மெத்த பொம்மைகள்
வைத்து விளையாடும் பிள்ளைகள்
ஒத்த பொம்மையும் இல்லாமல்
தனித்து விளையாடும் பிள்ளைகள்
பொம்மையிலும் இன்மையிலும்
விளையாட்டு கூடி விளையாடும்
விளையாட்டு உருவமில்லாதது
விளையாட்டு காலமில்லாதது
கடவுள் விளையாட்டா?
காலம் விளையாட்டா?
கண் பார்க்க முடியாது
கடைசிவரை தெரியாது
விளையாட்டு ஒளிந்து விளையாடும்
இதுவரையில் கண்டதில்லை
மறைந்தே விளையாடும்
விளையாட்டை கைப்பிடிக்க முடியாது
விளையாட்டு கை பிடித்தால்
விளையாடலாம்...
எந்த விளையாட்டும் விளையாட்டு
கோல்ஃப் பந்து கோலி குண்டு
பேதம் இல்லை எல்லாம் ஒன்று
சோப்பு நீர்க் குமிழிகள் ஊதி
ஓ...என்றுக் கத்திப் பாடி
உன்னோடும் விளையாடும்
ஊராருடனும் விளையாடும்
காற்றோடும் விளையாடும்
கரைந்தும் விளையாடும்
விளையாட்டு விளையாடும்
கவி பாடும்
நடனம் ஆடும்
யார்யாருடனோ பேச வைக்கும்
யாரும் இல்லாதும் பேச வைக்கும்
மலையில் ஏற்றும்
குழியில் தள்ளும்
அன்பு செய்யும்
அடித்தும் கொல்லும்
விளையாட்டு விளையாடும்
அன்னையாய் காதலியாய்
தெய்வமாய் அழகிய பேயாய்
நண்பனாய் பகைவனாய்
ஞானியாய் பித்தனாய்
ஒளியாய் இருளாய்
அருளாய் சாபமாய்
எதிலும் நுழைந்தாடும்
விளையாட்டு விளையாடும்
வீழும் இறகோடு
உதிரும் சருகோடு
சரியும் மண்ணோடு
புரளும் கல்லோடு
எரியும் விறகோடு
மிதக்கும் படகோடு
பறக்கும் கூந்தலோடு
விளையாட்டு விளையாடும்
மறைந்தே விளையாடும்
விளையாட்டை கைப்பிடிக்க முடியாது
விளையாட்டு கை பிடித்தால்
விளையாடலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக