காலடி ஓசைகள் எல்லாம்
நகரங்களை விட்டு தூரப் போனது
நகரங்களில் பாதங்கள் மெதுவாக
மிகக் குறைவாகப் பேசுகிறது
பள்ளிக்கு செல்கையில்
நண்பர்கள் நாங்கள் பேசுவதை விட
எங்கள் பாதங்கள் அதிகம் பேசியது
நாங்கள் ஓடி விளையாடையில்
பாதங்கள் தரையைத் தட்டி
உற்சாகப் படுத்தியது
வரும் முன்னே எச்சரிக்கும்
ஆசிரியர் பாதங்கள்
எச்சரிக்கையாய் இருந்தும்
சத்தமில்லாமல் ஏமாற்றிப் போகும்
களவாணி பாதங்கள்
ஆசை ஆசையாய் அன்னமிடும்
அம்மாவின் பாதங்கள்
இன்னும் கொஞ்சம் சாப்பிடச் சொல்லும்
அருகில் இல்லை என்றாலும்
அப்பாவின் பாதங்கள்
எனக்காகவே பேசி அலையும்
கண்மூடிச் சொல்வேன்
அன்பே உன்னுடைய பாதங்கள்
திருட்டுப் பூனை போல
எனை திருடிச் செல்ல வரும்...
உலகின் பொது மொழி
இன்றும் கிராமங்களில் வாழும் மொழி
நடைமொழி தொடர்வோம் தோழர்களே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக