புதன், 31 ஜூலை, 2024


உருவங்களைக் கடவுளாகச் சிலர்
அருவங்களைக் கடவுளாகச் சிலர்
அனைத்தும் கடவுளாகச் சிலர்
கடவுள் இல்லையெனச் சிலர்
யுத்தத்தால் இறக்கும் சிலர்
பஞ்சத்தால் இறக்கும் சிலர்
பசியால் இறக்கும் சிலர்
பேரிடரில் இறக்கும் சிலர்
என எப்போதும் உலகில் உளர்...


செவ்வாய், 30 ஜூலை, 2024


உள்ளே
ஒளி இருந்தால்
உடலும் கோயில்
இறைவன் இடம்
தன்னைத் தந்துவிடு
இறைவனிடம்...


திங்கள், 29 ஜூலை, 2024


உழைத்து மட்டுமே
வாழும் ஒரு உலகம் இருக்கிறது
தூக்கம் தினம் இரவில்
அவர்மேல் காதல் கொள்கிறது... 

ஞாயிறு, 28 ஜூலை, 2024


புகார் கூறி
வளர்க்கும் குழந்தைகள்
பெரும் புகாராய்
வளர்ந்து நிற்கிறார்கள்...

அன்பு கூறி
வளர்க்கும் குழந்தைகள்
பேரன்பாய் வளர்கிறார்கள்...



சனி, 27 ஜூலை, 2024


வென்று வாழ்வது சோதனை
தோற்றும் வாழ்வதே சாதனை


வெள்ளி, 26 ஜூலை, 2024


தவிக்கும் 
தனித்தனியே பரிதவிக்கும்
உதடுகளை
பிரித்துவைத்தே சிலை வடித்த
கலைஞனுக்குக்
கல் இதயம்...


வியாழன், 25 ஜூலை, 2024

புதன், 24 ஜூலை, 2024


எல்லாமும்
முதல் மூச்சு
எல்லாமும்
இறுதி மூச்சு


செவ்வாய், 23 ஜூலை, 2024


யாரும் இல்லாத
பொழுது
யார் வந்தாலும்
விடுவதில்லை...







திங்கள், 22 ஜூலை, 2024


அள்ளி அள்ளிப்
பருகும் அமுதம்
காற்று

அளவுக்கு மீறியும்
நஞ்சு ஆகாத
மூச்சு

மரணம் வரை
தொடரும் பிரார்த்தனை
கிடைக்கும் அருட்கொடை...


ஞாயிறு, 21 ஜூலை, 2024

 


ரஜினி: கமல் 'இந்த அரசியல்வாதிகளுக்கு உடல் நலச் சான்று இல்லாமல் ஆட்சி அதிகாரம் தரக்கூடாதுபா...
நாமினேஷன் பண்ணும்போதே இதையும் பரிசீலிக்கனும்'
இது எப்டி இருக்கு...

கமல்: நீ சொல்றது சரி ரஜினி
அத நீ சொல்றது நியாயமாவும் இருக்கு.
ஆமாம். நீ அதனால்தானே அரசியலுக்கு வரலன்னு சொன்ன...

ரஜினி: ஊழல் பண்றாங்க, சிலர் மட்டும் ஜெயிலுக்கு போறாங்க,  அங்கேயும் சகல வசதியும் கிடைக்குது.
அப்புறம் அவ்வளவு பெரிய சிறைச்சாலைகளில் இவங்களுக்கு மட்டும் நெஞ்சு வலி, அங்கிருந்து மருத்துவமனை, அப்புறம் சலுகை, பரிவு, அனுதாபம்... விடுவிக்கவும் படுகிறார்கள்.
போப்பா இந்த அமலாக்கத்துறை, காவல்துறை, மருத்துவமனை, நீதித்துறை எல்லாமும் கண்கட்டி வித்தை காட்டுதுபா...

கமல்: இத மொத்தமா உடனே சரி செய்யவும் முடியாது ரஜினி. அடுத்த காட்சியில எல்லாமும் மாறிட, இது படமா என்ன?
மையத்தில் நின்று தான் முடிவெடுக்கனும்...

குடி மகன்: ஏய்... ஓரமா போய் விளையாடுங்கபா...

ஆமாம் இது விளையாட்டு தான்.
ஆனா இளைய தலைமுறை குடி, பீடி இன்னும் பிற போதை எல்லாத்தையும் விட்டுட்டு, இந்த விளையாட்டுல களத்தில் இறங்கனும். எங்களுக்கு வயசாகிடுச்சி நாங்க ஓரமா போறோம்...


 
(ஒரு லாங் ஷார்ட்டில் இரண்டு நட்சத்திரங்களும் மின்னி மறைகிறது)



தேநீர்க் கோப்பையில்
இசை மீட்டும் விரல்களிலிருந்து
ரகசியமாக நடக்கிறது
ஒரு காதல் தூது...

உன் காதில்
சென்று சேர்ந்ததாக
மெல்லிய புன்னகை
என்னுள் பூக்கிறது...

எல்லாமும் எல்லாமும்
ரகசியமாக நடக்கிறது
காதலைக் காப்பாற்றி வைத்திருக்க
எல்லோரிலும் எல்லோருளும்... 

சனி, 20 ஜூலை, 2024


கடலைப் பார்த்து நிற்பவன்
அலை பேசக் கேட்பவன்
கோமாளி ஆகிவிட்டான்

அலைபேசியோடு வாழ்கிறவர்கள்
தொடுதிரையைத் தழுவுகிறவர்கள்
பெருகிவிட்ட உலகத்திலே

கடலைப் பார்த்து நிற்பவன்
அலை பேசக் கேட்பவன்
கோமாளி ஆகிவிட்டான்...


வெள்ளி, 19 ஜூலை, 2024


உடைந்து
உருகி
நகரும்
மனது...

சிரிக்கும் மேகங்கள்
எங்கோ நின்று அழுதிருக்கும்

அழும் மேகங்கள்
நேற்றுவரை சிரித்திருக்கும்

சிரித்து
அழுது
நகரும்
மேகம்...


வியாழன், 18 ஜூலை, 2024


அவள் ஏமாற்றிவிட்டாள்
அவன் ஏமாற்றிவிட்டான்
அவர் ஏமாற்றிவிட்டார்
இவர் ஏமாற்றிவிட்டார்
சூழல் ஏமாற்றிவிட்டது
காலம் ஏமாற்றிவிட்டது
என்று என்னை நானே ஏமாற்றிக்கொண்டது
புரியும் நேரத்தில்
உயிர் ஏமாற்றிப் போகிறது...

"கடைசி வரை
என்னை நான்
ஏமாற்றினேன்" என்று
என் கல்லறையில் எழுதுங்கள்...


புதன், 17 ஜூலை, 2024


பட்டாம்பூச்சியின் நிழலை
கையில் பிடித்தேன்
நிஜம் துடிதுடித்து
நிழலை மீட்டது...

என் நிழலை
இருள் பிடித்தது
எத்தனைத் துடிதுடித்தும்
நிழலை மீட்க முடியவில்லை... 

செவ்வாய், 16 ஜூலை, 2024


தெரியாமல் பட்ட
உன் கைகளுக்குத் தெரியாது
என் இதயம்
தாளம் மாறித் துடிப்பது...


திங்கள், 15 ஜூலை, 2024


பட்டாம்பூச்சி
சிறகுகள் அசைத்து
மனதில் ராகம் இசைக்கிறது

இசைக்கருவிகள் இல்லை
இசைக் கலைஞர்கள் இல்லை
சிம்பொனி மட்டும் நடக்கிறது

உன் கண் இமைகள்
இசைத்த ராகம்
நினைவில் வருகிறது...


ஞாயிறு, 14 ஜூலை, 2024


உன் இரு கைகளால்
நின் முகம் மறைத்து
விரல் இடுக்குகளில்
நீயெனைப் பார்க்கும்போது
கடவுளின் கைகள்
உன்னை மட்டும்
எனக்கு விட்டுவிட்டு
இந்த உலகை மறைக்கிறது...


சனி, 13 ஜூலை, 2024


உறக்கத்தில்
உயிரைக் கூட்டித் தள்ள
தலையணையாய் தென்னை விளக்குமாறு

கனவில்
குளிர் தென்றலை வீசட்டும்
அவள் துன்பங்கள் விலகுமாறு...


வெள்ளி, 12 ஜூலை, 2024


ஒழுங்கு போல் தெரியும்
ஒழுங்கின்மை தான்
குழந்தை வளர்ப்பு...

வெட்டுக்கிளிகளை
தட்டான், பட்டாம்பூச்சிகளை
பறவைகளை சிலந்திகளை
எறும்புகளை, எருமைகளை
இன்னும் எண்ணிலாத உயிரிகளை
விட்டு விலகி எடுத்துவந்து
கட்டுக்கடங்கி வளர்க்கின்றோம்
வேற்று கிரக வாசிகளாய்...

ஒழுங்கு போல் தெரியும்
ஒழுங்கின்மை தான்
குழந்தை வளர்ப்பு...


வியாழன், 11 ஜூலை, 2024


வெற்றியை இதயத்தில் வை
தோல்வியை தலையில் வை
இரண்டிற்கும் அப்பாற்பட்டது வாழ்க்கை
நினைவில் வை...


புதன், 10 ஜூலை, 2024


இதயத்தின் வெளியே
நான் உன்னிடத்தில்
மன்னிப்புக் கேட்கிறேன்

இதயத்தின் உள்ளே
ஒருபோதும் உன்னை
மன்னிக்க மாட்டேன்

நீ உள்ளே இருந்து
என்னை வெளியே நிறுத்தி
ஏன் பாடாய்ப் படுத்துகிறாய்...



செவ்வாய், 9 ஜூலை, 2024


சிறகு வளர வளர
வெட்டி விடும் பெற்றோர்கள்
உணவும் கொடுக்கிறார்கள்
எதனை வளர்க்கிறார்கள்?







திங்கள், 8 ஜூலை, 2024

கே.ஆம்ஸ்ட்ராங் (31/01/1971 - 05/07/2024)


ஆம்ஸ்ட்ராங்
ஆம் ஸ்ட்ராங்காக
மாறி இருக்கிறார்

வெட்ட வெட்ட
மக்கள் மனத்தில்
வளர்ந்து நிற்கிறார்

புத்த சிலையின்
நிழலாய்
புன்னகைப் பூக்கிறார்

வறியவர்க்கு வந்துதவியவரை
யாரைத் தான்
கயவர்கள் விட்டு வைத்தார்கள்

வெட்டச் சொன்னவர்கள்
தெரியாமல் போனாலும்
தெரியாமலே போவார்கள்...

பாவம்
உயிர் எடுக்க வந்தவர்களுக்குத் தெரியாது
நீ
உயிர் கொடுக்க வந்த வீரனென்று
இனி
யார் கொடுக்க வருவார்கள்
இங்கெல்லோரும்
உயிருக்கு பயந்த கனவான்கள்

பாபாசாகேப்
புத்தர்
இறந்து வாழும் பட்டியலில்
இணைந்து கொண்டார்
ஆம்ஸ்ட்ராங்
ஆம் ஸ்ட்ராங்காக
மாறி இருக்கிறார்

இறந்தும்
வறியவர்க்காக
கொடி பிடிக்கிறார்
தன் கை
இல்லை என்றாலும்
தம்பிகள் கை வழியே
வறியவர்க்காக
கொடி பிடிக்கிறார்...


ஞாயிறு, 7 ஜூலை, 2024


உன் கலையாத மௌனத்திடம்
அழுது புலம்புகிறேன்
இறுதியில்
என் மௌனம்
உன் மௌனத்தை முத்தமிட
நீ அனுமதித்தாய்...
உன் மடியில்
தலைச் சாய்த்து
என் மௌனம் படுத்துக்கொள்ள
வானைப் பார்த்துக்கொண்டிருந்த
உன் மௌனம்
என்னைப் பார்க்கத் துவங்கியதும்
நான் வானமாகிறேன்
சிறகடித்துப் பறந்து செல்கிறது
என்னில் சில பறவைகள்...
அழுது புலம்பி
ஆகாயம் ஆகும் தருணங்களில்
சிறகடிக்கும் ஓசை
மௌனத்தைத் தலைக்கோதும்
இதயத்தில் இசை பாடும்...


சனி, 6 ஜூலை, 2024


பூக்க விடாமல்
உடைத்து விளையாடி
கேட்டு மகிந்த
எருக்கம் மொட்டுகளின்
சத்தங்கள் எல்லாம்
சாபங்கள் என்று
விளங்கும் இந்த நேரத்தில்
நீ சென்று மறைந்த அடிவானம்
இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது...


வெள்ளி, 5 ஜூலை, 2024


அவள்
கடைசி மழைத்துளிக்குக்
காத்திருந்தவள் அல்ல

தொட்ட
முதல் துளியில்
கரைந்துபோனவள்...


வியாழன், 4 ஜூலை, 2024


கல் என்றால் கல்
கடவுள் என்றால் கடவுள்
காதல் என்றால் காதல்...

நீ பேசவில்லை என்றாலென்ன
உன் பெயரை எழுதி வைத்த
கல் பேசும்... மரம் பேசும்...

'செல்வத்துள் எல்லாம் தலை' தான்
இந்தச் செவி தான்
இன்னும் புவியில் வாழச் செய்குதடி...


புதன், 3 ஜூலை, 2024


மனமும் உடலும்
ஆடும் சதுரங்கம்
பொழுதெல்லாம் களியாட்டம்...


செவ்வாய், 2 ஜூலை, 2024


உள்ளிருந்து
எதையும் நம்பாமல் இருக்கச் சொல்கிறது
நம்பினால் அதுவும் ஒரு நம்பிக்கை...

இதழ்கள்
உதிர்ந்து உதிர்ந்து
மலர்கின்ற வெறுமை இறைமை...

திங்கள், 1 ஜூலை, 2024

சபேஷ்ராஜா


ஓடும் ரயில் முன்
ஒரு பூ உதிர்ந்து
தன் வாழ்வின் மொத்த வலிகளையும்
சிவப்பு மையில் எழுதியது...

அந்த மொழியை
யார் அறிவர்?
யார் வலியை
யார் உணர்வர்?

தன் துக்கங்களின் ஆழத்தில்
வெட்டும் மின்னல் வலிகள்
தனக்கு மட்டுமே வெளிச்சம்
அதைக் காண முடியாமல்
பேரொளியில் கலந்தாயோ...

நண்பா சபேஷ்ராஜா
உனது ஆன்மா சாந்தி அடைய
இயற்கையை வேண்டுகிறோம்