வியாழன், 19 ஜூன், 2025


வேர்க்கடலை பர்ஃபி

கமரக்கட்டு

ஆரஞ்சு மிட்டாய்

இஞ்சி மரப்பா

கண் தெரியாதவர்கள்

ரயிலில் தொடர்ந்து ஓதிய மந்திரங்கள்... 


எல்லோர்க்கும் புரியாத மந்திரங்களுக்கு

பொன்னும் பொருளும் ஏராளமாக

பார்வை இல்லாதவர் பாடலுக்கு

ஏன் தர மறுக்கிறாய் தாராளமாக


அடக் கடவுளே

நீயும் ஏனடா

சில்லரைப் பயலாய் இருக்கிறாய்

புதன், 18 ஜூன், 2025


சுவற்றில் குழந்தைகள் வரையும் ஓவியங்களை

படிக்கத் தெரியாமல் நாம் வைத்தப் பெயர்தான்

கிறுக்கல்


மனதில் சிலர் வரையும் ஓவியங்களை

பார்க்கத் தவறும் நாம் வைத்தப் பெயர்தான்

கிறுக்கு

செவ்வாய், 17 ஜூன், 2025


தன்னைத் 

தானே கைவிட்ட நிலையில்

கண்ணீரை எப்படித் துடைப்பது... 

திங்கள், 16 ஜூன், 2025


உனக்கும் எனக்கும் இடையில் இருக்கும் நரகத்தை

ஒரு முத்தம் தந்து மாற்றினால் தான் என்ன

சொர்க்கமாக... 

ஞாயிறு, 15 ஜூன், 2025

"காதல் கண்ணாடி"



உடைய உடைய
நிறைய நிறையப் பெருகும்
உனது பிம்பமும், எனது துன்பமும்...

சனி, 14 ஜூன், 2025


உன் சமூகம்

என் தலையைத் தான் துண்டித்தது

உன் நினைவுகள் எப்போதும் என்னோடு தான்...

வெள்ளி, 13 ஜூன், 2025


நத்தையாக மாறத் தெரிந்திருக்கிற குழந்தைக்கு

இந்த அகிலமே

ஒளிந்து கொள்ளும் கூடாகிறது... 

வியாழன், 12 ஜூன், 2025


உயிர் 

பிரபஞ்சம் ஆவது

மரணம்... 


பிரபஞ்சம்

தூவும் உயிர்

ஜனனம்... 

புதன், 11 ஜூன், 2025


கொஞ்சம் பொறு

கொஞ்சம் பொறு

எப்போதும்

கொஞ்சம் பொறு... 

இறக்கும் தருவாயிலும் 

கொஞ்சம் பொறு... 

பிறகு எப்போதுதான்

வாழ்வது... 


செவ்வாய், 10 ஜூன், 2025


இலைகள் இல்லாத

இன்னும் உதிராத

ஒரு பூவை எனக்குத் தெரியும்


கண்கள் சிமிட்டும்

இதழ்கள் சுழிக்கும்

அத்தனை அழகாய் இருக்கும்


பட்டினியாய் கிடக்கையில்

பசி ஆற்ற

முத்தம் தரும்


நான் தனித்து இருக்கையில்

அந்த ஒற்றைப் பூ

தோட்டம் ஆகும்


இரவிலும் பூக்கும்

கனவிலும் பூக்கும்

என் வாழ்வெங்கும் கூட நடந்து வரும்... 

திங்கள், 9 ஜூன், 2025


எழுதப் பழகித் 

தவறு செய்கிறது குழந்தை

சமூகச் சிறைக்குள் வர... 


காதல் பழகித்

தவறு செய்கிறது குழந்தை

குடும்பச் சிறைக்குள் வர... 


சிறைக்குள் வந்து

சிறைக்குள் வந்து

சிறகுகள் வேண்டிடும் வாழ்க்கை... 

ஞாயிறு, 8 ஜூன், 2025


பட்டாம்பூச்சி பாடம் சொல்லித் தருகின்றது வெளியில்

குழந்தைகள் படாதபாடு படுகின்றன

பள்ளிச் சிறையில்... 

சனி, 7 ஜூன், 2025


ஒன்றை நினைப்பதற்குள்

நூறு நடந்துவிடுகிறது

ஒன்று நடப்பதற்குள்

ஆயிரம் நினைவுகள் கடக்கிறது... 


ஒன்றை நினைத்து ஒன்றே நடக்க

ஒன்று நடக்கையில் ஒன்றே நினைக்க

எத்தனை ஜென்மங்கள் தேவைப்படுமோ... 

வெள்ளி, 6 ஜூன், 2025


கொண்டாட்டம் உயிருடையது

துக்கம் உயிரற்றது

மௌனத்திலும் கொண்டாட்டம் உண்டு

சப்தத்திலும் சங்கடங்கள் உண்டு

எல்லா பண்டிகையும் கொண்டாட்டமே

எல்லா பிரிவினையும் துக்கமே

உயிர்கள் அனைத்துக்கும்

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

வியாழன், 5 ஜூன், 2025


எரியும் விறகில்

உன் உதடு தெரிந்ததும்

தீக்குளித்தேன்... 


நினைவில் ஏமாற்றம்

கண்களில் நீரோட்டம்

உயிர் பிழைத்தேன்... 

புதன், 4 ஜூன், 2025


கனவில் கனவொன்று

தொடர் கனவாய் முடிகிறது

அடுத்து எப்போது

விடை சொல்லாமல் பிரிகிறது

வருத்தம் தான் என்றாலும்

பிரிவுகளே உறவுகளில்

பலம் சேர்க்கிறது


உடன் சேர்ந்து இருப்பதைவிட

நெருக்கமானது

உனைச் சேரத் துடிப்பது... 

செவ்வாய், 3 ஜூன், 2025


என் மீது உனக்கு இருக்கும் வெறுப்பும்

உன் மீது எனக்கு இருக்கும் வெறுப்பும்

நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பென்று

வேறு யாருக்கும் தெரியாது... 

திங்கள், 2 ஜூன், 2025


மௌனம் தாலாட்டிய ராஜா

ஞான புத்தன் சித்தார்த்தன்

மௌனத்தை தாலாட்டிய ராஜா

இசை சித்தன் ஞானதேசிகன்


எங்கள் இசைஞானி 

இளையராஜா அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ஞாயிறு, 1 ஜூன், 2025


தன்னம்பிக்கை என்ன பெரிய தன்னம்பிக்கை

தந்தை நம்பிக்கை இருக்கிறதே அதுதான் என் பெரும் நம்பிக்கை

தந்தை கைப்பிடித்துப் போன காலங்களில்

தந்தை கை இமையம் அளவு நம்பிக்கை

என்னைத் தூக்கிச் சுற்றும் அவர் கை

காண்பித்தது வடக்கை தெற்கை கிழக்கை மேற்கை

தோற்கையில் எல்லாம் ஜெயிக்கும் வேட்கை

ஊட்டி வளர்த்த தந்தை இருக்கும் வானத்தை

பார்க்கப் பார்க்கப் பெறுவேன் ஆசீர்வாதத்தை

நோக்க நோக்கப் பெறுவேன் பெரும் நம்பிக்கை

தன்னம்பிக்கை என்ன பெரிய தன்னம்பிக்கை

தந்தை நம்பிக்கை இருக்கிறதே அதுதான் என் பெரும் நம்பிக்கை...