வெள்ளி, 31 டிசம்பர், 2021

 


பூத்து விரியும் பூவுக்குள்ளே
ஏங்கித் தவிக்கும் காமத் தழல்
பூங்காற்று வருடி வருடி வளர்த்தெடுக்கும்
உயிர் உருகி உருகி இனித்திருக்கும்

தனித்து தவித்த புழு தவமிருக்கும்
கடும் தவத்தில் புற்றெழுந்து தனை மறைக்கும்
வண்ணச் சிறகு இரண்டு வரம் கிடைக்கும்
பூங்காற்று வந்து அதன் சிறை உடைக்கும்

பட்டாம்பூச்சிக்கு பூங்காற்றைப் படிக்கத் தெரியும்
பூத்து விரிந்த பூவை இப்படித்தான் அறியும்
இங்கும் அங்கும் தேடித்தேடி அலையும்
ஜீபீஎஸ் இல்லாமலே உண்மைக்காதல் இணையும்

தேன் குடித்த பட்டாம்பூச்சி மதி மயங்கும்
பூப் பூவாய் நாடிநாடி  நிதம் கிறங்கும்
தேன் கொடுத்த பூவின் இதயம் காயாகும்
உள்ளிருக்கும் நினைவுகள்தான் மெல்லக் கனியாகும்

காம தீப விளையாட்டு
அசைத்துப் பார்க்கும் பூங்காற்று
பூவும் புழுவும் மட்டுமல்ல
உலகம் முழுதும் இரையாகும்...

வியாழன், 30 டிசம்பர், 2021

 


வானம் கடலாகி
அலை அலையாய் வந்து நனைக்கிறது
மழைத் துளி

மண்ணில் கடலாக
விழுந்து கிடக்கிறது வானம்

விண் மீன்களைக் கூடையில்
ஒய்யாரமாய் கொண்டு வருகிறாள்
மீன்காரி

மூக்குத்தி இல்லாமல் - அவள்
முகம் சுத்தி ஜொலிக்கிறது
வானுக்கும் தேவதைக்கும்
பூர்வ ஜென்மத் தொடர்பு...


புதன், 29 டிசம்பர், 2021

 


எப்போதும் போலவே
இப்போதும் கேட்கிறேன்
என்றும் கேட்பேன்
நீ கேட்காவிட்டால் என்ன?

எப்போதும் போலவே
இப்போதும் பார்க்கிறேன்
என்றும் பார்ப்பேன்
நீ பார்க்காவிட்டால் என்ன?

எப்போதும் போலவே சூரியன்
எப்போதும் போலவே நிலவு
எப்போதும் போலவே நான்

இப்போதும் தயங்காதே
தயக்கம் கால நிறுத்தம்
தயங்கி நிற்காமல் வந்து விழு...
என்கிறேன் வாழ்க்கையை
இப்போதும் தள்ளியே நிற்கிறது
ஏனென்று தெரியவில்லை


செவ்வாய், 28 டிசம்பர், 2021

 


உன்னைத்தான் கண்டேன்
பின் தொடர்ந்தேன்
தொடர்ந்து கூப்பிட்டேன்
நெருங்கி வந்தேன்
திரும்பி நீ பார்க்கவில்லை
திரும்பத்திரும்ப நான் பார்க்கிறேன்
நெருங்கி நெருங்கி வந்து
தொடர்ந்து கூப்பிட்டேன்
முன் வந்து மறித்தேன்
துணியால் மூடிய முகம்
நெற்றி வானமாய்
கண்கள் இரு நிலவாய்
மேகமாய் நான்
காற்றில் தவழ்கிறேன்
யாரோ போல்
எனை நீ பார்த்தாலும்
உன்னைத்தான் நான் பார்க்கின்றேன்
உன்னைப் போல் உள்ளவர எல்லாம்
எனக்காக இறைவன் படைத்தானா
நீ என்னை விட்டுபபோவதை
இறைவன் அன்றே அறிந்தானா...


திங்கள், 27 டிசம்பர், 2021

 


தெலுங்கில் எதையோ பேசினார்
அதுவும் பதில் பேசியது
ஆங்கிலத்தில் சிறுமி பேசினாள்
அதுவும் பதில் பேசியது
ஹிந்தியில் நான் கொஞ்சம் பேசிப் பார்த்தேன்
அதுவும் பதில் பேசியது
மூன்று பாஷை தெரிந்த
அந்த செம்பழுப்பு நாயிற்கு
மற்ற எல்லா பாஷைகளும்
தெரிந்திருக்குமோ...
எத்தனை பாஷைகள் தெரிந்தாலென்ன
அது தன் தாய் மொழியிலேயே பேசுகிறது


ஞாயிறு, 26 டிசம்பர், 2021

 


தெரிந்தவரை
பழிவாங்கும் பசி
தெரியாதவரை
அலட்சியம் செய்யும் பணம்

தேர்தல் நெருங்க
நெருங்கிவரும் அரசியல்வாதி
தேவையென்றால் மட்டும்
தேடிவரும் நண்பன்

சிலநாள் ஸ்னேகிதி
பலநாள் தலைவலி
திட்டித் தீர்த்த வெயில்
ஒட்ட மறுத்த மழை

எல்லாமே
என் பிழை
என்னிடம் இருந்ததையே
எல்லோர் மீதும் எழுதிவைத்தேன்


சனி, 25 டிசம்பர், 2021

 


கோவில்
மசூதி
தேவாலயம்
எல்லாம் தெரிகிறது
அந்தரத்தில் தொங்கும் குழந்தைக்கு
ஆனால்
எந்தக் கடவுளுக்கும் தெரியவில்லை
அந்தரத்தில் தொங்கும் குழந்தையை...

கடவுள் உண்டு
கடவுள் இல்லை
எனும் கூட்டம்
கூடி நின்று வேடிக்கைப் பார்க்கிறது
ஆனால்
அங்கு மனிதர்கள்
யாரும் இல்லை...


வெள்ளி, 24 டிசம்பர், 2021

 


எல்லா ஆணிகளையும்
பகல் பொழுதில் ஏற்றுக்கொள்கிறேன்
பழகிவிட்ட ஆணிகள்
என்னில் இரத்தம் குடிப்பதில்லை

இரவு
கருணையுடன் வந்து
தனது மடியை விரிக்கிறது
அதில் தலை சாய்ந்து
கண்கள் மூடி மரிக்கிறேன்

உயிர்த்தெழும் பொழுதில்
வெறும் நான்கைந்து மணிநேரங்களில்
முடிந்து விட்டிருக்கிறது
இரண்டு நாட்கள்

மூன்றாம் நாளில்
ஏக்கத்தோடு காத்திருக்கிறது
ஆணிகள்...


வியாழன், 23 டிசம்பர், 2021

 


தப்பாகவே பார்த்து
சிலரை பழக்கி விட்டார்கள்
தப்பான காரியங்களுக்கு

நல்லவனாகவே பார்த்து
சிலரை பழக்கி விட்டார்கள்
நல்ல காரியங்களுக்கு

யாரும் பார்க்காத
தானும் பார்க்காத
தருணங்களில் தானே
உண்மை தெரிகிறது

இரவும் பகலும்
இல்லாத நாள் இல்லை
சரியும் தவறும்
இல்லாத ஆள் இல்லை


புதன், 22 டிசம்பர், 2021

 


கயிற்றால் கட்டி
அன்பு காட்டும் ஒருவன்
கயிற்றால் கட்டினாலும்
அன்பு காட்டும் ஒருத்தி

ஆணுக்கு நிகராக
ஆசைப்படும் பெண்கள்
எது ஆனாலும் கல்லாக்கட்டும்
கயிறு வியாபாரிகள்

வியாபாரிக்கு வட்டியாக
குட்டி போடும்
குடும்ப வாழ்க்கை


செவ்வாய், 21 டிசம்பர், 2021

 


சிறகுகள்
கீழிறங்கும் போதெல்லாம்
மேலெழுப்பும் பறவைகள்
வானத்தில் மிதப்பது
வினோதம் ஒன்றும் அல்ல

வீழ்ந்து எழும்
அத்தனை பேரும்
மிதக்கலாம்...


திங்கள், 20 டிசம்பர், 2021

 


நடை இல்லாது துவங்கி தான்
நடந்து கடந்து திரிகிறேன்
மொழி இல்லாது துவங்கி தான்
மொழியை மெல்ல அடைகிறேன்
அர்த்தம் இல்லாது துவங்கி தான்
அர்த்தங்களை அடைகிறேன்
ஒன்றும் இல்லாத ஒன்றிலிருந்து தான்
உலகம் கூட பிறந்தது
என்னிலிருந்து உன்னிலிருந்து
பிறப்பதென்பது மாயையே
ஒன்றைப் போல ஒன்று இல்லை
இது ஒன்றும் இல்லாததின் சாயையே...


ஞாயிறு, 19 டிசம்பர், 2021

 


குழந்தைகளால் ஆளப்படும் உலகில்
நட்சத்திரங்கள் இறங்கி வரும்
மேகங்கள் முத்தமிடும்
மின்னல் ஒளிந்து விளையாடும்
சாரல் தொட்டு விளையாடும்
வானவில் நெஞ்சுக்குள் அம்பு விடும்
மூன்றாம் உலகப்போர் முடிந்திருக்கும்
எல்லைகள் எல்லாமே அழிந்திருக்கும்
உலகப் பணக்காரர்கள் வரிசை கலைந்திருக்கும்
கருப்பு வெள்ளை எல்லாம் கலந்திருக்கும்
ஒரே கடவுள் அது இயற்கையாய் இருக்கும்
குழந்தைகளால் ஆளப்படும் அந்த உலகில்
நாமெல்லோரும் வேற்று கிரக வாசிகளே...


சனி, 18 டிசம்பர், 2021

 


உறக்கம் முடிந்ததும்
வாழத் தொடங்குபவர்கள் சிலர்
உறக்கம் முடிவதற்குள்
வாழ்ந்து முடிப்பவர்கள் பலர்...


வெள்ளி, 17 டிசம்பர், 2021

 


மனம்
சலசலத்துக் கொண்டிருக்கும்
நிழல்
தியானத்தில் இருக்கும்
நான்
இடையில் இருப்பதுவா?
உயிர்
ஊசலாடுகிறது...


வியாழன், 16 டிசம்பர், 2021

 



சேட்டைக்கும் கிறுக்குக்கும்
இடையில்
ஓர் பைத்தியத்தைப் பார்த்தேன்...

நான் பார்த்துச்
சிரிக்காத
பைத்தியமும் நானே

பிறர் பார்த்துச்
சிரிக்கும்
பைத்தியத்தை நானறியேன்

யாரும் அறியாததே
பைத்தியம்

இறைநிலை பைத்தியம்
அன்னை பைத்தியம்
தந்தை பைத்தியம்
நண்பன் பைத்தியம்
காதல் பைத்தியம்
அன்பு பைத்தியம்
ஞானம் பைத்தியம்
அடிக்கடி பைத்தியம்
அடிக்கு அடி வைத்தியம்
தெளிந்து தெளிந்து
குழம்பும் வாழ்வு...


புதன், 15 டிசம்பர், 2021

 


தந்து தந்து
உதவிய கிணறு
தாழப் போனதும்
எட்டிப் பார்க்க ஆளில்லாமல் போனது...
நொந்து நொந்து
அழுது அழுது
தன்னுள் நிரப்பும்
மீண்டும் அமுது
தனக்காகவா
உனக்காகவா...

செவ்வாய், 14 டிசம்பர், 2021

 


கடிதம் எழுதித் தொடர்ந்த வரை
உறவுகள் இருந்தது
உடைந்த தபால் பெட்டியில்
கை நுழைத்து
எந்த உறவை மீட்டெடுக்க
தினமும் வந்து போகிறார்
அந்த முதியவர்
அவருக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம்
நமக்குக் கிடைக்காது
அந்த உறவு...


திங்கள், 13 டிசம்பர், 2021

 


நிலம் இல்லாதவனுக்கு
நிழல் தேவைதானா...
பட்டா போடாத
வானம் இருக்கிறது
சிறகுகள் தேவைதானா...
பட்டாம்பூச்சி ஆக
கனவுக் கூட்டில் புழுவானேன்
வெயில் கத்தி
எனைச் சுத்தி
சிறகுகள் வெட்டப் புழுவானேன்
வானம் இல்லை
நிலமும் இல்லை
மண்ணைக் குடைந்து போகின்றேன்
கடவுள் கொடுத்த வீடுபேறு
அதற்குள் இருக்கக் காண்கின்றேன்


ஞாயிறு, 12 டிசம்பர், 2021

 


நண்பரைப்
பார்த்துப் படித்தது தான் அதிகம்
எப்போதும்
என் புத் அகம்
நண்பர்களே...


சனி, 11 டிசம்பர், 2021

 


எல்லோருமே பைத்தியங்கள் தான்
அங்கிகாரம் பெற்றது
அங்கிகாரம் இல்லாதது
அவ்வளவுதான்

அங்கியோடு பல
அங்கியின்றி சில

பல்கலைக் கழகத்தில் பல
பல் கலைக் கழகத்தில் சில

எல்லாம் அடைந்து பல
எல்லாம் துறந்து சில

சுயநலக் காப்பகத்தில் பல
மனநலக் காப்பகத்தில் சில

சிலரைப் பார்த்து
பலர் சிரிப்பதுண்டு
சிரிக்கட்டுமே
எல்லோருமே பைத்தியங்கள் தான்...


வெள்ளி, 10 டிசம்பர், 2021

 


இந்தத் தெருவில்
இன்னும் சிறு தொலைவில்
தொலைந்து விடுவேன்

அந்தத் தெருவில்
அடுத்த ஒரு வளைவில்
வழக்கம் போல

ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு நொடியிலும்
இப்படியே தொடர்கிறது

தொடர்ந்து தொலைந்து
தொடர்ந்து கிடைத்து
தொடரும் வாழ்வு

முன் தொலைத்தவர்கள்
பின் கிடைக்காதவர்கள்
என்று எவருமில்லை

சிறு தொலைவில்
ஒரு வளைவில்
மீண்டும் சாத்தியமே...


வியாழன், 9 டிசம்பர், 2021

 


வாழ்வின் கடைசி வார்த்தைக்கும்
ஒரே அர்த்தம்
முன் எப்போதும் போல...

வார்த்தைக்கும்
அதன் பிறப்பிற்கும் முன்னே
வெவ்வேறு அர்த்தங்கள்

பிறர் மட்டுமல்ல
நாமும் அறியாத
அர்த்தங்கள் ஆயிரம்...