவன்
கெட்டவன்

நீ கூட
நல்லவள்
கெட்டவள்

அசுரனும்
தேவனும்
வேறுவேறு இல்லை

ஒற்றை வேடம்
யாரிடமும்
பார்த்ததில்லை...


புதன், 3 நவம்பர், 2021

 


வாய் திறந்து அழைத்தால்
விலகிச் செல்கிறது
மௌனம்

மௌனம் பிடித்திருந்தால்
கூப்பிடக்கூடாது
கூடு விட்டுக் கூடு பாய வேண்டும்

மௌனத்தை தொடர்ந்து சென்றால்
உடலை விட்டு
உலகை விட்டு
உடையாத நீர்க் குமிழாய்
உயர உயரப் போக வேண்டும்

நினைவுகள் நீங்க வேண்டும்
முழுவதுமாக தொலைய வேண்டும்
தொலையத் தொலைய
நெருங்கும் மௌனம்...


செவ்வாய், 2 நவம்பர், 2021

 


பசி
பழகியவருக்கு தோழன்
பழக்கம் இல்லாதவர்க்கு காலன்

இரவை நீட்டிக்கும்
பகலை சுருக்கும்

நம்பி வந்து காத்திருக்கும்
உரிமையோடு வயிற்றை இறுக்கும்

பணம் பார்த்துப் பழகாது
பழைய சாதம் இகழாது



திங்கள், 1 நவம்பர், 2021

 


பற்றி எரியும்
என்னைப்போல் தான்
முன் இருந்தது பூமி
எனக்கும்
தொடர் மழை முத்தம்
வரம் தருமா அந்தச் சாமி...