ஞாயிறு, 30 ஜூன், 2024

புதுமைப்பித்தன்


சித்தம் நன்றாக கலங்கி விட்டது
பார்ப்பவை எல்லாமே அழகாகத் தெரிகிறது
நல்லது கெட்டது இல்லாத ஒரு உலகம்
அவன் கண்முன் விரிகிறது...

எச்சரிக்கையாக இருங்கள்
அவன் எது சொன்னாலும் பலிக்கும்
ஊரே கூடி சிரிக்கும் என்றாலும்
எல்லாமே அவன் இஷ்டப்படி தான் நடக்கும்...

நீ ஆட்டோகிராப் கேட்டு நிற்கும்
நட்சத்திரம் போலில்லை
போலியும் இல்லை
இவன் விசித்திரம்
எந்த மகாக் கலைஞனும்
வரைய இயலாத ஓவியம்

நம் எல்லைக்குள்
நம்மை இருக்கச் செய்யும்
ஆண்டவன்... எழுத்தை ஆண்டவன்

திரு நெல்  வேலி
சென்னை உப்பு வேலி
இடையில் வாழ்ந்தாலும்
பிரபஞ்சம் எங்கும் பறந்து திரிந்த
பறவைகள் இரண்டு
ஒன்று கவிச் சித்தன்
எங்கள் பா ரதி
இவன் கதைச் சித்தன்
எங்கள் புதுமைப்பித்தன்...


சனி, 29 ஜூன், 2024


மயானத்திலிருந்து வெளியே வந்ததும்
மீண்டும் நீ யாரோ
நான் யாரோ...

மீண்டும் நீ
மரணிக்கப் போவதுமில்லை
நாம் சந்திக்கப் போவதுமில்லை

மறந்து வாழ்வது
பழகிவிட்ட ஒன்றுதான்
மொத்தமாக நீ மறந்தாய்
வழக்கம்போல நான் மறந்தேன்
     
காலை கண்ணாடியில்
மாலை கண் ஆடியில்
எனை நானே புதைப்பேன்
நடுவில் எண்ணிலாமல் மறப்பேன்

மொத்தமாக ஒருநாள் மறப்பேன்
மயானத்திற்கு உள்ளே வந்ததும்
மீண்டும் நீ அறிவாயோ
நான் அறிவேனோ...

வெள்ளி, 28 ஜூன், 2024


முழுவதுமாக
அழுது தீர்த்துவிட வேண்டும்
வெண் மேகமாக வேண்டும்

இந்த வாழ்வை
தூக்கிச் சுமந்தது போதும்
காற்றிடம் தந்துவிட வேண்டும்

காற்றின் போக்கு
கடவுள் போக்கு
போகிற போக்கில் போகலாமே...


வியாழன், 27 ஜூன், 2024


நிறைய பேர் இருந்தோம்
ஏதும் இல்லாத போது
நண்பர்கள் நாங்கள்
நிறைய பேர் இருந்தோம்
ஏதும் இல்லாத போது

ஏதும் இல்லாமல்
போகும் ஒர் நாளில்
மீண்டும் எல்லோரும்
வருவார்கள் மாலையோடு

மீண்டும் எல்லோரும்
வருவார்கள் மாலையோடு...
ஊர் பார்க்கச் சிலர்
எனைப் பார்க்கச் சிலர்

ஏதும் இல்லாமல்
போகும் இடம் தன்னில்
நிறைய பேர் கிடைப்பார்கள்
அன்று போல்
கண்ணீரைத் துடைப்பார்கள்

ஏதும் இல்லாமல்
கிடைத்த நண்பர்கள் போலில்லை
வேறெந்த நண்பர்களும்...


புதன், 26 ஜூன், 2024


இரவில் இறந்திட வேண்டும்
சில நிமிடங்கள் முன்பேனும்
அது தெரிந்திட வேண்டும்
வெள்ளை மெழுகுவர்த்தி வேண்டும்
அதைப் பற்ற வைக்க வேண்டும்
தனிமையில் தனிமையில்
அதைப் பார்த்திருக்க வேண்டும்
மெல்ல மெல்ல நெருங்கும்
மிக மெல்லிய ஒளியில்
உயிர் கலந்திட வேண்டும்
மரணம் அணைக்கும் பொழுதும்
வாழ்ந்திட வேண்டும்
வாழ்ந்திட வேண்டும்
வாழ்ந்திட வேண்டும்...


செவ்வாய், 25 ஜூன், 2024


தடைகளைக் கூறி
தளும்பி அழும் எறும்புகளை
இதுவரைக் கண்டதில்லை...

மதிலோ மலையோ
குளிரோ வெயிலோ
நகர்ந்து செல்லும் வாழ்க்கை

தடைகளைக் கூறி
தளும்பி அழும் எறும்புகளை
இதுவரைக் கண்டதில்லை... 

திங்கள், 24 ஜூன், 2024


இந்த உலகத்தோடு
சண்டையிட்டுக் கொண்டே இருந்தால்
எப்போதுதான் வாழ்வது...


ஞாயிறு, 23 ஜூன், 2024


மூன்றாம் நாளில் மட்டுமல்ல
முதல் நாள் முதல்
இதுநாள் வரையிலும்
ஒவ்வொரு நாளும்
உயிர்த்தெழுகிறவர்
ஏழைகள்...

சுமக்கும் சிலுவையிலேயே
தூங்கி எழுகிற வாழ்க்கை
தூக்கி அலைகிற பிழைப்பு

எல்லோரும் சமமாய்
வாழ்ந்திடும் கனவிற்கு
எதிரானவர்களுக்கு ஏது பாவமன்னிப்பு...


சனி, 22 ஜூன், 2024


சாலை கடக்கும்
பட்டாம்பூச்சிக்கு
ஏனோ படபடப்பு...


வெள்ளி, 21 ஜூன், 2024


வான் கடல்
மேக அலைகள்
கால்கள் நனைக்க முடியாமல்
கண்கள் நனைக்கிறேன்

அன்று அருகில் இருந்தவள்
இன்று துளியில் இருக்கிறாள்...


வியாழன், 20 ஜூன், 2024


எத்தனைத் துளிகள்
எண்ணி விட்டேன்
அத்தனையும்
உன்னைத் தொட்ட
மழைத் துளிகள்

ஒரு துளி மட்டும்
எண்ணிக்கைப் பிழை
அதை நீக்கி வருவதுவே
சரியான விடை

எண்ணிக் கை
கடைசி துளியாய் மாறி
உன்னைத் தொட்ட
கனவின் கை...


புதன், 19 ஜூன், 2024


உன்
கலைந்து ஆடும் கூந்தல் போல
நான் கண்டதில்லை நடனம்...


செவ்வாய், 18 ஜூன், 2024


உடைந்த கட்டிடம்
உனைப் போல் தெரிகிறதென்றால்
என்ன அர்த்தம்?

ஒரு பாலைவனம்
என்னைத் தொடர்ந்து வருகிறதென்றால்
என்ன அர்த்தம்?

விடைகள் இருந்தும்
கேள்விகள் விடாமல் எழுகிறதென்றால்
என்ன அர்த்தம்?...



திங்கள், 17 ஜூன், 2024


ஆறாம் அறிவு வேண்டாம்
இறைவா
சிறகுகள் வேண்டும்
தருவாயா...

எனக்கு ஆடையும்
நிலத்து வேலியும்
யானைக் காலின் சங்கிலியா...

ஆடை தாண்டி
வேலி தாண்டி
வானம் ஏறிப் போகவேண்டும்...

ஆறாம் அறிவு வேண்டாம்
இறைவா
சிறகுகள் வேண்டும்
தருவாயா...


ஞாயிறு, 16 ஜூன், 2024

இசைஞானி


மூடா...
தீ மூளும்
மண் மூடும்
இடையில் நீ மூடும்
ஏதும் நிலைக்காது
போடா...
எப்பவுமே ராஜா
எங்கள் இசை ராஜா


சனி, 15 ஜூன், 2024


காதலியோ காதலனோ
கள்ளக் காதலியோ
கள்ளக் காதலனோ
ஒரு நல்லக் காதல்
எல்லோர் வாழ்விலும் பூக்க வேண்டும்

பிடிக்காத உறவுகளிடம்
சொல்லி விடுங்கள்
அவர்களுக்கு பிடித்த உறவு
எங்கேனும் பூத்திருக்கும்
எங்கேனும் பூக்கும்
தன்னுள்ளேனும் பூக்கும்
பிடிக்காத உறவுகளிடம்
சொல்லி விடுங்கள்...

இன்பத்தைத் தேடுங்கள்
இன்பத்தையே கொடுங்கள்
துன்பம் தேடி
ஏன் துன்பத்தையே தருகிறீர்கள்? 

வெள்ளி, 14 ஜூன், 2024


அழகான கண்களுக்கு
எல்லாமே அழகாகத் தான் தெரியும்
நீயென்னை அழகில்லை என்று சொன்னாலும்
நீ அழகாகவே இருக்கிறாய்...


வியாழன், 13 ஜூன், 2024


நாளும் பொழுதும்
விளையாட்டு
சேர்ந்து ஆடி
உயிர்க் கூட்டு...


புதன், 12 ஜூன், 2024


கண்ணாமூச்சி வாழ்க்கை
உடலுக்குள் ஒளிந்து
உலகத்தைப் பார்ப்பது
உள்ளத்தைப் பார்ப்பது
எவருக்கும் தெரியாது
எல்லோருக்கும் உண்டு
உள்ளும் வெளியும்
பரம ரகசியம்...


செவ்வாய், 11 ஜூன், 2024


போகிற போக்கில்
போவது வாழ்க்கை
மற்றதெல்லாமும் பிழைப்பு...


திங்கள், 10 ஜூன், 2024


எப்பேர்ப்பட்ட இருளும் விடியும்தானே
வலியும் வறுமையும் மாறாதா என்ன?

விடியும்போது எழுந்து
இருளும்போது தூங்கு
எல்லாமே சுகமாகும்...
என்று பாடிச் செல்கிறது
ஒரு கானப்பறவை


ஞாயிறு, 9 ஜூன், 2024


உனைக் கண்டு
நான் மலர்ந்த
நிமிடங்களை மறவேன்...
மறக்கின்ற நாழிகையில்
கண்மூடி உதிர்வேன்...


சனி, 8 ஜூன், 2024


கவிதை என்பது
முத்தம் போல

அது
இப்படி இருக்க வேண்டும்
அப்படி இருக்க வேண்டும்
என்று
எப்படி வேண்டுமானாலும்
பேசிக் கொள்ளுங்கள்

கவிதை என்பது
முத்தம் போல

தந்துவிட்டதன் பின்
விளக்கம் எல்லாம் வேண்டாம்
சிறு அமைதி வேண்டும்
அதிலிருந்து
பேரமைதிக்குப் போக...

கவிதை என்பது
யுத்தம் போல

சார்ந்தவரைத் தவிர
பிறர் யாவர்க்கும்
அர்த்தமில்லாமல் தோன்றும்

கவிதை என்பது
யுத்தம் போல

காயம்பட்ட இதயம்
ஆயுதம் இன்றி
இப்படியும்
தனித்துப் போராடும்...

சில நேரம் முத்தம்
சில நேரம் யுத்தம்
இன்னும் சிலசில என
சில நேரங்களில்
சில கவிதைகள்

ஒரு போல
ஒரு பொழுதும்
இருப்பதில்லை

ஒரு வரையறைக்குள்
சிறை படுத்தல்
அர்த்தமில்லை


வெள்ளி, 7 ஜூன், 2024


என்றும் மகிழ்
எதிலும் மகிழ்
சிரித்து மகிழ்
அதையே கொடுத்து மகிழ்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இனியன்



உன் விழியின் ஓரத்தில்
சிறு இடம் கொடு
இந்த உலகின் ஓரத்தில்
நான் வாழ்ந்து கொள்கிறேன்...


வியாழன், 6 ஜூன், 2024


சிலரின் சிகை அசைவு
காற்றில் அசைந்து அசைந்து
நிஜத்தைத் திருத்தி
உன்னை வரைகிறது...

புதன், 5 ஜூன், 2024


மேகங்களை
வரைந்து முடிப்பதற்குள்
வேறு மாதிரி வரைந்து விடுகிறாள்
இறைவி
வாழ்வையும் கூட...

அவளே ஓவியள்
அவளே
வரைந்த மேகமும்
அவளே
பொழியும் மழையும்
அவளே
நனையும் நானும்...

செவ்வாய், 4 ஜூன், 2024

தேர்தல் நிலவரம்


 (சிறுகதை - 2) 


"என்னப்பா யாரு ஜெயிச்சாங்க?" (என்று அந்த அம்மா) 

பிஜேபி (என்று நான் சொல்ல) 


"திமுக வரலயா..." 

அவங்க 40க்கு 40 ஜெயிச்சிட்டாங்க


"ஓ 80தா..."

இல்ல மொத்தம் 40, அந்த 40லயும் ஜெயிச்சிட்டாங்க


"ஓ... ஸ்டாலின் வந்துட்டாருல..."

சிரித்துக்கொண்டே ஆமா ஆமா வந்துட்டாரு 

(அவளுக்கு எல்லாவற்றையும் புரிய வைக்க வேண்டும் என்ற நோக்குடன், தானாக முன்வந்து) 

தமிழ்நாட்டுல ஸ்டாலின் 40ம் ஜெயிச்சி வந்துட்டாரு. இந்தியாவுல மொத்தம் 543, அதுல மோடி 290/ ராகுல் காந்தி 235/ மற்றவை 18. மோடி தான் அதிகம். 


"அப்ப ஸ்டாலினோட வருமே அந்த புள்ள ஜெயிச்சிடுச்சா?" 

ராகுல் காந்தி தானே, இல்ல மோடி தான். 


"ஏன் ஸ்டாலின் தான் ஜெயிச்சிடுச்சுல"

ஸ்டாலின் தமிழ்நாட்டுல தான். இந்தியாவுல மோடி தான். 


"பாவம் அந்த புள்ள...(ராகுல்காந்தி)" 

ஆனாலும் காங்கிரஸ் கொஞ்சம் தான் கம்மி. நாளைக்கு தான் சரியா தெரிய வரும். 

யாரு உண்மையில் ஜெயிக்கப் போறாங்கன்னு. 


"அப்ப மோடி வர மாட்டாரா?" 

நாளைக்கு சரியா தெரிஞ்சிடும் அம்மா. 


"பாவம் அவர்தான் கொரானா அப்ப 3000 போட்டாரு எனக்கும், என் மருமகளுக்கும்..." 

ஓ அப்படியா... எப்ப? முதல் கொரானலயா? 2வது கொரானலயா? 


"தெரியல... கொரானா அப்ப போட்டாரு" 

சொல்லிட்டு வெள்ளந்தியா போறாங்க அந்த அம்மா... 


எத்தனை முறை கேஸ் வீட்டுக்கு வரும் போதெல்லாம் இந்த அம்மா மோடிய சபிச்சி இருக்கும். ஆனா ஏன் இப்ப அவருக்காக ஜெபிக்குது... அவங்களுக்கு அது புரியல, எனக்கு இது புரியல... இந்த ரெண்டுக்கும் நடுவுல இந்த அரசியல்வாதிங்க பண்றது அவங்களுக்கே புரிஞ்சி தான் செய்றாங்களான்னும் தெரில... 


காந்தியோட அந்த மெல்லிய புன்னகை மனதில் வந்து போகிறது. ஒருவகையில் மோடி சொன்னது கூட சரி போலத்தான் தோனுது. (காந்தி படம் வந்த பிறகு மட்டும் என்னத்த காந்திய பத்தி தெரிஞ்சுகிட்டோம்) 


மழை வந்தால்
ஆட்டத்தை ஆரம்பிப்பவர்கள்
நாங்கள்

இந்த அனுபவத்திற்கு
விலையில்லை
அந்தஸ்து இல்லை

பவுண்டரிக்கு லட்சம் இல்லை
எந்த லட்சியமும் இல்லை
தோற்றாலும் வென்றாலும்
நாங்கள் எதிரிகள் ஆவதில்லை

உலகமே கோப்பை
எல்லா கவலைகளுக்கும்
குட் பை...



திங்கள், 3 ஜூன், 2024


தென்னை மரத்தின் கனவில்
யார் வந்தது?
என்னைப் போல் அதுவும்
பிறகு தூங்கவேயில்லை...


ஞாயிறு, 2 ஜூன், 2024


இசை ராஜா
இசையில் என்றும்
இளைய ராஜா

இதயங்களுக்கு
பின்னணி இசைத்த
இதய ராஜா

பட்டாம்பூச்சியாக, பறவையாக
மாற்றிடும்
மந்திர ராஜா

நமது இசைஞானி
இளையராஜாவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

சனி, 1 ஜூன், 2024


இரண்டாயிரம் சிலைகள் அல்ல
இரண்டாயிரம் பிழைகள்
ஆயிரம் பெரியார் வந்தாலும்
உங்களத் திருத்த முடியாதுடா...

பத்து நாள் பட்டினிப் போட்டு
குளிரூட்டி இல்லாமல்
குடிசையில் தூங்கச் செய்து
மினரல் வாட்டருக்குப் பதிலாக
குழாய் தண்ணீர் குடிக்க வைத்து
பதினோராம் நாள்
ரேஷன் அரிசி கஞ்சி கொடுத்தால்
ஒருவேளை திருத்தலாம்...

கள்ளப் பணத்தை எல்லாம்
கல்விக்குத் தாருங்கள்
எல்லோருக்கும் சமமான
கல்வி தீபம் ஏற்றுங்கள்
வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுங்கள்
மக்கள் வாழ்க்கைத்தரம் கூட்டுங்கள்
நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்
உண்மையான சிரிப்பை உங்களில் காண்பீர்கள்
சிலையின்றி மனதில் சித்திரம் வரையுங்கள்
பயந்து வாழ்வது போதும் தலைவர்களே
சிரித்து வாழுங்கள்
பிறர் சிரிக்க வாழுங்கள்...