செவ்வாய், 14 மார்ச், 2023


குருவி மாதிரி
குட்டிக் கவிதைகள்
பருந்து மாதிரி
பெரிய கவிதைகள்
என்றேதும் கிடையாது

வானத்தில் வாழும்
நிமிடங்கள் எல்லாமே
கவிதைகள் தான்

சிலந்தி வலைக்கும்
பறவை கூட்டிற்கும்
இடம் தரும்
குடிசை வீடுகள்
கவிதை தான்

கிறுக்கு
கொஞ்சம் இருந்தாலே
கவிதை தான்


செருப்பு
அறுந்து போகாதவரிடம்
செருக்கு
அறுந்து போகாதிருக்கும்

சந்தேகம் என்றால்
சொல்லிப் பார்
உன் செருப்பறுந்த சங்கதியை

விருந்துண்ட
அவன் காதுகள்
மெல்லச் சிவக்கும்

உன் கண்களுக்குத் தெரியாமல்
அது
அப்படித்தான் சிரிக்கும்


எதுவும் முளைப்பதற்கு
காலம் அவசியம்

காத்திருந்தால்
சம்பவங்கள் மீது
சொற்கள் முளைக்கும்

காத்திருந்தால்
சொற்கள் மீது
கவிதை முளைக்கும்

காத்திருந்தால்
மின்னல் முளைக்கும்
சொற்கள் முளைக்கும்
கவிதை முளைக்கும்

காத்திருந்தால்
காதல் முளைக்கும்
தாடி முளைக்கும்
கவிதை முளைக்கும்

காத்திருந்தால்
கனவு முளைக்கும்
இரவு விழிக்கும்
கவிதை முளைக்கும்


விளையாட
நேரம் பார்த்து
காத்திருந்தது

விடுமுறைக்கு
தேதி கிழித்து
காத்திருந்தது

வாடகைக்கு
சைக்கிள் எடுக்க
காத்திருந்தது

நெல்லிக்காய்கள்
காய்க்கும் வரை
காத்திருந்தது

ஒலியும் ஒளியும்
பார்க்க பக்கத்து வீட்டில்
காத்திருந்தது

நிலவைப் பாம்பு
முழுங்கக் காணக்
காத்திருந்தது

தீபாவளிக்கு
பட்டாசு வாங்கி
காத்திருந்தது

புத்தாடை வாங்க
டெய்லர் கடையில்
காத்திருந்தது

கறிக்குழம்பு
ஆகும் வரை
காத்திருந்தது

ரஜினி படம்
முதல் நாள் பார்க்க
காத்திருந்தது

கல்லூரிக்கு
பள்ளி நாட்களில்
காத்திருந்தது

நண்பனுக்கு
கடைத் தெருவில்
காத்திருந்தது

காதலிக்கு
எந்த நேரமும்
காத்திருந்தது

முதல் சம்பளத்தை
வாங்கி எண்ணக்
காத்திருந்தது

முழுச் சம்பளத்தை
அம்மா கையில் கொடுத்து
காத்திருந்தது

காத்திருந்தது எல்லாமே
கனவு ஆனது
கவிதை ஆனது


கல்யாணம்
ஆகும் வரை
காத்திருந்தது

பிறகு
காத்திருக்க முடியாமல்
மாறிப் போனது

குறித்த நேரத்தில்
குறித்த எல்லாமும்
நடக்கச் சொன்னது

குறி தவறிடாது
இருப்பதற்கு
இலஞ்சம் புகுந்தது

கூவம் நதி
நாறும் படி
விதி மாறியது

குப்பை மேடுகள்
வசதிக்கேற்ப
இடம் மாறியது

காத்திருக்காத
ஒரு கூட்டத்திற்காக
உலகம் மாறியது


சிறகுகள் இல்லாத
வானம் செல்லாத
பறவையானது கவிதை

கவிதை மாறியது
கலவரம் ஆகியது பூமி
வேடிக்கை பார்க்கிறது சாமி

கண்ணுக்கு தெரியாமலிருந்து
வாழ வைத்தது
அன்று சாமி

கண்ணுக்கு தெரியாமலிருந்து
வாழ்வை அழிக்கிறது
இன்று கிருமி

சாமியும் கவிதை
கிருமியும் கவிதை
நாளையும் கவிதை

கிறுக்கு
கொஞ்சம் இருந்தாலே
கவிதைதான்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக