சனி, 31 டிசம்பர், 2022


சினிமா கூத்திலோ
கம்பன் பாட்டிலோ
எட்டையபுரம் ஏட்டிலோ
வாழ்வில் ஒளிந்து கொள்வது விளையாட்டு

காரின் பின்னாலோ
தேரின் பின்னாலோ
நண்பன் பின்னாலோ
குழந்தை ஒளிந்து கொள்வது விளையாட்டு

ஊனிலோ
மண்ணிலோ
வானிலோ
உயிர் ஒளிந்து கொள்வதும் விளையாட்டு

நாளும்
பொழுதும்
நாமும்
விளையாட்டு இசைந்து தலையாட்டு...


வெள்ளி, 30 டிசம்பர், 2022


கடல் முடியும்
வான் முடியும்
அந்த இடத்தினில்தான்
உன் நினைவு தொடங்கும்

கடல் மறையும்
வான் மறையும்
நான் மறையும் வரை
உன் நினைவுகள் நிரம்பும்...


வியாழன், 29 டிசம்பர், 2022


தனக்குத் தானே பேசிக் கொள்கிறேன்
தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறேன்
என்று நீ நினைக்கிறாய்

எனக்குள் உன்னோடு தான் பேசுகிறேன்
எனக்குள் உன்னோடு தான் சிரிக்கிறேன்
என்பதை எப்போது அறிவாய்...


புதன், 28 டிசம்பர், 2022


பைத்தியம் முற்றாமல் போனால்
பாதியிலே முறிந்துவிடும் உறவு

தெளிந்த ஒன்று
விலகிவிடும்

தெளிவான இரண்டு
சேரவே சேராது...

பைத்தியக்கார அம்மா
பைத்தியக்கார அப்பா
பைத்தியக்கார நண்பன்
பைத்தியக்கார உடன்பிறப்பு
பைத்தியக்கார காதலி
இத்தனையும் கிடைக்கப்பெற்ற
பாக்கியவான் பெரும் பைத்தியக்காரன்...

தெளியத் தெளிய
பிறக்கிறது
மகத்துவமான பைத்தியம்

உறவுப் பைத்தியம் முற்றாமல்
துறவுப் பைத்தியம் துளிராது


செவ்வாய், 27 டிசம்பர், 2022


குழந்தையை குழந்தையாகவே
வளர்க்க முடியாமல் ஆளாக்கித் தோற்று
கடவுளை வேண்டி கதறுகிறான் மனிதன்
கடவுள் மீண்டும் மீண்டும் பிறந்து வருகிறார்...


திங்கள், 26 டிசம்பர், 2022


கலப்படம் இல்லாத கலைமனம்
கடவுளுக்கும்
குழந்தைக்கும்

சிருஷ்டிக்கும்
ரசிக்கும்
புதைக்கும்...


ஞாயிறு, 25 டிசம்பர், 2022


கவிதை பிடிக்குமா
என்னைப் பிடிக்குமா
என நீ கேட்டால்
பைத்தியம் பிடிக்கிறது...

பிடித்தது எல்லாம் நீ
கவிதை நீ
பைத்தியம் நீ
தீ நீ
சாம்பல் நான்


சனி, 24 டிசம்பர், 2022


சிறுவன் சுற்றும் குடையில்
விழுந்த மழைத்துளிகள்
சுவர்க்கத்தில் விழுகின்றன...


வெள்ளி, 23 டிசம்பர், 2022





பச்சை வானில்
முழு நிலவு
தேய்கிறது வளர்கிறது
போதும் எழுந்திரு என்கிறாள்
நிலவை சமைத்த அம்மா
இரவு முழுக்க நிலவு வேண்டும்
அடம்பிடிக்கும் பிள்ளை...

உணவைக் கொஞ்சம்
கனவைக் கொஞ்சம்
கலந்து கொஞ்சம் கொஞ்சமாக
தின்னும் குழந்தைகள்...


வியாழன், 22 டிசம்பர், 2022


உண்மையைக் கடந்து செல்லும்
பொய்மைக்கு
இரண்டு கால்கள்
இரண்டு கண்கள்
ஆறு அறிவு...


புதன், 21 டிசம்பர், 2022


அழுதாலும்
வாழ்க்கை போல் இல்லை
வேறு நகைச்சுவை...


செவ்வாய், 20 டிசம்பர், 2022


கடுங் குளிரிலும்
கடும் அனலிலும்
படுத்துக்கொண்டிருக்கும்
சாலையோரக் குழந்தைகளுக்கு
உறக்கம் கடவுள்...


திங்கள், 19 டிசம்பர், 2022


நாளெல்லாம் சிறகசைத்து
பறவையெல்லாம் பரிதவித்து
திசையெல்லாம் அலைந்து திரிந்து
அலகின் அளவே தினமும் விருந்து

நாளெல்லாம் துடுப்பசைத்து
மீனெல்லாம் துடிதுடித்து
கடலெல்லாம்  நனைந்து தவழ்ந்து
துளி எனவே வயிறு நிறைந்து

நாளெல்லாம் மனதசைத்து
மனிதரெல்லாம் படபடத்தது
உலகெல்லாம் இயற்கை கவர்ந்து
மலை மலையாய் மிச்சம் குவிந்து

பறவையாய் மீனாய் வாழும் சிலரை
இயற்கையை அழிக்கும் குணமிலாத தூயவரை
குறவரை உழவரை லாபம் கருதாதோரை
புனர்வாழ்வு தருவதாய் அருள்வதாய்
உரைப்பதும் நினைப்பதும் உகந்ததாய் இல்லையே...

உடல் உழைத்து உயிர் வாழ்ந்து
புண்ணியம் சேர்த்து தலைமுறைகள் சேர்ந்து
ஒன்றுபட்ட உறவை ஒப்பில்லாத அன்பை
நாமும் கற்க வேண்டும்
இதைப் பாடமாக்க வேண்டும்


ஞாயிறு, 18 டிசம்பர், 2022


இருபது வருட அனுபவசாலி
கால்பந்து உலகின் மந்திரவாதி
இருபத்திரண்டு கால்களையும்
தடுக்கின்ற இரண்டு கைகளையும்
தடுமாறச் செய்திடும் தந்திரசாலி
உலகக் கோப்பை வென்ற  பலசாலி
மாரடோனாவின் மாணவன்
அர்ஜென்டினாவின் தலைமகன்
லியோனல் மெஸ்ஸி நல்ல திறமைசாலி


சனி, 17 டிசம்பர், 2022


ஸ்விகி ஸ்விகி ஓடி வா
நில்லாமல் ஓடி வா
சந்து பொந்து நுழைந்து வா
குஷ்பு இட்லி கொண்டு வா
வாசல் வந்து வை
டெலிவரி மட்டும் செய்...

வெள்ளி, 16 டிசம்பர், 2022


கலங்கித் தெளிந்த நீரில்
எதையும் திருத்தம் செய்யாமல்
அப்படியே வரையப் பார்க்கிறது இயற்கை

ஒரு சிறிய இலையேனும்
ஒரு சிறிய இறகேனும்
அதற்குள் உதிர்ந்திருக்கும்...

கலைந்த நீரும் ஓவியம்
கலையும் மேகம் ஓவியம்
காண்பதெல்லாம் ஓவியம்

துள்ளியமாய் வரையும் இயற்கை
இரவெல்லாம் வரைகிறது
இமைகள் தாண்டி துயிலை கனவை...



வியாழன், 15 டிசம்பர், 2022

 


நடு ஜாமத்தில்
தெரு நாய்கள் பேசிக்கொள்கின்றன
எந்த ஜாமத்திலும் மனிதர்கள் கூடிப் பேசாததை...


புதன், 14 டிசம்பர், 2022


செல்வந்தர்கள் தான்
ஆனால் அனுபவத்தில்
பரம ஏழைகள்...

செவ்வாய், 13 டிசம்பர், 2022


வார்த்தை தீர்ந்து
வாஞ்சை தீர்ந்து
ஆன்மா பேசத் தொடங்கியது
மௌனம் கேட்கத் தொடங்கியது...


திங்கள், 12 டிசம்பர், 2022


உயிரோடு எதையும் தின்னாத
பிணந்தின்னிக் கழுகு
கடவுள்...

உயிர் போன உடலைத் தின்று
அதன் ஆன்மாவை
முத்தமிட்டு வழியனுப்பும்

என்னையும் முத்தமிடுவாயா
பிணந்தின்னிக் கழுகே
என் தேவதையே...

ஞாயிறு, 11 டிசம்பர், 2022


கால எந்திரத்தில்
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே உண்டு
ஒரு நேரம், ஒரு மணியோசை...


சனி, 10 டிசம்பர், 2022


தனிமை
ஒரு குறுக்குவழி
உன்னிடம் உடனடியாகக் கூட்டிச் செல்லும்...


வெள்ளி, 9 டிசம்பர், 2022


மலைகள் கடந்து
கடல்கள் கடந்து
கரையைக் கடந்து
வலுவிழந்த புயல்
உன்னைக் கடந்து இருக்கக்கூடாது...


வியாழன், 8 டிசம்பர், 2022


திரு மறைந்து விட்டான்
வெள்ளாடையோடு நிற்கிறாள்
வானில் தன்னந்தனியாக மதி...


புதன், 7 டிசம்பர், 2022


நீரை அருந்தும் பறவையை
வானில் பார்த்தேன்
வானம் அருந்தும் பறவையை
நீரில் பார்த்தேன்

என்னை அருந்தும் உன்னை
நான் பார்க்கிறேன்
உன்னை அருந்தும் என்னை
நீ பார்க்கிறாயா...


செவ்வாய், 6 டிசம்பர், 2022


கூடிக் கலந்து தணிந்தது
திரியும் தீபமும்
நினைவில் நீங்காமல் எரிகிறது...


திங்கள், 5 டிசம்பர், 2022


தலை மேல் ஒரு கடல் இருக்கிறது
அலையலையாய் மேகங்கள் வருகிறது
பாதங்கள் நனைந்திட துடிக்கிறது
பார்வையில் இரு துளி விழுகிறது...

ஞாயிறு, 4 டிசம்பர், 2022


உறங்க மறுக்கும் கண்களுக்கு
இரவை பிடிக்குமா?
அவளை பிடிக்குமா?

இரவும் இல்லை
அவளும் இல்லை
பகல் வந்து நிற்கிறது

பகலில் இமைகளை மூடி
கண்கள் எதனை பிடிக்கிறதோ...
இரவா? அவளா?


சனி, 3 டிசம்பர், 2022


தனிமையில் உறங்கும் போது
கதவு கட்டில் நிலைக் கண்ணாடி
எல்லாமே உறங்குகிறது

யார் வந்து
கதவைத் தட்டினாலும்
எல்லாமே எழுகிறது

மெல்லத் தட்டும் போது
செல்லமாய் தட்டி எழுப்பும்
அப்பாவும் அம்மாவும்

ரகசியமாய் தட்டும் போது
கண்ணத்தைக் கிள்ளி
மிச்ச தூக்கத்தையும் பறிக்கும் ஒருத்தி

அவசரமாக தட்டும் போது
அவசர அவசரமாக இயங்கும்
சமூகத்தில் எவன் ஒருவனோ

ஓங்கித் தட்டும் போது
ஒரு வேளையும் இல்லை
ஒன்றாய் இருக்க வரும் நண்பன்

யார் வந்து
கதவைத் தட்டினாலும்
எல்லாமே எழுகிறது

நிலைக் கண்ணாடியும் கட்டிலும்
சிலரை மட்டுமே பார்க்கும்
நானும் கதவும் மட்டும்
பலரைப் பார்த்ததுண்டு
நான் பார்க்காதவரும் உண்டு
கதவு பார்க்காத எவருமில்லை

தனிமையில் வாழ்ந்தாலும்
தினம் வீடு திரும்புகிறேன்
அங்கே எனக்காக
ஒன்றாய் தூங்கி
ஒன்றாய் எழுந்திட
கதவு கட்டில் நிலைக் கண்ணாடி
எல்லாமே காத்து இருக்கிறது...

நான் வந்து
கதவைத் தட்டும் போதும்
அவைகள் எல்லாமே எழுகிறது

நானும் இல்லாத
அந்த தனிமையை
அவைகள் மட்டுமே அறியும்

அவையும் இல்லாத
அந்த தனிமையை
அகிலம் மட்டுமே அறியும்


வெள்ளி, 2 டிசம்பர், 2022



குழந்தையின் கற்பனையை
ஆசிரியர்கள் அறிவதேயில்லை
அறிவே இல்லை எனச் சொல்லி
அறிவியலை உரைக்கிறார்கள்

அந்த அறிவில்லாத கற்பனையில்தான்
ஆப்பிள் விழுந்தது அறிவியலானது
குழந்தைகளின் கற்பனையில்
எண்ணிலா விதிகள் பூக்கிறது உதிர்கிறது...


வியாழன், 1 டிசம்பர், 2022


சிறுவர்கள் தங்களைப் பார்த்து
சிரிக்காமல் கடந்து செல்பவர்களை
பேய் என்று எண்ணுகிறார்கள்

நெடுநாட்கள் நான் பேயாக இருந்ததை
ஒருநாளில் சிரித்த போது
என்னிடம் சொன்னார்கள்...