வியாழன், 31 ஆகஸ்ட், 2023


விண்மீன்களுக்குத் தூண்டில் இடுகிறேன்
மேகங்களில் படகு ஓட்டுகிறேன்
பறக்கும் பறவைகளைப் பக்கம் நின்று பார்க்கிறேன்
இப்போதும் உன்னிடம் சொல்ல முடியாமல்
அந்த வார்த்தைகளுடன் தான் நிற்கிறேன்...


புதன், 30 ஆகஸ்ட், 2023


எப்போதும் போல் நீயில்லை
எப்போதும் போல் நானுமில்லை
உன் உடல்நலம் மட்டுமில்லை
நம் காலைப் பொழுதும் சரியில்லை...

மாலைப் பொழுதிற்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று
மனதில் நித்தம் அக்கறையுடன் சுற்றி அலைந்தாலும்
அந்திப் பொழுதில் நான் வந்து சேர்ந்ததும்
முதலில் உன் நலம் விசாரிக்காதது
உனக்கு வலி கொடுத்திருக்கும் தான்

தாமதமாய் நான் மனம் வருந்தி
" இப்ப பரவாயில்லையா " எனக் கேட்டது
உன் உடல் மனம் இரண்டையும் தான்...

கண்ணீரோடு நீ கடிந்துரைத்த அத்தனையும்
நீ என்னிடம் எதிர்பார்த்த அன்பை முழம் போட்டது
அதனை அளந்துவிட முடியுமா என்ன?
எனினும் உன் குரலில் கண்ட தெம்பு
என்னைக் குளிர்வித்தது அம்மா...


செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023


மழையின் ஒரு துளி மட்டும்
மண்ணில் குமிழ் ஆகாமல்
மனதில் குமரி ஆகின்றது...


திங்கள், 28 ஆகஸ்ட், 2023


கதவைத் திறந்து
நெற்றியில் ஈர முத்தமிட்டு
காற்று ஊமையாய் நிற்கிறது...



ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023


நாளை எனும் அழகான பொய்
ஆறாம் அறிவை பூமியைத் தாண்டி
நிலவிற்கும் செவ்வாய்கும் கூட்டிச் செல்கிறது...


வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023


வானில் அமரும்
கிளையில் பறக்கும்
தருணங்கள் உண்டு பறவைக்கு...



வியாழன், 24 ஆகஸ்ட், 2023


பொன்னிற ஒளியில்
ஒரு இரவும் ஒரு பகலும்
சேர்ந்து நிற்கிறது
ஒரு பெண் உருவில்...
விழிப்புக்கும் உறக்கத்துக்கும் இடையில்
மயங்கி நிற்கிறேன்
அவள் மகுடி ஊதுகிறாள்...


புதன், 23 ஆகஸ்ட், 2023


அன்னைத் தந்ததெல்லாம்
அரும் மருந்து
ஆறறிவைத் தாண்டித் தந்தாள் உணர்ந்து... 


செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023


மரத்தடியில் நீ அமர்ந்து
அடிமரம் ஆகும்போது
உதிர்ந்த இலைகளை மீண்டும்
உயிர் பெற வைக்கிறாய்
உன் விரல்களில் மலரும்
வார்த்தைப் பூக்களால்
ஜொலித்திடச் செய்கிறாய்

வண்ணதாசா...
அதில் எப்படி மீண்டும்
வண்ணங்களை ஏற்றுகிறாய்?


திங்கள், 21 ஆகஸ்ட், 2023


சிறுகதையில்  வண்ணதாசன்
கவிதையில்  கல்யாண்ஜி
இயற்பெயரில்  சி.கல்யாணசுந்தரம்
உண்மையில்  தேடல்  நீ...

நீர்  நீ
நீர்  இருக்கும்  இடம்  பொறுத்து
நின்  பெயர்...

நீர்  நீ
சுதந்திரமாய்  உன்  தாகம்  துரத்து
நின்றாலும்  சென்றாலும்  ஓவியம்...

உன்  தாகம்  துரத்தி
பிறர்  தாகம்  தீர்க்கும்
தீர்க்கதரிசி  நீ...

தீ  நீ
எனில்
தீராத  தீ  நீ

மண்  நீ
எனில்
ஒவ்வொரு  துகளும்  நட்சத்திரம்

வானம்  நீ
எனில்
நிழல்  மட்டும்  தூவும்  குடை  நீ

காற்று  நீ
எனில்
அன்பாய்  தீண்டும்  தென்றல்  நீ...

உங்கள்  வயதும்,  ஆரோக்கியமும் 
உச்சம்  தொட
தங்கள்  இனிய  பிறந்த  நாளில்
இயற்கையை  வேண்டுகிறேன்




ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

நக்கீரன்


நல்ல மனிதர்
நான் தவறிழைத்த போதெல்லாம்
மூன்றாம் கண்ணில் நோக்கியவர்

நிரந்தரமாய் இரு கண்களை மூடினாலும்
தன்னிரு கண்களாய் பாவித்த
இரு மகன்களில் எப்போதும் விழித்திருப்பார்...

'அழகு' என அக்காளை அழகாக அழைப்பவர்
'மாப்ள' என எனை அன்போடு அழைப்பவர்
அமைதியாகப் படுத்திருக்கிறார்
அமைதி ஆகிப் படுத்திருக்கிறார்...

அவர் ஆன்மா சாந்தி அடைய
இயற்கையை வேண்டுகிறேன்...


சனி, 19 ஆகஸ்ட், 2023


உன் பார்வைக்கும்
உன் புன்னகைக்கும்
தவமிருக்கிறேன்...

வரம் கொடுக்கிறாய்
தவம் கலைக்கிறாய்
பரிதவிக்கிறேன்...

வானில் குழிப் பறித்து
மேகங்கள் வாரி இறைத்து
சொர்க்கத்தில் பூட்டி வைக்கிறாய்...


வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023


கடலளவு  கைகளை  விரிக்கும்  குழந்தை  முன்
கடுகெனவே  ஒருகணம்  மாறி  நிற்கிறது  கடல்
மறுகணமே  கைகளை  இறக்கி  கடலாக்கியது  குழந்தை... 

வியாழன், 17 ஆகஸ்ட், 2023


பைத்தியம்
தன்னை பிடிக்க நெருங்கையில்
வெறுத்து ஒதுங்குகிறேன்

விடுவதாயில்லை
பிடரி கலைய
துரத்தி வருகிறது

பயம் முதலில்
பின்னர் தான்
பைத்தியம்

எங்கிருந்து பாய்கிறது
இந்த பயம்
பைத்தியத்திற்கு முன்பாக...

பயந்து ஓடிவிட்டதா
துணிந்து பழகிவிட்டதா
இந்த நான்

நான் மறந்த
நிலைதான்
அந்த உறவு

பைத்தியமே
பயம் வேண்டாம்
இனி நீ மட்டும் வா...


புதன், 16 ஆகஸ்ட், 2023


காதலில்...

கரப்பான்பூச்சி
பட்டாம்பூச்சியாகும்

கூரைதூசி
ஊஞ்சலாகும்

ஏக்கம்
எரிமலையாகும்

தூக்கத்தில்
விழிகள் தேடும்

மின்வெட்டில்
மின்மினிகள் சூழும்

கண்ணீரில்
கரும்பு முளைக்கும்

காத்திருப்பு
காவு கேட்கும்

மேகம் தூது
எதிர் காற்று

மின்னல் நினைவுகள்
இடியோசை புலம்பல்கள்

விடியல் ஏமாற்றும்
இரவு காப்பாற்றும்...


செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023


பேசாமல் கற்றுக்கொண்ட
மௌனத்தைப் போலத்தான்
காதலை உன்னிடம் பெற்றுக்கொண்டேன்...


திங்கள், 14 ஆகஸ்ட், 2023


நீ விழிகளை திறக்கும்போது
கடவுள் அதில் விளக்கேற்றுகிறார்
நான் வழிபடுகிறேன்...

உருகி நிற்கிறேன்
உன் பெயரை மந்திரமாய்
மனதிற்குள் சொல்கிறேன்...

பிறகு நடக்கும் எல்லாமும்
அற்புதங்கள், அதிசயங்கள்
உன்னிடமும் சொல்லாத இரகசியங்கள்...


சனி, 12 ஆகஸ்ட், 2023


எத்தனை கிடைத்தாலும்
கிடைக்காத ஒன்றே
பெரியவர்களுக்குப் பெரிதாக இருக்கிறது...

எது கிடைத்தாலும்
பெரிதாகும் கண்கள்
குழந்தைகளிடம் இருக்கிறது...

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023


குழந்தையாய் என்னை
இரு கைகளால் உயரத் தூக்கி
அண்ணாந்து பார்த்து ரசித்தவள் அம்மா...

எத்தனை முறை வீழ்ந்தாலும்
எழுந்து உயர்ந்து நிற்க
எனைத் தூக்கிவிடும் சொல் அம்மா...

மருந்து வேண்டாம்
மருத்துவன் வேண்டாம்
மறுவாழ்வு தந்திடும் மந்திரம் அம்மா...


வியாழன், 10 ஆகஸ்ட், 2023


படிகளில் ஏறி இறங்கி
சுவர்களின் பின் ஒளிந்து
விளையாடிடும் இருள்-ஒளிக் குழந்தைகள்...


புதன், 9 ஆகஸ்ட், 2023


நீ பார்க்காதது போல் இருக்கிறாய்
நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
நமை நாமே உணர்ந்த உன்னத பொழுதுகள்...


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023


உள்ளொளி இல்லாமல்
வெளியில் ஒளியில்
காண்பதிலெல்லாம் இருள்...

திங்கள், 7 ஆகஸ்ட், 2023


'வானம் வரை கூரை
வானமே கூரை'
இப்படிப் பார்க்காமல்
எப்படி நுழைவாய்
என் வீட்டிற்குள்...

தலை நிமிர்ந்து வாழ
நான் கட்டிய வீடு
தலை குனியும் நாளில்
எனை மூடிப் புதைக்கும்... 

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023


பாழடைந்த வீடு
கொஞ்சம் கொஞ்சமாய்
தன்னை இழந்து
ஞான ஒளி நிரம்புகிறது...


சனி, 5 ஆகஸ்ட், 2023


யார் வரவில்லை என்றாலும்
நிலவும் பறவையும் வந்து போகிறது
ஏழை வீட்டிற்கு...


வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023


பறிக்கவில்லை
கை ஏந்தி நிற்கவில்லை
தானே விழுந்தது பூ

கையில் எடுக்கவில்லை
கண்ணாடி பார்த்து அணியவில்லை
அழகாய் இருக்கிறாள் பூமி


வியாழன், 3 ஆகஸ்ட், 2023


நிலா
நெருங்கி நெருங்கிப்
பெருகப் பெருக
நமக்குள் இடைவெளி குறைகிறது
இன்ப நிலா
நம்மை விழுங்க வருகிறது...


புதன், 2 ஆகஸ்ட், 2023

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023


மனக் கண்ணின் குறை தீர்க்க
கடவுள் ஊற்றும் சொட்டு மருந்து
கண்ணீர்...