சனி, 29 ஏப்ரல், 2023


வீழும் இலை
ஒரு பட்டாம்பூச்சியை நினைத்துக்கொண்டே
தன் வாழ்வை முடிக்கிறது...


வெள்ளி, 28 ஏப்ரல், 2023


இருளில் தனக்குள் பூத்த தருணங்களை
ஒளியில் நினைத்துப் பார்க்கும் பூக்கள்
தன்னை அறியாமலேயே மலர்ந்திருக்கும் தருணம்...

அது நாம் காணும் பகல் கனவு
அதில் பூத்துக் கொண்டிருக்கும்
தன்னை அறியாமலேயே அவரவர் நினைவு...


வியாழன், 27 ஏப்ரல், 2023


பன்னிரு மணி நேர வேலை
எண்ணிலா நில உரிமைத் தாளை
சத்தமில்லாமல் கையெழுத்திட்டு தந்த
இதயம் இலா மந்திரிகள்
அணிய வேண்டும் சேலை...

சோலை எல்லாம்
பாலை ஆக்க
விதவிதமாய் தொழிற்சாலை

பஞ்சம் வரும்
பட்டினி வரும்
முந்தி வரும் தொழிற்சாலை

விவசாயம் அழித்து
விஷச் சாயம் கலக்க
மண்ணில் முளைக்கிறது தொழிற்சாலை

காற்றில் தூசு
ஆற்றில் மாசு
வீச விளைகிறது தொழிற்சாலை

வெப்பம் கூட்ட
துக்கம் ஊட்ட
பக்கம் வருகிறது தொழிற்சாலை

பன்னிரு மணி நேர வேலை
எண்ணிலா நில உரிமைத் தாளை
சத்தமில்லாமல் கையெழுத்திட்டு தந்த
இதயம் இலா மந்திரிகள்
அணிய வேண்டும் சேலை...


புதன், 26 ஏப்ரல், 2023


சிறகு விரித்து
பறக்கும் முன்னே
உன் உடல் உரசி
நினைவு வேண்டும்...







செவ்வாய், 25 ஏப்ரல், 2023


பூஞ் சிரிப்பை பூட்டி வைத்து
கூந்தலை நீ கட்டவிழ்த்து
நெற்றிப் பொட்டை எடுத்துவிட்டு
எப்படித் தான் பார்த்தாலும்
எக்கச்சக்கமாய் பிடிக்கும் உன்னை...

தங்க மீன்களைப் போல்
நீந்தி வரும் என் நினைவுகள்
உனைத் தொடுகிறதா?
ஒரு சொல் ஏனும் சொல்லி அனுப்பு
வரும் வரையில் உயிர்த்திருக்க...


திங்கள், 24 ஏப்ரல், 2023


சும்மா இருக்கும் என்னை
பட்டாம்பூச்சியாக மாற்றிக் கொண்டிருக்கிறது
உன் கண்கள்...


ஞாயிறு, 23 ஏப்ரல், 2023


நிழல்கள் மரத்தடியில் வரிசையாக அமர்ந்தது
நிழலில் மனிதர்கள்
வரிசை இல்லாமல் அமர்ந்தனர்...

நிழல்கள் பறந்து போனது
மனிதர்கள் நடந்து போயினர்
நிழல்களைத் தேடி...

வந்தமர்ந்து பறந்து போகும்
நிழல் பறவைகளின் சில இறகுகள்
இங்கொன்றும் அங்கொன்றும் இரைந்து கிடக்கின்றன...

ஒளிச் சிறகுகள் விரித்து
பறந்து திரியும் நிழல் பறவைகள்
தானாக வந்தமரும்
சிலநேரம் மரத்தடியில்
சிலநேரம் மனத்தடியில்...



சனி, 22 ஏப்ரல், 2023


தண்டவாளங்களின் ஓரம்
சிறு பூக்கள் பூக்கிறது
சில உயிர்களை மீட்கிறது...



வெள்ளி, 21 ஏப்ரல், 2023


மீன் பிடிக்கவில்லை
மீன் விற்கவில்லை
காலி அன்னக்கூடை கூட
எவர் வீட்டிலும் இல்லை

சிப்பி பொறுக்கவில்லை
சங்கு எடுக்கவில்லை
கெண்டைக்காலைக் கூட
கடலில் நனைத்தது இல்லை

இவர்கள் MRC நகரினிலே கட்டிய
கடற்கரையோர மாளிகைகள் மட்டும்
ஆக்கிரமிப்பு பட்டியலில் இல்லை

பட்டினப்பாக்கம் வரைதானாம்
பட்டினத்தாரின் பிள்ளைகள்
கையில் கரும்பு கொடுத்து
பரதேசம் அனுப்புகிறார்

இனி இந்தச் சிங்காரச் சென்னை
சீமான் சீமாட்டிகளுக்கு மட்டும்தான்
இறந்தாலும் அவர்கள் அங்கே இளைப்பாறுவார்...


வியாழன், 20 ஏப்ரல், 2023


கடலின் கொந்தளிப்பு
வெள்ளைக் கொடி பிடித்து வரும்
ஓங்கி அடிக்கவும் தெரியும்
ஒழுங்காய் நடந்துகொள்
மனிதா...

புதன், 19 ஏப்ரல், 2023


குழந்தை வரையும் ஓவியத்தில்
கடவுள் இருக்கிறார்
காணக்காண கண்களிலே தாவித் தாவிச் சிரிக்கிறார்...



செவ்வாய், 18 ஏப்ரல், 2023


கனவுக்கும் நினைவுக்கும் மத்தியில்
சில பறவைகள்
சில பட்டாம்பூச்சிகள்...

திங்கள், 17 ஏப்ரல், 2023


முதல் மூச்சு அம்மா
இறுதி மூச்சு அம்மா
நடுவினிலே உள்ளிழுக்கும்
உயிர் மூச்சு அம்மா...



ஞாயிறு, 16 ஏப்ரல், 2023


விழும் போது
காக்கும் சொல்
அம்மா

எழும் போது
தூக்கும் சொல்
அம்மா

தாய் மடியில்
பூத்த சொல்
அம்மா

தாய்த் தமிழில்
மூத்த சொல்
அம்மா

சொன்ன மறுகணமே
குழந்தை ஆக்கும் மந்திரச் சொல்
அம்மா

தரணியிலே இறைவியிடம்
சேர்த்த சொல்
அம்மா

இறுதியிலே இயற்கையிடம்
சேர்க்கும் சொல்
அம்மா...


சனி, 15 ஏப்ரல், 2023


கை நிறைய
பணம் வேண்டாம்
வயிறு நிறைய
பணம் போதும்

அதிகம் நிறைத்தாலும்
வரும் தொல்லை
அங்கே சேர்த்து வைக்கவும்
இடமில்லை

பிற உயிர்களிடத்தில்
பணம் இல்லை
தன் இனத்தை அழிக்கும்
குணம் இல்லை

கை நிறைய
பணம் வேண்டாம்
வயிறு நிறைய
பணம் போதும்


வெள்ளி, 14 ஏப்ரல், 2023


மழையில் நனைகின்ற பறவையை
ஓவியத்தில் கொண்டு வைத்து
நனையாமல் இருக்கச் செய்கிறது
வளர்ந்து பறந்து தொலைந்திடாத
ஒரு குழந்தை...

மழையை அந்தரத்தில் நிறுத்தி
பறவையை அன்பிடத்தில் நிறுத்தி
தன் சிந்தையெல்லாம் ஓவியத்தில் நிறுத்தி
பார்த்துக்கொண்டு இருக்கிறது
வளர்ந்து பறந்து தொலைந்திடாத
ஒரு குழந்தை...

கொஞ்ச நேரத்தில்
தனக்கு பசிக்கும் போது
மறக்காமல் சில மீன்களை வரையும்
வளர்ந்து பறந்து தொலைந்திடாத
அந்தக் குழந்தை...


வியாழன், 13 ஏப்ரல், 2023


உடன்பிறந்த மொழி
உயிர் உணரும் மொழி
தாய்மொழி எனக்குத் தமிழ்மொழி...

அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துகள்




தவறை தனதாக்கிக் கொண்டேன்
தன்னைத் தானே மன்னித்தேன்
இனி கல்லெறிந்தால் மலர் கொடுப்பேன்...


புதன், 12 ஏப்ரல், 2023


காலம் கடந்து சொன்ன வார்த்தைகள்
காலம் கடந்து கேட்கும் காதுகள்
காலம் கடந்து ஏமாறும் இதயம்

ஆனாலும்
காலம் கடந்து வாழ்வதுவே வெற்றி
மறந்து மறைந்து இருப்பதுவே சொர்க்கம்...


செவ்வாய், 11 ஏப்ரல், 2023


நான் நினைக்கும்மாதிரி நீயில்லை
நீ நினைக்கும்மாதிரி நானில்லை
நாம் நினைக்கும்மாதிரி நாமில்லை

நினைக்கும்மாதிரியும்
நினைக்காதமாதிரியும்
கலந்திருக்கிறது தெய்வம்

ஒரு மலர்
நினைத்தமாதிரியும்
நினைக்காதமாதிரியும்
மலர்ந்து மணம் வீசுகிறது...


திங்கள், 10 ஏப்ரல், 2023


நான் பார்ப்பதைத்தான்
இப்போது நீயும் பார்ப்பாய்
என் கண்ணே கண்மணியே...


ஞாயிறு, 9 ஏப்ரல், 2023


வெளிச்சம் விரும்பாத பூனையை
வெளிச்சம் விரும்பும்
பூனை போல் பதுங்கிப்பதுங்கி
மெல்லமெல்ல நெருங்கும்...

கண்டும் காணாமல் பூனை
இருளிலேயே கிடக்கும்
தொட்டுத் திரும்பும் வெளிச்சம்
திரும்பக் காணத் தவிக்கும்...


சனி, 8 ஏப்ரல், 2023


காக்கை என்றாலே
வடைக்கு தான் காத்திருக்குமா?
காதலில் காத்திருந்த காக்கைகளை
நானும் காத்திருக்கையில் பார்த்திருக்கிறேன்...

பக்கத்தில் இல்லாத பூக்களை
கற்பனையில் கண்டு
தூரத்தில் இல்லாத அவளை
கண்களில் கொண்டு
கரையாமல் காத்திருந்த காக்கைகளை
நானும் காத்திருக்கையில் பார்த்திருக்கிறேன்...


வெள்ளி, 7 ஏப்ரல், 2023


கை பிடித்து ஆட
காற்று இருக்கிறது
மரம் செடிகளின் நடனம்
அழகாய் இருக்கிறது...



வியாழன், 6 ஏப்ரல், 2023


தானே தேய்ந்து
தானே வளரும்
நான்தான் அந்த நிலா...


புதன், 5 ஏப்ரல், 2023


விழுந்த இறகு
அழுவதில்லை
மீண்டும் மீண்டும் பறக்கிறது...


செவ்வாய், 4 ஏப்ரல், 2023


மேகம் கலைத்து விளையாடும் தென்னைகள்
எண்ணங்கள் கலைத்து
நான் எனும் என்னையும் கலைத்து
வான் காட்டுகிறது...



திங்கள், 3 ஏப்ரல், 2023


எல்லா இலைகளும் நடனம் ஆடும்
புதைந்து எழுந்த விதை
சொல்லித் தந்தது...



ஞாயிறு, 2 ஏப்ரல், 2023


கொடி பற்றி ஏறும்
இல்லை தரையில் படரும்
எது நடந்தாலும் மலரும்

நாமும் மலர்வோம்
எது நடந்தாலும் தான் என்ன...