புதன், 30 நவம்பர், 2022


கண்ணீர் வார்த்து வேண்டுகிறாய்
கடவுள் பார்த்துச் சிரிக்கிறார்
உள்ளம் திறந்து எடுத்துக்கொள்
உன்னில் முழுவதும் நிரப்பிக்கொள்...


செவ்வாய், 29 நவம்பர், 2022


நீ அடைந்த உயரம்
எனக்குத் தெரியாமல்
நான் அடைந்த உயரம்
உனக்குத் தெரியாமல்
நாம் கூடியிருப்பது
யாருக்கும் தெரியாமல்
மிக நெருக்கமாகவும்
வெகு தூரமாகவும்
ஒரே தருணத்தில்
ஒருங்கிணைவது அற்புதம்...

இதை
காமம் என்கிறாய்
இல்லை
கவிதை என்கிறேன்

மௌனம்
இரண்டையும்
ஒன்றாக்கியது...


திங்கள், 28 நவம்பர், 2022


கொடுப்பதை விடச் சிறந்தது
தேவைக்கு மட்டும் எடுப்பது
நித்தமும் சொல்லித் தருகிறது சுவாசக் காற்று


ஞாயிறு, 27 நவம்பர், 2022


தேனீர் காத்திருக்கும் சிலருக்காக
தேனீர் சிலரைப் பருகும்
கொஞ்சம் கொஞ்சமாய் உருகும்...


சனி, 26 நவம்பர், 2022


உயிர் பிரியும் போது
நினைவில் வருபவள் காதலி
இப்போது கேட்டால் யாரைச் சொல்வேன்


வெள்ளி, 25 நவம்பர், 2022


பத்திரகாளி வேடமிட்டவள்
பத்திரமாய் வீடு வந்தால்

வேடமிட்டால்தான்
இங்கு வாழ்க்கை

உள்ளும் வெளியும்
எல்லா காக்கையும்
ஒரே போல
எல்லா எறும்புகளும்
ஒரே போல...

உள்ளே
ஒரே போல இருக்கும்
மனித முகங்கள் தான்
வெளியே
ஒரே போல இல்லாமல்
வேடமிட்டு அலைகிறது

உலக நாடக மேடையில்
மனிதன் மட்டுமே வேடதாரி


வியாழன், 24 நவம்பர், 2022


தொடாத உயரங்களை
தொட்டுப் பார்க்கிறேன்
உன்னில்...

அறியாத ஆழங்களை
முத்தமிட்டு அளக்கின்றேன்
உன்னில்...

உயரமும் ஆழமும் முடியவில்லை
என்னையும் இடையினில் காணவில்லை
உன்னில்...


புதன், 23 நவம்பர், 2022


கடந்த காற்றும் வருந்தியது
நீ திரும்பிப் பார்க்க ஏங்கியது
பாதை மாறி பின்தொடர்கிறோமே
கொஞ்சம் திரும்பிப் பார்த்தாலென்ன...


செவ்வாய், 22 நவம்பர், 2022


முகில்கள் முட்டும் போதும்
இதழ்கள் முட்டும் போதும்
மின்னல் எட்டிப் பார்க்கிறது



திங்கள், 21 நவம்பர், 2022


நனைந்த இதழ்களைக் காண்கையில்
நனைத்த இதழ்களின் நியாபகம்
இமைகள் மெல்ல நனைகின்றது...


ஞாயிறு, 20 நவம்பர், 2022


ஒற்றைக் காலில் தவமிருந்து
கொக்கு பிடித்துச் செல்கிறது
கால்கள் இல்லாத மீனை


சனி, 19 நவம்பர், 2022


அழும் போது அழும்
சிரிக்கும் போது சிரிக்கும்
குழந்தைகள் இப்படித்தான் தியானிக்கும்...


வெள்ளி, 18 நவம்பர், 2022


பிள்ளை அடித்து
அழும் தாய்க்கு
பிரசவ வலி நியாபகம்...

பிள்ளையை அடித்து
அழும் தாய்க்கும்
பிரசவ வலி நியாபகம்...


வியாழன், 17 நவம்பர், 2022


நான் மட்டும் என்ன செய்வேன்...
கட்டி அணைப்பேன்
முத்தம் கொடுப்பேன்
ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தையைப் போல்
உன்னை முகமெல்லாம் அப்பிக் கொள்வேன்

பூசிக் கொள்வதற்கும்
அப்பிக் கொள்வதற்கும்
இடையில் இருக்கிறது
ஏழு கடல்
ஏழு மலை...


புதன், 16 நவம்பர், 2022



நதியும்
ஒளியும்
காற்றும்
மலரும்
வானும்
நானும்
ஒன்றாய் ஆனோம்

என்னைப்
பிரித்தெடுத்துக் கூட்டிச் செல்ல
பக்கம் வருகிறாள்
முத்தம் தருகிறாள்
ஒரு தேவதை

மொத்தமும் காணாமல் ஆகிறது
நீ மட்டும்தான் இப்போது
எல்லாம் திரும்பக் கிடைப்பது எப்போது...



செவ்வாய், 15 நவம்பர், 2022


எட்டு முறை சிறகசைத்து
கிட்ட வந்து கிளைக்கு முத்தம்
மீண்டும் எட்ட வந்து
எட்டு முறை சிறகசைத்து
கிட்ட வந்து கிளைக்கு முத்தம்
இலைகள் பூக்கும் கிளையில்
பூக்கள் பூப்பது இப்படித்தான்
பட்டாம்பூச்சியைப் போலத்தான்
நானும் முத்தமிடுகிறேன்
நினைவில் நீயும் பூக்கிறாய்...


திங்கள், 14 நவம்பர், 2022


முத்தம்
எனும் உடன்பாடு
கொடுப்பதும் பெறுவதும்
ஆன நிலைப்பாடு
பலருக்கும்
ஏனோ முரண்பாடு
எல்லாருக்கும்
இல்லை ஒருமைப்பாடு
இச்... இச்...
பின்னணி கூப்பாடு
மௌனம்
கூடும் பிற்பாடு
இறப்புவரை
இந்த படாதபாடு
தூரம் மறையும்
உதடோடு
தூரம் இருந்தாலும்
கண்ணோடு
வாழ்வின் முற்றுப்புள்ளி
முடியுமா முத்தத்தோடு...


ஞாயிறு, 13 நவம்பர், 2022


முத்தம் இல்லாமல்
வாழ்பவர்களுக்கு
வேறு வேறு பித்தம்...


சனி, 12 நவம்பர், 2022


உச்சி முகர்ந்து
முத்தம் தந்த உதடுகளை
அன்னாந்து பார்க்கிறேன்
நீலம் பூத்து இருக்கிறது

விஷம உதடுகள்
மௌனப் புன்னகை பூக்கிறது
பறக்கும் முத்தம் தருகிறது
அதோ மேகமாக வருகிறது...



வெள்ளி, 11 நவம்பர், 2022


இடைவெளி பெரிதாக இருந்தாலும்
இடைவிடாது பேசிக்கொண்டு இருக்கையில்
இடையிடையே நின்று போகிறது நம் சப்தம்
அந்த இடைவெளியில் நெருங்கித் தருகிறாய் முத்தம்...

வியாழன், 10 நவம்பர், 2022


இதழ்களில் சூட
இதழ்களே வேண்டும்
இதயத்தோடு வேண்டும்...


புதன், 9 நவம்பர், 2022



காத்திருக்கும் உதடுகளுக்கு
முத்தம்
மின்னல்

பூத்திருக்கும் இதழ்களுக்கு
முத்தம்
தென்றல்


செவ்வாய், 8 நவம்பர், 2022


உதடுகள் பிளந்து
தரும் முத்தம்
பகல்
கண் விழிப்பு

இதழ் குவித்து
தரும் முத்தம்
இருள்
கண் மூடல்

இமை உதடுகளில்
இரவும் பகலும்
இடைவிடாது முத்தம்...


திங்கள், 7 நவம்பர், 2022

ஞாயிறு, 6 நவம்பர், 2022


ஆயிரம் முத்தங்கள்
கடினமில்லை
முதல் முத்தம்தான்...


சனி, 5 நவம்பர், 2022


ஹிட்லரின் முத்தமும்
புத்தரின் முத்தமும்
துளி நேரத்தில் முத்தமே...



முத்தம் மட்டும்
இல்லையென்றால்
யுத்தம் செய்தே மறைந்திருப்போம்

வியாழன், 3 நவம்பர், 2022


உயிர் நிச்சயமில்லை
முத்தக் கடலில்
முத்தெடுத்துத் திரும்பும் வரை...


புதன், 2 நவம்பர், 2022

 


உடைந்து அழுத குழாயிற்கு
கடைசித் துளி நீண்ட நேரமாக கொடுத்தது
மரண முத்தம்...


செவ்வாய், 1 நவம்பர், 2022

மறு பிறப்பு இல்லாத
முத்ததத்திற்கு
அதிக உச்சம்...