ஞாயிறு, 31 டிசம்பர், 2023


கோமாளிகளின் பலூன்கள்
தன்னைக் காட்டிலும்
பிறருக்காகவே படாதபாடுபடும்...

வானில் தத்தித் தத்திக் குதிக்கும்
தண்ணீரில் நடக்கும்
தரையில் பறக்கும்
வெடிக்கும் போதும் சிரிக்கும்...

இருக்கும்வரை கொண்டாடப்படும்
இல்லையென்றால் மறக்கப்படும்
கோமாளிகள் போல்தான்
கோமாளிகளின் பலூன்களும்...

இந்த 2024
எனது 44வது பலூன்
பிறர் சிரிக்கத்
தயாராகிறோம்
நானும் பலூனும்...


சனி, 30 டிசம்பர், 2023

வெள்ளி, 29 டிசம்பர், 2023


"முத்து விஜய்"
(27/6/1983 - 29/12/2023)

இந்தப் பயணத்தில்
இத்தனை வேகத்தில்
வாழ்வின் இறுதி தொட்டு
அனைவரையும் ஆழ்த்திவிட்டாய்
சோகத்தில்...

பட்டாம்பூச்சியைப் போல்
பாரங்கள் விரும்பாதவன்
பாடித் திரிந்தவாறே
வானம் சென்றுவிட்டான்...

அவன் ஆன்மா சாந்தி அடைய
இயற்கையை வேண்டுகிறோம்
தாடண்டர்நகர் நண்பர்கள்


வியாழன், 28 டிசம்பர், 2023


விஜயகாந்த் எனும் விஜயராஜ் அழகர்சாமி

தனக்காகத் துடிக்கும் இதயம்
எல்லோரிடமும் உண்டு
பிறருக்காக துடிக்கும் இதயம்
உன்னிடத்தில் கொண்டு
பசித்தவர்களுக்கு விருந்தளித் தாய்
நீ வள்ளல்களில் ஒன்று

நாக்கை மடித்துப் பேசினாலும்
நாட்டைக் காக்கவே சொற்கள் வீசுவாய்
அருவாக் கத்தி, சம்மட்டிச் சுத்தி
கைப்பிடிச்ச ஆளு, குழந்தை மனசுக்காரு
கேப்டன் செல்லப் பேரு
உன் சிரிப்பு வெள்ளைச் சோறு...

இதயம் துடிக்காமல் படுத்திருக்கிறாய்
இதயம் துடிதுடிக்க விட்டுச்செல்கிறாய்
கடைசி வரையில் தந்து மகிழ்ந்தாய்
தன்னிறைவடைந்தாய்
இயற்கைத் தாழ்  சரண் புகுந்தாய்
இனி கருணை மழையாய் பொழிவாய்
என்றும் பசுமையாய் மனதில் நிறைவாய்...


புதன், 27 டிசம்பர், 2023


பசிக்கு உழைக்கும்
வர்க்கத்தின் பசிக்கு
ஈவு இரக்கம் கிடையாது...



செவ்வாய், 26 டிசம்பர், 2023


பகிர்ந்து கொடுக்கும்
கரங்களில் இருக்கும் எல்லாமும்
ரொட்டித் துண்டாகவே தெரிகிறது...


திங்கள், 25 டிசம்பர், 2023


ஒன்று இரண்டாகும்
இரண்டு நான்காகும்
அந்த ஒன்று பலவாகும்
ரொட்டித் துண்டினை
கடவுள் தொலைத்துவிட்டான்...


ஞாயிறு, 24 டிசம்பர், 2023


கடவுள்
குழந்தையாக நாளும் பிறக்கிறார்கள்
அவர்கள் வளர வளர
பெற்றோர்களே யூதாஸாக
முத்தம் கொடுக்கிறார்கள்...


சனி, 23 டிசம்பர், 2023


சிலுவையில் அறைந்த
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தால்
மீண்டும் சிலுவையில் அறைகிறது வாழ்க்கை...

உயிர்த்தெழுந்து
உயிர்த்தெழுந்து
வாழ்வதெல்லாமும்
ஓர் நாள்
உயிர்த்தெழாமல் போகத்தான்...


வெள்ளி, 22 டிசம்பர், 2023


இது என்னுடைய உலகம்
இது உன்னுடைய உலகம்
மனிதரைத் தவிர எவையும்
இப்படிச் சொல்வதில்லை
இடத்தைப்
பத்திரப்பதிவு செய்வதில்லை
கூடு
ஒன்றுக்கு மேல் தேவையில்லை
கூட்டில்
உடலைத் தாண்டிய அறைகளில்லை
அனைவரின் உலகம்
அனைவரும் உலகம்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு அங்கம்
அங்கும் இங்கும்
எங்கும் தெரிவதெல்லாம்
தெரியாததெல்லாம்
ஓர் உடல்
ஒன்றே தெய்வம்...


வியாழன், 21 டிசம்பர், 2023


ஊர்ந்தாலும் நடந்தாலும்
மிதந்தாலும் பறந்தாலும்
நீந்தினாலும் தாவினாலும்
நகர்வது உடல்
நகர்த்துவது உயிர்
இணைப்பது எதுவோ
பிரிப்பதும் அதுவோ
இணைந்து இணைந்து
பிரிந்து பிரிந்து
இருப்பதெல்லாம் ஓர் கனவோ
நீள் கனவின் நிஜம் உளதோ...
கனவே நிஜமோ?


புதன், 20 டிசம்பர், 2023



வெயில் பிடிக்கும் வேளையில்
வெயில் இல்லை
மழை பிடிக்கும் வேளையில்
மழை இல்லை
அனல் பிடிக்கும் வேளையில்
அனல் இல்லை
குளிர் பிடிக்கும் வேளையில்
குளிர் இல்லை
இயற்கை இப்படித்தான்
உனைப் பிடிக்கும் வேளையில்
நீ இல்லை
ஆமாம்
இயற்கை இப்படித்தான்...


செவ்வாய், 19 டிசம்பர், 2023


இலைகள் வேரையும்
வேர்கள் இலையையும்
நம்பி இருக்கும்

இலைகள் சமைக்கும்
வேர்கள் சம்பாதிக்கும்
கடவுள் துணை இருக்கும்

பட்டுப் போகும் வரை
விட்டுப் போகாது
பல உறவு

விட்டுப் போகும் வரை
பட்டுப் போகாது
சில உறவு


ஞாயிறு, 17 டிசம்பர், 2023


காட்டின் கண்களில்
பறவை உண்டு
பறவை கண்களில்
காடு உண்டு

கொடுத்துப் பெறுவதில்
தழைத்து வளர்கிறது
காடு

அழித்துப் பறிப்பதில்
கொழுத்து வளர்கிறது
நாடு

நாம் படித்துப் படித்து அழிக்கிறோம்
பறவைப் பறந்துப் பறந்து வளர்க்கிறது
காடு...

காட்டின் கண்களில்
பறவை உண்டு
பறவை கண்களில்
காடு உண்டு

மனிதன் கண்களில்
இயற்கை இல்லை
இயற்கை கண்களில்
மனிதன் இல்லை

கண்கள் இல்லாத உலகம்
வளர்ந்து வருகிறது
இதயம் இல்லாத மனிதன்
அதில் பிழைத்து வருகிறான்...


சனி, 16 டிசம்பர், 2023


யாரும் கற்றுக்கொடுக்காமலேயே
சமநிலையில் இருப்பதற்குச் சிறுவர்கள்
சீசாவில் சமத்துவம் படிக்கிறார்கள்...

வெள்ளி, 15 டிசம்பர், 2023


துள்ளாத மீனுக்கு
ஆயிரம் துன்பம்
மூழ்கிப் பார்
மூச்சு நின்றுவிடும்...


வியாழன், 14 டிசம்பர், 2023

புதன், 13 டிசம்பர், 2023

 


எடையை உணரும் தருணத்தில்
சிறகுகள் காணமல் போகிறது...

திங்கள், 11 டிசம்பர், 2023



காயங்கள் தான்
கலையாகும்...
கனவுகளின் மீது
செயல் படும்போது
கற்களின் மீது
உளி படும்போது
காயங்கள் தான்
கலையாகும்...



ஞாயிறு, 10 டிசம்பர், 2023

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி


நண்பன் பாரதி
கம்பன் பாரதி
நல்லக் கவிதையெல்லாம் பாரதி...

புதுவை புயலில் இறந்த
பறவைகளைத் தன் கைகளால்
அடக்கம் செய்தவன் பாரதி...

தன்னை மறந்தவன் பாரதி
தரணியின் கண்கள்  பாரதி
உலகை உடலாக உணர்ந்தவன் பாரதி...

தீக்குள் விரலை வைத்து
சுடும் சுடரை
பாட்டில் வைத்தவன் பாரதி...

சிட்டுக்குருவிகளுக்கு
தன் உணவளித்து
பட்டினி கிடப்பான் பாரதி...

மீசை பாரதி
தலைப்பாகை பாரதி
கனல்பார்வை பாரதி


சனி, 9 டிசம்பர், 2023


பஞ்சப் பாட்டுப் பாடிக் கேட்காதே
தட்டிக் கொண்டே நிற்காதே
எட்டி உதை கதவு திறக்கும்...


வெள்ளி, 1 டிசம்பர், 2023


கிழிந்து தொங்கும்
சில்க் சினிமா பட போஸ்டர் முன்
எச்சில் வழிய நின்று கொண்டிருந்தது
ஒரு எருமை மாடு...
மாறுவேடம் போட்டு வந்த
அந்த மன்மதனுக்கு
ஒரு கட்டிக் கரும்பைக் கொடுத்தேன்
அதையும் தாண்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்
அதனினும் இனிய ஒன்றை!