வியாழன், 31 அக்டோபர், 2024


காலிப் பூந்தொட்டியின்

கனவு பூக்குமா? 

மெய்ப்படும் எனின்

பூப்பது புதிதா... 


புதன், 30 அக்டோபர், 2024


உலகின் கடைசி இரு நபர்களும்

மூன்றாம் நபரைப் பற்றித்தான்

பேசிக் கொண்டு இருந்தார்கள்


கடவுள் 

அவர்களுக்குப் பரிசாக

ஒரு ஆப்பிளைக் கொடுத்தார்


மண்ணில் காட்டையும்

மனிதரில் கேட்டையும்

வளர்த்தது ஆப்பிள்


மீண்டும் 

காதல் அன்பு விரோதம்

தோன்றியது பெருங்கூட்டம்


மூன்றாம் போருக்குப்

போகும் வழியில்

சில ஒத்திகை நடக்கிறது


குண்டுகள் வெடிக்கிறது

குழந்தைகள் அழுகிறது

கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார்

கையில் ஒரு ஆப்பிளுடன்... 



செவ்வாய், 29 அக்டோபர், 2024


பட்டாம்பூச்சிக்குப் பகல் இருக்கிறது

மின்மினிக்கு இரவு இருக்கிறது

எனக்கு கனவு இருக்கிறது... 


திங்கள், 28 அக்டோபர், 2024


என் மீது ஏறி

நகர்ந்து கொண்டிருந்தது எறும்பு

நான் மலரா

நான் பாறையா

எண்ணுகையில்

நசுக்கிய விரலிடம்

எறும்பு கடைசியாகச் சொன்னது

'நீ மனிதன்' என்று... 


ஞாயிறு, 27 அக்டோபர், 2024


தேநீர் இல்லை

தனிமையில் அருந்தும் போது

தேவலோக நீர்... 


சனி, 26 அக்டோபர், 2024


தாயே இமயம்

அவள் அன்பே சிகரம்

உயிரே அவள் கொடுத்த உதிரம்... 


வெள்ளி, 25 அக்டோபர், 2024


உனக்கும் தெரியாது

எனக்கும் தெரியாது

இருவரும் சிரித்துக் கொண்டோம்


உன் பெயரை 

என் பெயரை 

தெரியாமலே கடந்து சென்றோம்


நாளையும்

நாம் சிரிக்க

இதுவே நம் ரகசிய ஒப்பந்தம்


தெரிந்த நபர்களோடு இருக்கும்போது

தெரியாமல் சிரித்து விட்டேன்

அத்தனைக் கண்களும் என்னை

பைத்தியம் என்கிறது


நீயும் எனை நினைத்து

சிரித்திருக்கக் கூடும்

எத்தனைக் கண்கள் உன்னை

பைத்தியம் என்கிறது


உனக்கும் தெரியாது

எனக்கும் தெரியாது

நேற்றையை விட கொஞ்சம் 

கூடுதலாய் சிரித்துக் கொண்டோம்


என்றால்

இன்று எத்தனைக் கண்களுக்கு

நாம் பைத்தியமோ


எத்தனையோ நாட்கள் 

இப்படியே நாம் கடந்தோம்

பெயரைக் கூட இன்னும் அறியாமலே


இப்போதெல்லாம்

என் கண்களே என்னை

பைத்தியம் என்கிறது


உன்னை

உன் கண்கள்

சொல்கிறதா... 


சொன்னால் சொல்

நம் ரகசிய ஒப்பந்தம்

இன்றோடு முடியட்டும்


உன் பெயரும்

என் பெயரும்

நம் இதழ்கள் பரிமாறட்டும்... 


வியாழன், 24 அக்டோபர், 2024


இலை இல்லாத

வேர் இல்லாத 

வெறும் குச்சி

தீயாக மலர்ந்தது

தானாக உதிர்ந்தது

யாருக்கும் தெரியாமல்

தேன் குடித்தப் பட்டாம்பூச்சி

புகையாக பறந்தது

நடுவானில் கரைந்தது

சாதல் சாதல் சாதல்... 


புதன், 23 அக்டோபர், 2024


திட திரவ வாயு

எந்த நிலையிலும்

உன்னைப் பிடிக்கும்


நீ பிடிக்கப் பிடிக்க

நான் என்னை அகற்றி

உன்னை நிரப்பிக் கொண்டேன்


தன்னை நிரப்பி நிரப்பி

என்னை நீ

முற்றிலும் அகற்றிவிட்டாய்


அட பைத்தியமே

இனி எந்த நிலையிலும்

நீ எனக்கு வேண்டாம்


இல்லாது நான் போனதனால்

பொல்லாத உனை அறிந்தேன்

இனி நில்லாது செல்வேன் எனைத் தேடி


நான்

நானாக இருப்பதுவே

போற்றி போற்றி... 


செவ்வாய், 22 அக்டோபர், 2024


தானே வலை பின்னி

தானே இரை ஆகும்

சிலந்தி மனிதன்... 


திங்கள், 21 அக்டோபர், 2024


இதயம் இருந்தவள் தான்

இதயம் இழந்தவள் தான்

இருக்கும் இடம் தெரியும் தான் 

இருந்தாலும் தான் என்ன?

இறுதிவரை அவனிடமே இருந்து

துடியாய்த் துடிக்கட்டும்...

இறந்தும் அவன் நினைவாய் வாழ

இப்போதிங்கு பயிற்சி செய்கிறேன் 

கல்லாய்த் தெரிகிறேன்...

இதயம் இருந்தவள் தான்

இதயம் இழந்தவள் தான்

இருக்கும் இடம் தெரியும் தான் 

இருந்தாலும் தான் என்ன...


ஞாயிறு, 20 அக்டோபர், 2024


உள்ளே மலர்ந்து

வெளியே முட்களால் மறைத்து வைக்கிறாள்

கள்ளி... 


உனக்குத் தெரியாமல் உன்னைத் தாங்கி நிற்கிறான்

முத்தம் தந்து ரத்தம் சிந்த காத்திருக்கிறான்

கள்வன்... 


சனி, 19 அக்டோபர், 2024


பசி 

ஒளிந்திருக்கும் ஆதி மிருகம்

கண்களுக்குள் பதுங்கிப் பாயக் காத்திருக்கும்... 


காடாகிலும் நாடாகிலும்

பசி வளர்ந்தால்

வேட்டையாடிக் கொல்லும்... 


காணத அந்தக் கடவுளை

வழிபட்டுப் படையல் படைக்காவிடில்

பேயாகி  இரத்தப் பலி கேட்கும்... 


வெள்ளி, 18 அக்டோபர், 2024


நிழலை நானும்

என்னை நிழலும்

பார்க்கும் வேளையில்

நான் குழந்தை... 


வியாழன், 17 அக்டோபர், 2024


என் பந்தை நிழலுக்குத் தந்தேன்

நிழல் பந்தை எனக்குத் தந்தது

ஆனாலும்

என் பந்து என்னோடு

நிழல் பந்து நிழலோடு... 



புதன், 16 அக்டோபர், 2024


தன் நிழல் தான்

என்றாலும்

நிரந்தரம் இல்லை... 


செவ்வாய், 15 அக்டோபர், 2024


நான் நானாக 

உணர்ந்த தருணங்களில்

எனக்கு இரு நிழல்கள்... 


திங்கள், 14 அக்டோபர், 2024


நீண்ட இடைவெளிக்குப் பின்

நாம் பார்த்துக் கொண்டோம்

நான் நின்றேன்

நீயும் நின்றாய்

நான் கையசைத்தேன்

நீயும் அசைத்தாய்

நான் குதித்தேன் 

நீயும் குதித்தாய்

நான் போகும் இடமெல்லாம்

நீயும் வந்தாய்

நான் உன்னோடு அமர்ந்தேன்

நீயும் என்னோடு அமர்ந்தாய்

நான் பேசினேன்

நீ மௌனித்தாய்

நான் மீண்டும் மீண்டும் பேசினேன்

நீ மௌனமாகவே இருந்தாய்

நீ மௌனமாகவே இருந்து

எனையும் மௌனமாக்கினாய்

உன் மௌனம் அமைதியானது

என் மௌனமோ அமர முடியாதது

நான் எழுந்து நின்றேன்

நீயும் நின்றாய்

நான் விலகி நடந்தேன்

என்னோடே வந்தாய்

நான் திரும்பிப் பார்க்காதது

உன்னை வருந்தச் செய்திருக்கும்

இருந்தாலும்

நீ விட்டுச் சென்றிருக்கக் கூடாது

ஒரு இரவு தான்

என்றாலும்

எத்தனையோ யுகம் எனக்கு... 


ஞாயிறு, 13 அக்டோபர், 2024



யாரும் தழுவாத முட்கள்

குத்தாமல் என்ன செய்யும்? 

தழுவும் இறகினை

அன்பாய் தாங்கிப் பிடிக்கும்... 


சனி, 12 அக்டோபர், 2024


சிதறும் துளியிலும்

உனை வரையும்

மன விழிகள்... 


வெள்ளி, 11 அக்டோபர், 2024


என்னை அவள் சந்தித்தாள்

அதுவரை 

நான் வெள்ளைத்தாள்... 


புதன், 9 அக்டோபர், 2024

"ரத்தன் நவால் டாட்டா " (28/12/1937 - 09/10/2024)


ஆடம்பரத் திருமணம்

இல்லை இல்லை

திருமணமே ஆடம்பரம்

என்று எட்ட நின்று

பற்று அகன்று

வாழ்ந்த செல்வந்தன் 

நீ

செல்வத்துள் எல்லாந் தலை... 


செயற்கையைத் துறந்து

இயற்கையில் கலந்து

2.736800640 பில்லியன் பக்கங்களில்

எளிமையை எழுதி வைத்தவன் நீ

என்றும் நின்

பண்பு பாராட்டும் உலகு... 


 


காதல் செய்வதை விட

நம்மில் 

காதல் செய்வதைப் பார்த்திருப்போம்... 


செவ்வாய், 8 அக்டோபர், 2024


மெல்ல மலர்ந்தது ஆமை

வந்து அமர்ந்தது பட்டாம்பூச்சி

தேனாக சுரந்தது மரணம்... 


திங்கள், 7 அக்டோபர், 2024


கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது

இந்தப் பிரபஞ்சப் பரஸ்பரத்தைக்

கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது...


ஞாயிறு, 6 அக்டோபர், 2024


தூரப் போகும் பறவையில் ஒன்று

எப்போது உட்கார்ந்ததோ

ஜன்னல் கம்பி

இப்போது அழுகின்றது... 


அந்தப் பறவை நகங்களில் கீறி

கம்பி இதயத்தில் என்ன எழுதியதோ

கண்ணீரால் கம்பி 

பதில் மடல் வரைகிறது...


சனி, 5 அக்டோபர், 2024


நண்பர்கள் நாங்கள் 

விளையாடும் கைப்பந்து

எந்தக் கைகள் இன்றியும்

தனியே ஆடும்

அதுவே ஓயும்


மண்ணோடு விளையாடுதோ

விண்ணோடு விளையாடுதோ

தன்னோடே விளையாடுதோ

கடவுளோடு விளையாடுதோ


ஆடாமல் அசையாமல்

இருக்கும் அப்போது

யாரோடு விளையாடுதோ... 


வெள்ளி, 4 அக்டோபர், 2024


முடிந்து முடிந்து துவங்கும் 

துவங்கித் துவங்கி முடியும்

பார்த்துக் கொண்டிரு 

அல்லது

பார்க்காதது போல் இருந்துவிடு

காற்றும் தூசும் 

விளையாடும் விளையாட்டு

முடிந்து முடிந்து துவங்கும் 

துவங்கித் துவங்கி முடியும்... 


பெருங்கோடிக்காரனும்

தெருக்கோடிக்காரனும்

காற்றும் தூசும் 

விளையாடும் விளையாட்டு

பார்த்துக் கொண்டிரு 

அல்லது

பார்க்காதது போல் இருந்துவிடு

முடிந்து முடிந்து துவங்கும் 

துவங்கித் துவங்கி முடியும்... 


இன்பமும் வேதனையும் 

காதலும் பிரிவும்

காற்றும் தூசும் 

விளையாடும் விளையாட்டு

பார்த்துக் கொண்டிரு 

அல்லது

பார்க்காதது போல் இருந்துவிடு

முடிந்து முடிந்து துவங்கும் 

துவங்கித் துவங்கி முடியும்... 


வியாழன், 3 அக்டோபர், 2024

 


வானம் கிரீடம்

பூமி அரியாசனம்

எல்லோரும் அரசர்கள்... 














புதன், 2 அக்டோபர், 2024


இலையில்லை

காம்பில்லை

அந்தப் பூவிற்கு

கைக் கால் இருந்தது... 


செவ்வாய், 1 அக்டோபர், 2024



வந்தமர்ந்து

பறந்து போகும்

வண்ணத்துப்பூச்சி காதல்...