வெள்ளி, 25 அக்டோபர், 2024


உனக்கும் தெரியாது

எனக்கும் தெரியாது

இருவரும் சிரித்துக் கொண்டோம்


உன் பெயரை 

என் பெயரை 

தெரியாமலே கடந்து சென்றோம்


நாளையும்

நாம் சிரிக்க

இதுவே நம் ரகசிய ஒப்பந்தம்


தெரிந்த நபர்களோடு இருக்கும்போது

தெரியாமல் சிரித்து விட்டேன்

அத்தனைக் கண்களும் என்னை

பைத்தியம் என்கிறது


நீயும் எனை நினைத்து

சிரித்திருக்கக் கூடும்

எத்தனைக் கண்கள் உன்னை

பைத்தியம் என்கிறது


உனக்கும் தெரியாது

எனக்கும் தெரியாது

நேற்றையை விட கொஞ்சம் 

கூடுதலாய் சிரித்துக் கொண்டோம்


என்றால்

இன்று எத்தனைக் கண்களுக்கு

நாம் பைத்தியமோ


எத்தனையோ நாட்கள் 

இப்படியே நாம் கடந்தோம்

பெயரைக் கூட இன்னும் அறியாமலே


இப்போதெல்லாம்

என் கண்களே என்னை

பைத்தியம் என்கிறது


உன்னை

உன் கண்கள்

சொல்கிறதா... 


சொன்னால் சொல்

நம் ரகசிய ஒப்பந்தம்

இன்றோடு முடியட்டும்


உன் பெயரும்

என் பெயரும்

நம் இதழ்கள் பரிமாறட்டும்... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக