செவ்வாய், 15 ஜனவரி, 2019

புத்தகத்தில் மறைத்து வைத்த
மயிலிறகின் கவிதை


குழந்தைகளோடு விளையாடிய எனக்கு
புது அனுபவம்
உன்னோடு விளையாடியது


உன் ஸ்பரிசத்தில் தான்
என் கலைக் குறியீடு
விளங்கியது


எனைக் கொண்டு
உன் மேனியில்
அவன் வரைந்த
ஓவியங்களின் அர்த்தங்கள்
விரிந்துகொண்டே போகிறது


முன்பெல்லாம்
அவன் சிரிப்பினில்
உன்னைக் காண்பேன்

இப்போதெல்லாம்
கண்ணீரை மட்டும் தான்
பார்க்க முடிகிறது


பிரிவின் ஏக்கத்தை
என்னைவிட யார் அறிவார்
புத்தகத்தை அவன்
திறந்து மூடும் போதெல்லாம்
எந்தன் பழைய ஞாபகங்கள்


அழுகைச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
என் மாயக் கண்களின்
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
முகம் கொடுப்பேன்
அவன் முத்தமிட

அந்த முத்தங்கள்
எனக்கானதல்ல


குழந்தைகளின் பிடிவாதங்களை
நன்கு அறிந்ததால் சொல்கிறேன்
நீ அவனை சேர்ந்து விடு
காதல் துயரத்தால் இறந்தவர்களின்
கல்லறைகளிலும்
எனக்கு அனுபவம் உண்டு


அடுத்த முறை
அவன் புன்னகைக்
காணக் காத்திருக்கிறேன்
எனது சுயநலத்தோடும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக