நண்பனோடு இருந்தவரை
உலகம் எங்களுடையதாய் இருந்தது
எங்கும் போய் வருவோம்
எல்லோரையும் வாழ விடுவோம்
எங்கள் சுதந்திரத்தை
எல்லோர்க்கும் பகிர்ந்தளித்தோம்
எங்கள் உலகமாக இருந்தவரை
எல்லாம் நன்றாகவே இருந்தது...
ஒர்நாளில்
வேலை கிடைத்துவிட்டதாக
பணம் கிடைத்துவிட்டதாக
நிலம் கிடைத்துவிட்டதாக
வீடு கிடைத்துவிட்டதாக
வாழ்க்கை கிடைத்துவிட்டதாக
வாகனத்தில் இருந்தவாறே சொன்னான்
எங்கள் உலகம் அங்கேயே
தொலைந்துவிட்டதாகத் தோன்றியது...
உலகை விட்டுவிட்டு
உடைமைகளை வாங்குகிற வரிசையில்
எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள்
எனக்கது பிடிக்கவில்லை
உலகை தமதென்று சொல்ல
நண்பன் உடனில்லை
எங்கும் போய்வரப் பிடிக்கவில்லை
எனை நானே வாழ விடுவதுமில்லை...
இப்போது வேறு உலகில் இருக்கிறேன்
அடிக்கடி பைத்தியம் கிடைக்கிறது
அதுவே மிகவும் பிடிக்கிறது
அதை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கிறேன்
பிடிக்கவில்லை என்றாலும்
சிறிதேனும் எடுத்துச் செல்லுங்கள்
எப்போதேனும் கண்டிப்பாகப் பிடிக்கும்
இதயம் வேறுமாதிரித் துடிக்கும்
வானத்திற்குக் கூட்டிச் செல்லும்
வானத்தில் வரிசை இல்லை
நண்பனோடு இணையலாம்
எங்கும் போய் வரலாம்
மீண்டும் உலகம் நம்முடையதாகும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக