வெள்ளி, 30 செப்டம்பர், 2022


பெருகி வருகிறது
சாலையில்
வாகன நெரிசல்...

காரில் செல்பவரைப் பார்த்து
பைக்கில் செல்பவர் சிரிக்கிறார்
பைக்கில் செல்பவரைப் பார்த்து
சைக்கிளில் செல்பவர் சிரிக்கிறார்
சைக்கிளில் செல்பவரைப் பார்த்து
நடந்து போகிறவர் சிரிக்கிறார்
நடந்து போகிறவரைப் பார்த்து
நடைபாதையில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்
மதில் மேல் குரங்கு ஒன்று
அவரைப் பார்த்து சிரிக்கிறது
வெண்ணிலாவும் வந்துவிட்டது
யாரைப் பார்த்து சிரிக்கிறது...

பெருகி வருகிறது
சாலையில்
வாகன நெரிசல்...

ஆமாம்
சிரித்து தான்
கடக்க வேண்டும்

அழுதால்
சாலை தாங்காது
வடியாத நீர் இன்னும்
இங்கே வற்றாமல் உள்ளது...


வியாழன், 29 செப்டம்பர், 2022


மண்ணில் மட்டுமல்ல
எல்லோர் மனதிலும்
ஒரு சுடுகாடு

எப்போதும் 
புதைந்துகொண்டோ எரிந்துகொண்டோ
சில நினைவுகள்...

மண்ணில் மட்டுமல்ல
எல்லோர் மனதிலும்
ஒரு பூந்தோட்டம்

எப்போதும்
பூக்கும் மணக்கும்
சில நியாபகங்கள்...


புதன், 28 செப்டம்பர், 2022


திரைச்சீலைக்குள்
சமாதானம் ஆகாதொரு பறவை
அதன் கனவெல்லாம் சமாதானப் பறவைகள்...


செவ்வாய், 27 செப்டம்பர், 2022


கொஞ்சநேரம் இலையாக
வந்தமர்ந்த பறவை
கொஞ்சநேரம் இலையாக
பார்த்துக்கொண்டிருந்த நான்
கொஞ்சநேரம் இலையாக
மாறிடும் உலகம்
கொஞ்சநேரம் இலையாக
கொஞ்சநேரம் மழையாக
கொஞ்சநேரம் வானாக
கொஞ்சநேரம் நீயாக
கொஞ்சம் கொஞ்சமாய்
நகர்கிறது வாழ்க்கை...


திங்கள், 26 செப்டம்பர், 2022


கூண்டைத் திறந்து விடு
பறவை பறக்கும்
உனக்கும் சிறகு முளைக்கும்...


ஞாயிறு, 25 செப்டம்பர், 2022


திறந்துவிடச் சொல்லி
ஓயாமல் கீச்சிடுகிறது
கூண்டுப் பறவைகள்

மனம் திறக்காத மனித மிருகங்கள்
மாயக் கூண்டுக்குள்
அடிமைகளாக அடியெடுத்து
இங்கும் அங்கும் அலைகின்றன...

அவை எப்போதும் கூண்டுகளை
திறந்து விடுவதில்லை 

சனி, 24 செப்டம்பர், 2022


வானில் நான் இன்னும் குழந்தைதான்
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே
வாங்கச் சென்ற பொருட்களை மறப்பேன்
மறப்பேன் என்று எழுதித் தந்த
காகிதத் துண்டையும் இழப்பேன்
பின் தலையில் சொறிந்து
மறந்ததை எடுப்பேன்
சர்க்கரை வாங்கித் திரும்புகையில்
சிறிது மண்ணில் இறைப்பேன்
என்னைப் போலவே வந்து
எண்ணுகிறது ஒரு எறும்பு
மண்ணில் நீ இன்னும் குழந்தைதான்
வானில் நான் இன்னும் குழந்தைதான்...
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே
மீண்டும் மறந்து கொண்டிருக்கிறேன்
வாங்கி வந்ததையெல்லாம்...


வெள்ளி, 23 செப்டம்பர், 2022

ஒளியின் பாதையில் நிழலும்
நிழலின் பாதையில் ஒளியும்
ஒன்றுக்காக ஒன்று காத்திருக்கும்
மௌனமாக ஒன்றையொன்று பார்த்திருக்கும்

அருகருகே இருப்பதாகத் தெரியும்
தனித்தனியே மாறிமாறிச் சுழலும்
கானல் நீரில் ஒன்றிணையும்
இடைவெளியின்றி கட்டித் தழுவும்


வியாழன், 22 செப்டம்பர், 2022

 

நெருஞ்சில் முத்தங்கள்
நெருங்கிப் பழகிய பாதங்கள்
நடக்கும்போது பறக்கும்
நொடியில் யாரை நினைக்கும்...


புதன், 21 செப்டம்பர், 2022


நீர் இல்லாத நதியில்
ஓடிக்கொண்டிருக்கிறது நினைவுகள்
அதில் நனைந்து கொண்டிருக்கிறது கால்கள்...

செவ்வாய், 20 செப்டம்பர், 2022


எல்லாம் போலியாக உள்ளது
ஒரு உண்மை படாதபாடு படுகிறது
தன்னைப் போலியாக மாற்றிக்கொள்ள...


திங்கள், 19 செப்டம்பர், 2022


முளைத்துக் கொண்டிருப்பது
இரவா சிறகா
நான் பறக்கத் துவங்குகிறேன்...


ஞாயிறு, 18 செப்டம்பர், 2022


வேற்று உலகம் இருக்கிறது
அங்கிருந்துதான் வந்திருக்கிறேன்
இங்கிருந்து பார்த்தால் தெரிகிறது...

மழலையாக ஒரு உலகில்
மல்லாந்து மணலில் படுத்து ஒரு உலகில்
அவ்வுளகில் இப்போதும் ஒரு இணை விளையாடுகிறது
ஒரு துணை பக்கத்தில் படுத்திருக்கிறது...


சனி, 17 செப்டம்பர், 2022


புகை ஊதும் போதெல்லாம்
சங்குச் சத்தம் கேட்கிறது
எச்சரிக்கை மணி அடிக்கிறது
எச்சை துப்பி மனம் அழிக்கிறது
உள்ளுணர்வு முள்ளாய் வாயைத் தைக்கிறது
இரத்தம் சீறி வந்து தையல் பிரிகின்றது
முகம் தெரியாதவர்கள் ஊர்வலம் போல்
புகை மௌனமாக மெல்ல நகர்கிறது...

வெள்ளி, 16 செப்டம்பர், 2022


சந்தோசத்தில் ஒன்று
துக்கத்தில் ஒன்று
இன்னும் விட்டபாடில்லை
இந்த சிகரெட்...

எல்லா காரணங்களிலும்
ஒரு நியாயம் இருக்கிறது
எல்லா நியாயங்களிலும்
ஒரு வலி இருக்கிறது

இரு விரல் துப்பாக்கியில்
எனை நானே குறி வைக்கிறேன்
வெண்புகை குண்டுகளை
நெஞ்சத்தில் பாய்ச்சுகிறேன்

கதறும் நுரையீரல்
புகையுள் தினம் அழுது
பழிவாங்க ஆகும் பழுது
தொடர் இருமல் அதன் சிரிப்பு...


வியாழன், 15 செப்டம்பர், 2022


காலடி ஓசைகள் எல்லாம்
நகரங்களை விட்டு தூரப் போனது

நகரங்களில் பாதங்கள் மெதுவாக
மிகக் குறைவாகப் பேசுகிறது

பள்ளிக்கு செல்கையில்
நண்பர்கள் நாங்கள் பேசுவதை விட
எங்கள் பாதங்கள் அதிகம் பேசியது

நாங்கள் ஓடி விளையாடையில்
பாதங்கள் தரையைத் தட்டி
உற்சாகப் படுத்தியது

வரும் முன்னே எச்சரிக்கும்
ஆசிரியர் பாதங்கள்

எச்சரிக்கையாய் இருந்தும்
சத்தமில்லாமல் ஏமாற்றிப் போகும்
களவாணி பாதங்கள்

ஆசை ஆசையாய் அன்னமிடும்
அம்மாவின் பாதங்கள்
இன்னும் கொஞ்சம் சாப்பிடச் சொல்லும்

அருகில் இல்லை என்றாலும்
அப்பாவின் பாதங்கள்
எனக்காகவே பேசி அலையும்

கண்மூடிச் சொல்வேன்
அன்பே உன்னுடைய பாதங்கள்
திருட்டுப் பூனை போல
எனை திருடிச் செல்ல வரும்...

உலகின் பொது மொழி
இன்றும் கிராமங்களில் வாழும் மொழி
நடைமொழி தொடர்வோம் தோழர்களே...


புதன், 14 செப்டம்பர், 2022


உண்மையாக மட்டும்தான் இருக்கத் தெரியும்
உண்மை மட்டும்தான் என்னுடன்
பொய்யாக மட்டும்தான் இருக்கத் தெரியும்
பொம்மை மட்டும்தான் என்னுடன்
இரண்டும் கலந்து இருக்கத் தெரிந்தால்
எல்லோரும் இருப்பார்கள் என்னுடன்...


செவ்வாய், 13 செப்டம்பர், 2022


நாவின் நாடகம் பசி
தினமும் அரங்கேறும்
யாரும் பார்ப்பதில்லை...



திங்கள், 12 செப்டம்பர், 2022


எல்லோர்க்கும் தெரியும் ஒன்றை
யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்தேன்
எல்லோரும் அதைக் கேட்டு என் பின்னே
வருவது போல உணர்ந்து நின்றேன்
அன்னாந்து வானம் பார்த்தேன்
எல்லோர்க்கும் தெரியும் ஒன்றாகவே
அது இப்போதும் அங்கேயே இருக்கின்றது

யாருக்கும் தெரியாமல் எடுக்கும் கலை
யாரிடம் கற்றது என நினைத்தேன்
உன் முகம் வந்து போகின்றது
என் இதயத்தை தொட்டுப் பார்த்தேன்
அது இப்போதும் அங்கேயே துடிக்கின்றது
தெரியாமல் எடுப்பதை மட்டுமல்ல கற்றது
தெரியாமல் வைப்பதையும் கூட...


ஞாயிறு, 11 செப்டம்பர், 2022


வீட்டிலிருந்து ஆட்டோவிற்கு
ஆட்டோவிலிருந்து மருத்துவமனைக்கு
மருத்துவமனையில் ஒரு படுக்கை கிடைக்கும்வரை
தன்னையே நம்பி இருந்தாள்
அவள் உயிரை கெட்டியாக பிடித்திருந்தாள்
அது ஒன்று மட்டும்தான்
அவள் திரும்பி வரும்வரை
எனை ஆறுதலாக பிடித்திருந்தது...


சனி, 10 செப்டம்பர், 2022


ஒன்று இரண்டு பக்கங்களில் அல்ல
சில நேரங்களில்
ஒன்று இரண்டு வார்த்தைகளிளேயே
தொலைந்து விடுகிறேன்...









பக்கத்து வீட்டு நாய்க்கு
உன் சினேகம் தெரியாது
உனக்கு பக்கத்து வீட்டு நாயின்
பாசம் புரியாது

அமைதியாய் தாண்டிச் செல்கிறாய்
என்று அதுவும்
குறைத்துக் கொண்டே இருக்கிறது
என்று நீயும்...

சாட்சியாய் இருக்கும்
எனக்கு மட்டும்தான் தெரியும்
நீ தாண்டிச் சென்று புன்னகைப்பதும்
நீ மறையும் வரை அது பார்த்து நிற்பதும்


வியாழன், 8 செப்டம்பர், 2022


புறம் காட்டி நிற்கும்
புலன்களை எல்லாம்
அகம் பார்த்து இருக்கும்
நெற்றிப் பொட்டில்
கட்டிப் போட்டது யார்?

ஐந்து குதிரை பூட்டிய
ரதம் ஒன்று
ஒற்றைக் காலில்
இழுத்து இழுத்துப் போகிறது...

உச்ச வெறி
உச்சந்தலை ஏறி
பிய்த்து எறியப் பார்க்கிறது
கண்ணுக்கு தெரியாத சங்கிலி
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறது...


புதன், 7 செப்டம்பர், 2022

 


மண்புழு மீனுக்கு
மீன் எனக்கு
நான் மண்புழுவுக்கு...

எல்லாமும் நானாக இருந்திருக்கிறேன்
என்னை நான் தந்திருக்கிறேன்
எடுத்தும் இருக்கிறேன்

பரிணாமம் வளர்ந்ததிலே
நானும் வந்தேன்
பரிகாரம் செய்திடவே
தன்னைத் தந்தேன்

உயிர்கள் ஒன்று
உயிரிலிகள் ஒன்று
எல்லாமும் ஒன்று
இந்த உலகப் பந்து...


செவ்வாய், 6 செப்டம்பர், 2022


ஒரு வானம்
பல மேகங்கள்
ஒரு ஆன்மா
பல மனிதர்கள்


திங்கள், 5 செப்டம்பர், 2022

 


வேர்கள் தவமிருக்கும்
இலைகள் ஆர்ப்பரிக்கும்
கிளைகள் சாட்சியாய் இருக்கும்
ஞானம் பூத்துக் குலுங்கும் பூக்கள்...


ஞாயிறு, 4 செப்டம்பர், 2022


எச்சரித்தே
விழிகளை பார்க்கச் சொல்கிறாய்
எக்குத்தப்பாக மாட்டிக்கொண்ட பின்புதான்
எனக்கு விளங்கியது...


சனி, 3 செப்டம்பர், 2022


உன் விழியில்
அந்தச் சுழலில்
கரையில் நின்றே காணாமல் போகிறேன்...


வெள்ளி, 2 செப்டம்பர், 2022


பூத்தது கனவு
உதிர்ந்தது நான்

சிறகு முளைத்த கனவு
உன் விழிகள்

நீ சிமிட்டச் சிமிட்ட
நான் பறக்கிறேன்...

மேகம்
நிலவு
நட்சத்திரங்கள்
அருகில் சென்று ரசிக்கிறேன்...

என்னுடனே பேசுகிறேன்
என்னுடனே மௌனிக்கிறேன்...

சித்திரம் போல்
ஒரு உலகை
என்னைச் சுற்றி வரைகிறேன்...

பூத்தது கனவு
உதிர்ந்தது நான்


வியாழன், 1 செப்டம்பர், 2022


உன்னால்
குடைக்கும்
மழைக்கும்
கொண்டாட்டம்
கும்மாளம்

கண்கள்
உடைக்கும்
இடைக்கும்
இடையில்
தள்ளாடும்

மனம்
நினைக்கும்
தவிக்கும்
துடிக்கும்
அன்றாடம்

காலம்
இணைக்கும்
வரைக்கும்
மிதக்கும்
வெற்றோடம்