வியாழன், 30 ஜூன், 2022

 


மலர்தல் கூட
மெதுவாக நடக்கும்
உதிர்தல் தான்

கண்ணீர் கூட
மெதுவாக நடக்கும்
புன்னகை தான்



புதன், 29 ஜூன், 2022

 


தெரியாததை தெரிந்து கொள்வதை விட
கடினமாக இருக்கிறது
தெரிந்ததை தெரியாமல் போகச் செய்வது

அழித்து அழித்து எழுதும்
கரும்பலகை போல் இருந்தாலென்ன
இந்த மனப் பலகை

மேலே மேலே
வரைய வரைய
கிறுக்கு ஆகிறது...



செவ்வாய், 28 ஜூன், 2022

 


அடிவானம் பொட்டிட்டு
தலைகோதும் நேரம்
சிகை யாவும்
ஒளி போல
மெருகேறி பாயும்

துளி வானம்
பனி போல
சிறு புல்லில்
வழிந்தோடும்

செவ்வானம்
இருள் சூழ
வெண் நிலவாக மாறும்

நீ வானம்
நீயும் நானும்
நாளும் பொழுதும்...



திங்கள், 27 ஜூன், 2022

 


எல்லா தாகமும் ஒன்றல்ல
பாலைவனத்து தாகம்
பேய் போல இருக்கிறது

எல்லா தாகமும் ஒன்றல்ல
உன் வீட்டைக் கடக்கும் போது தாகம்
தேவதை போல் இருக்கிறது

நீயில்லாத போது
உன் வீடு பாலைவனம்
கடந்து முடிக்க பல ஜென்மம் எடுக்கிறது...



ஞாயிறு, 26 ஜூன், 2022

 


பூ என்று
புலி மீது பட்டாம்பூச்சி
உன் நினைவுகள் சிறகசைக்கின்றன...



சனி, 25 ஜூன், 2022

 


முதல்முறை பார்த்து சிரித்த குழந்தை
இரண்டாம் முறை வெறுமனே பார்த்தது
மூன்றாம் முறை பார்த்து அழுதது

முதலில் பார்ப்பது தன் விருப்பத்தை
இரண்டாவது வெறுமையை
மூன்றாவது ஏமாற்றத்தை

குழந்தை முன்பு குழந்தையாக வேண்டும்
அல்லது கோமாளி ஆக வேண்டும்
இல்லை குழந்தை அழுதே ஆக வேண்டும்

குழந்தைக்கு அன்யோன்யமானவர்கள்
குழந்தை ஆகலாம் கோமாளி ஆகலாம்
வாழ்வை வாழலாம்

குழந்தைக்கு அருகில் சென்று பாருங்கள்
அது உங்களைக் காட்டிக் கொடுக்கும்
உங்களுக்கு மட்டும் ரகசியமாக...


வெள்ளி, 24 ஜூன், 2022

 



புள்ளி மறையும் போது
வானம் தெரிகிறது
நான் மட்டும் தான் பார்க்கிறேன்
அது பார்க்கிறதா தெரியவில்லை

புள்ளி ஏன் பார்த்தேன்?
ஆம் அந்த வானத்தில்
இரு சூரியன்
அதன் மத்தியிலே
ஒரு நிலவு
குளிர் தேடி
கண்கள் குவித்தேன்
அப்படித்தான்
அந்த புள்ளியில் குதித்தேன்
ஆழம் அறிவதற்குள்
புள்ளி மறைந்தது
வானம் தெரிகிறது
நான் மட்டும் தான் பார்க்கிறேன்
அது பார்க்கிறதா தெரியவில்லை...



வியாழன், 23 ஜூன், 2022

 


ஒரு அழகிய மீனை
ஒரு அழகிய கொக்கு
ஒரு அழகிய கொக்கை
ஒரு அழகிய வேடன்
ஒரு அழகிய வேடனை
ஒரு அழகிய தேவதை
ஒரு அழகிய தேவதையை
ஒரு அழகிய மீனாக
மாற்றிக் கொண்டிருந்தார் கடவுள்...



புதன், 22 ஜூன், 2022

 


நேரம் பார்த்து
வேலை செய்யும்
கடிகாரங்கள் நல்ல எந்திரங்கள்
ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடி
அதன் இதயம்

நேரம் பார்த்து
வேலை செய்யும்
மனிதர்கள் கூட எந்திரங்கள்
ஒரு நிமிடத்திற்கு எழுபது துடி
அதன் இதயம்

நேரம் எண்ணும்
இயந்திரங்களை கண்டு
காலம் சிரிக்கிறது...



செவ்வாய், 21 ஜூன், 2022

 


உள்ளும் புறமும்
தாவிக் குதிக்க
எல்லோர் மீதும்
ஒரு பூனை

மதில் மேல்
பூனை போல்
புதிராய் இருக்கிறது
மனப் பூனை

பின்தொடர முடியாத
இரகசியப் பாதையில்
சத்தமில்லாமல் செல்லும்
அந்த மாயப் பூனை



திங்கள், 20 ஜூன், 2022

 


தோல்விக்கு தோழர் ஆகு
வெற்றிக்கு
தோழர்கள் தோள் கொடுப்பார்...



ஞாயிறு, 19 ஜூன், 2022

 


கடல்
அலை
மணல்
படகு
பலூன் துப்பாக்கி
ராட்டினம்
வறுகடலை
மாங்காய்த் துருவலோடு சுண்டல்
தீப்பொறியில் பொரித்த சோளம்
குதிரைச் சவாரி
மெரினாவில் நுழையும் போது
எப்போதும் குழந்தை ஆகிறேன்
நேரம் கூடக் கூட தொலைந்து போகிறேன்
இப்போதும்
என்னைக் கண்டுபிடித்து வழியனுப்ப
ஓயாமல் தேடும் கலங்கரை விளக்கு



சனி, 18 ஜூன், 2022

 


நடந்ததும், நடப்பதும் மர்மமாய்
நடக்கவிருப்பது மாயமாய்
ஒவ்வொரு நொடியும் மொக்கவிழ்கிறது
பெரும் புதிராய்
ஒவ்வொரு நொடியும் உதிர்ந்துவிடுகிறது
மௌனமாய்
ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறது
ரகசியமாய்
வாழ்வை வாழ ஆக வேண்டும்
பைத்தியமாய்...



வெள்ளி, 17 ஜூன், 2022

 


புன்னகைக்கும்
கண்ணீருக்கும்
நடுவில் நிற்க வைத்த
உனக்கு மட்டும்தான் தெரியும்...

எந்தப் பக்கம்
எனை நீ அனுப்பினாலும்
எந்தன் பக்கம் நீ இருப்பாய்
அது எனக்கு மட்டும்தான் தெரியும்...



வியாழன், 16 ஜூன், 2022

 


நிழல் பூப்பதை
அறியாத அறிவியல் பேசும்
பூக்காத தாவரங்கள் உண்டென்று...

நினைவில் பூப்பதை
அறியாது உலகம் சொல்லும்
நீ இல்லாத வீடென்று...



புதன், 15 ஜூன், 2022

 


எப்போதும் திறந்திருக்கவே விரும்பும் விழிகளை
இரவு வந்து எப்படி சமாதானம் செய்கிறது?
தெரிந்தால் பகலிலும் எனக்கு சௌகரியம்



செவ்வாய், 14 ஜூன், 2022

 


சிரிக்கும் போதே
இறக்கும் வரம் கேட்கிறேன்
கடவுளும் சிரிக்கிறார்...


திங்கள், 13 ஜூன், 2022

 


கனவில் மரித்து
நினைவில் விழிக்கின்றேன்

புதைத்த பிறகோ
எரித்த பிறகோ
நானும் கனவு
யாவும் கனவு

நினைவு வரும்வரை
நித்திய துயில்...



ஞாயிறு, 12 ஜூன், 2022

 


மின் கம்பிகளில் வரிசையாக பறவைகள்
என் நினைவு ஆடைகளை  கிளிப் இட்டு
ஈரம் உலர்த்தும்

பறந்து போய்விடும் பறவைகள்
உலர்ந்து போகும் நினைவுகள்
வெறும் மின்சாரம் பாயும் நரம்புகள்...



சனி, 11 ஜூன், 2022


கல்லுக்குள் கல்
நதிக்குள் நதி
காற்றுக்குள் காற்று
வானுக்குள் வான்
தீக்குள் தீ

எனக்குள் நான் தானே
இருக்க வேண்டும்
நீ எப்படி...



வெள்ளி, 10 ஜூன், 2022

 

சொர்க்கத்திலும் நீ
நரகத்திலும் நீ
ஆம் கண்ணீர் நீ...



வியாழன், 9 ஜூன், 2022

 


 பட்டாம்பூச்சியின் நிழல்
உன் நிழலின் இதழில்
தேன் குடித்தது

தன் நிஜத்தைப் பிரிந்து
இரு நிழல்கள்
உன் கூடவே வருகிறது

பட்டாம்பூச்சியின் நிழல் தான்
இருந்தும் கூட
அதைக் கொன்று விட்டேன்

ஒற்றை நிழலாகவே
சுற்றிச்சுற்றிக் கூட வருவேன்
ஒளிந்தும் விளையாடுவேன்

நீ அறிவாயா...



புதன், 8 ஜூன், 2022

 


பல மீன்கள் துள்ளி எழுந்தது
கடல் மேலே காத்துக் கிடந்தது
பல கண்கள்

ஒளி மீன்கள் துள்ளி குதிக்கிறது
நிலம் எங்கும் பூக்கத் துவங்கியது
பல கண்கள்

ஒரு மீனுக்காக
இப்போதும்
எப்போதும்

காத்துக் கிடக்கிறது
பூத்துக் கிடக்கிறது
இரு கண்கள்

நீ அறிவாயா...



செவ்வாய், 7 ஜூன், 2022

 


ஊர்த் திருவிழாவில் நீ
இங்கே தொலைந்து நிற்கிறேன் நான்
ஒரு பலூன் விற்பவரின் முன்னே
சிறு குழந்தையைப் போல...

பலூனில் காற்றைப் போல
யார் கண்ணுக்கும் தெரியாமல்
உன் நினைவில் நான் நிரம்பி நிற்கிறேன்...



திங்கள், 6 ஜூன், 2022

ஞாயிறு, 5 ஜூன், 2022

 


புதிய சுவாசம்
புதிய உயிர்
புதிய குழந்தை

புதிய வெளிச்சம்
புதிய இருள்
புதிய கடவுள்

புதிய இரத்தம்
புதிய இதயம்
புதிய அன்பு


சனி, 4 ஜூன், 2022

 


எறும்புக் கூட்டம் போல்தான்
மனிதக் கூட்டமும் தெரியும்
ஆனால் கூடி வாழத் தெரியாது

எறும்புக் கூட்டம் கலைந்து சென்றால்
இடம் சுத்தமாக இருக்கும்
மனிதக் கூட்டம் கலைந்து சென்றால்
இடம் குப்பையாக இருக்கும்

எறும்புக் கூட்டம்
தானே வரிசையில் போகும் வரும்
மனிதக் கூட்டத்தால் அது இயலாது

எறும்புக் கூட்டம்
இயற்கை கொடுப்பதையே உண்ணும்
மனிதக் கூட்டம்
இயற்கையை கெடுத்து உண்ணும்

ரேஷன் கார்டு
வோட்டர்ஸ் கார்டு
பேன் கார்டு
ஆதார் கார்டு
இல்லாமலே
வாழத் தெரிந்ததெல்லாம்
ஐந்தறிவு

பிறப்புச் சான்று
இறப்புச் சான்று
சாதிச் சான்று
தேவையில்லை என்பதற்கு
ஒரே சான்று
ஐந்தறிவு

சட்ட மன்றம்
பாராளுமன்றம்
எல்லாமும் கூட
மன்றாடும் இந்த
ஆறரிவுக்கு மட்டும்தானே...



வெள்ளி, 3 ஜூன், 2022

 

ஜன்னல் சிந்தும் கண்ணீர்
யாருக்கும் தெரியாது
காற்று வந்து துடைத்துவிடும்
யாருக்கும் தெரியாது
எனக்கு மட்டும் தெரியும் உருவம்
யாருக்கும் தெரியாது
ஜன்னல் சிலந்தி பின்னும் வலை
யாருக்கும் தெரியாது
சிலந்தி அல்ல இதயம் என்றும்
யாருக்கும் தெரியாது
இதயச் சிலந்தியின் இரை நானா?
எனக்கும் தெரியாது...



வியாழன், 2 ஜூன், 2022

 


போகிற போக்கில்
போகிற படகுக்கு
தெரியவே தெரியாது
போகிற இடமே
இல்லாமல் போகுமென்று...



புதன், 1 ஜூன், 2022

 


ஒரு குரலுக்கு
அக உருவம் வரையும்
அந்த ஓவியர் யார்?

எனக்குள் நானே
பேசும்போது
யாருடன் பேசுகிறேன்?

என்னுடைய மௌனம்
உன்னுடைய மௌனம்
இடம் மாறியது எப்படி?

கேள்விகளை எல்லாம்
யாரிடம் கேட்கிறேன்
பதில்களை எல்லாம்
யாரிடம் பெறுகிறேன்

வெளியே கேட்பது
வெளியே சொல்வது
நான்

உள்ளிருந்து கேட்பது
உள்ளிருந்து சொல்வது
யார்?